கனிமொழி திமுக துணை பொதுச் செயலாளர் - கட்சிக்குள் பெண்கள் தலைமை அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கடைசி மகளான கனிமொழி திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக-வில் 5 துணை பொதுச் செயலாளர்கள் உண்டு. அதில் குறைந்தபட்சம் ஒரு பெண்ணும் ஒரு தலித்தும் இடம் பெறவேண்டும் என்பது கட்சி விதி. சமீப காலம் வரை துணை பொதுச் செயலாளராக இருந்த மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அந்தப் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினார்.
இதையடுத்து உருவான வெற்றிடத்தில் தற்போது கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் அணிக்கு தலைமை வகித்த அனுபவத்தோடு கருணாநிதி குடும்பத்தில் இருந்து ஒரு பெண்மணி இப்போது இப்போது துணைப் பொதுச் செயலாளர் ஆகியிருப்பதால், திமுக-வுக்குள் பெண்கள் உயர் பொறுப்புகளை நோக்கி முன்னேறுவது எளிதாகுமா?
திமுகவின் தலைவராக ஸ்டாலின் இருக்கும்போது துணை பொதுச் செயலாளராக அவரது தங்கை நியமிக்கப்பட்டிருப்பது அந்தக் கட்சியின் மீதான குடும்ப அரசியல் குற்றச்சாட்டை தீவிரப்படுத்துமா?
கனிமொழி நேரடி அரசியலில் 2007ஆம் ஆண்டு இறங்கியபோது அவருடைய பேச்சில் இருந்த தடுமாற்றங்கள் மெல்ல மறைந்து, இப்போது நாடாளுமன்றத்தில் அதிகம் குரல் கொடுக்கும் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.


2007ஆம் ஆண்டில் முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டபோது இருந்ததைவிட அரசியல் வாழ்வில் அவருக்கு ஏற்பட்டுள்ள முதிர்ச்சி, இப்போது மக்களவை உறுப்பினராக வெளிப்படுகிறது.
கவனிக்கப்படும் கனிமொழி
ஏற்கெனவே இரண்டு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருந்தாலும், 2019 தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினரானார். அதற்குப் பிறகு அவர் மீதான கவனம் முன்பைவிட அதிகரித்தது.

பட மூலாதாரம், Getty Images
ஸ்டாலின் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கட்சியினரிடையிலும் உதயநிதிக்கான ஆதரவு பேச்சுகள் அதிகரித்தன. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கனிமொழியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது, மக்களவை உறுப்பினராக அவருடைய பேச்சுகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது மட்டுமின்றி, தற்போது துணை பொதுச்செயலாளர் பொறுப்பு கிடைத்ததன் மூலம் உதயநிதியைவிட அவர் ஒரு படி மேலே இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
2ஜி ஊழல் வழக்கு போன்ற தடைகளைக் கடந்து, மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் சென்று அங்கே நன்கு கவனிக்கப்பட்ட எம்பிக்களில் ஒருவரானார். அவருடைய நாடாளுமன்ற உரைகள் கவனம் பெற்றன.
முன்னேறிய சாதிகளில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டபோது, அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அவர் செயல்பட்ட விதம் முதல் பிரதமரால் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு அந்தந்த மாநில மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலோ பெயரை வைக்கலாமே எனப் பேசியது வரை அவருடைய பல நாடாளுமன்ற செயல்பாடுகள் இணைய உலகில் டிரெண்டும் ஆகின.
இந்நிலையில் கனிமொழி புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது அவருடைய அரசியல் வாழ்வில் முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இது வெறும் நியமனப் பதவி, இந்தப் பதவிக்கு என்று தனியாக எந்த அதிகாரமும் இல்லை என்ற உண்மையும் இருக்கிறது.
கட்சிக்குள் பெண்களின் பங்கு அதிகரிக்குமா?
இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளிலுமே பெண்களின் பங்கு என்பது தலைமைகளில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. ஆனால், சமீபகாலமாக பெண்களுடைய பங்கு அரசியலில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலுமே தவிர்க்க முடியாத ஒன்றாக வளர்ந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
திமுகவிலும் பெண்ணியவாதியாக பெரியாரியவாதியாக இருக்கும் கனிமொழி தற்போது துணை பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வந்திருப்பது, கட்சிக்குள் பெண்களின் பங்கு மேம்படுவதற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இப்போது கனிமொழி இந்த அளவுக்கு கட்சிக்குள் வந்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. அவர் பெண்ணிய கருத்தாக்கங்களோடு செயல்படுவதால், இது திமுகவுக்குள் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரலாம். அவர் ஒரு பெண்ணாக மட்டுமின்றி, பெரியாரிய பெண்ணிய கொள்கையோடு இருப்பதால் மாற்றங்கள் நிச்சயம் வருமென்று எதிர்பார்க்கலாம்.
அதை மகளிர் அணியிலேயே பார்க்க முடிகிறது. அதோடு, இவர் நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே இந்தப் பதவிக்கு வந்திருப்பதால் இளம் தலைமுறை பெண்களுக்கு கட்சிக்குள் மட்டுமின்றி, கட்சிக்கு வெளியிலும் இது உத்வேகத்தைக் கொடுக்கலாம். அவர்கள் அரசியல்ரீதியாகப் பங்கெடுக்கும் ஒரு வாய்ப்பை இது உருவாக்கலாம்.
அதற்கு ஏற்ப வகையில் கட்சிக்குள்ளே பெண்ணிய கருத்துகளை எப்படி முன்னிலைப் படுத்துகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால், அதைச் செய்வார் என்று நம்பும் வகையில் தான் இருக்கிறது," என்று கூறுகிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஆய்வாளர் ஆனந்தி.
திமுகவில் பெரியளவில் பெண் தலைமைகள் ஏன் இல்லை?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் ஆதிக்கமும் அதிகமாக இருந்த சூழலில், எளிய மக்களோடு நெருக்கமாக இருந்த கட்சியான திமுக உருவாகும்போது அதற்குப் பல சவால்கள் இருந்தன. ஏற்கெனவே மிகவும் உறுதியாக இருந்த ஆதிக்கத்தை எதிர்த்து திமுக தொடங்கப்பட்டது.
ஆனால், அத்தகைய முற்போக்கு கொள்கைகளோடு தொடங்கப்பட்ட ஒரு கட்சி அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் பெண்களின் தலைமை என்பது கட்சிக்குள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லையே என்று கேட்டபோது, "உலகில் நன்கு வளர்ச்சியடைந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே ஒரு பெண் அதிபரை உருவாக்க முடியவில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர், முதலமைச்சர் என்று பெண் தலைவர்கள் வருவது இயல்பானது."
"திமுகவை பொறுத்தவரை இது தற்செயலான ஒரு விஷயம்தான். சாதியம், பிராமணியம், வடக்கின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேயிருக்க வேண்டிய தேவை இருப்பதால், யார் வலுவாகச் செயல்படுகிறார்களோ அவர்களை முன்னிறுத்துவது தேவையாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன்," என்கிறார் டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன் குறை.
மேலும், எப்போதும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டேயிருப்பதால் இதில் கவனம் செலுத்தப்படாமல் தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
குடும்ப அரசியல் குற்றச்சாட்டு
திமுகவில் தொடர்ந்து தமது குடும்பத்தினரையே கட்சிப் பொறுப்புகளில் ஸ்டாலின் கொண்டு வருகிறார் என்ற விமர்சனம் தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்படுவதிலும் குடும்ப அரசியல் விமர்சனம் வைக்கப்படுவது குறித்து ராஜன் குறையிடம் கேட்டபோது, "குடும்ப அரசியல் என்பதைவிட இதை ஒரு குறியீட்டு தலைமை என்று தான் சொல்ல வேண்டும். ஸ்டாலின் தலைவராகவே இருந்தாலும் அவர் நினைப்பது போல் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. பொதுமக்களிடையே இவர்தான் தலைவர் என்று ஒரு பிம்பம் தேவைப்படுகிறது.
அத்தகைய பிம்பமாக அவர் முன்னிறுத்தப்படுகிறார். மக்களிடையே அதற்கான வரவேற்பும் இருக்கிறது. அதேபோல், இப்போது கனிமொழியோ உதயநிதி ஸ்டாலினோ பொறுப்புகளுக்கு வருவது கட்சியாக எடுக்கப்படும் முடிவு. அதற்குக் காரணம் உலகளாவிய அளவில் புழக்கத்தில் இருக்கும் குறியீட்டு அரசியல் தான்," என்றார்.
"திமுகவை அரை நூற்றாண்டாக கருணாநிதி வழிநடத்தி வந்தார். அவருடைய பேச்சாற்றல், எழுத்தாற்றல், அரசியல் தலைமை ஆகியவற்றால் மக்கள் அவரை பெரிய வரலாற்று நாயகனாகப் பார்க்கிறார்கள்.
அவருடைய மகன், மகள் என்னும்போது, கட்சியில் ஒரு தொடர்ச்சி இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். ஒரு தொடர்ச்சி வேண்டும் எனக் கருதுவது மக்களிடையே இயல்பாக இருப்பது தான். ஆனால், இதை மட்டும் ஏன் தாக்கி விமர்சிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி," என்றார்.
மேலும், வாரிசு அரசியல் இல்லாத பாஜகவிலோ அதிமுகவிலோ நரேந்திர மோதியை எதிர்த்து யாருமே பேச முடிவதில்லையே, ஜெயலலிதாவை மீறி ஒருவரும் குரல் எழுப்ப முடியவில்லையே என்றவர், "திமுகவில் முதலமைச்சரைத் தாண்டி எத்தனை ஆளுமை மிக்க தலைவர்கள் உருவாகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு கட்சியில் வாரிசுகள் வருகிறார்களா, இல்லையா என்பதையும் தாண்டி, அதில் ஜனநாயக முறையிலான அணுகுமுறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்," என்று கூறினார் ராஜன் குறை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













