திமுக அமைச்சர் மீது தீண்டாமை குற்றச்சாட்டு - அடுத்தடுத்து எழும் சர்ச்சைகள்

பட மூலாதாரம், Facebook
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
தம்மைச் சந்திக்க வந்த நரிக்குறவர் சமூகத்தின் பிரதிநிதியை தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவமதித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல இலவச பேருந்து சேவை குறித்தும், பட்டியலின உள்ளாட்சி பிரதிநிதி ஒருவரை திமுக துணை பொதுச் செயலாளரும் மாநில அமைச்சருமான க. பொன்முடி பேசிய காணொளிகளும் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.
என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த குருவிக்கார இன மக்களை நரிக்குறவர் என்ற பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதி தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை பார்க்க சென்றபோது அமர இருக்கை கூட கொடுக்காமல் அவமதித்துவிட்டதாக குறவர் சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் சாதரண உடையில் அமர்ந்திருப்பது போன்றும் பிரதிநிதிகள் நின்று கொண்டு பேசுவது போன்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் அதேபோல அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நரிக்குறவர் இன மக்கள் போராட்டத்தின்போது தெரிவித்தனர்.


அமைச்சர் ராமச்சந்திரன் ஒரு மாத காலத்திற்கு முன்பு பெண் ஒருவரிடம் மனு வாங்கும் போது அவரை அடித்ததாக புகார் எழுந்தது. அந்த பெண்ணை தலையில் அடிக்கும் காணொளி வைரலானது. பின்னர் அவர் தம்மை அடிக்கவில்லை என்றும் அமைச்சர் தமக்கு உறவினர்தான் என்றும் அப்பெண்ணே ஊடகங்களில் மறுப்பு தெரிவித்தார்.
வைரலாகும் பொன்முடியின் பேச்சு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விஷயத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை 'ஓசி' என்று விவரிக்கும் சிறிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு அரசு விழா மேடையில் வைத்து நீங்கள் 'எஸ். சி' தானே என ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை பார்த்து அமைச்சர் பொன்முடி கேட்டதும் விமர்சனத்திற்குள்ளானது.
'நீங்கள் எஸ்.சி' தானே' என்று கேட்டு ''தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மகளிர் ஒருவர் ஊராட்சி ஒன்றியத் தலைவராகியுள்ளார் என்றால் அதுதான் திராவிட மாடல்,'' என பேசுவது போல அந்த காணொளி அமைந்திருந்தது.
சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் கே. என். நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த, மேயர் பிரியாவை ஒருமையில் அமைச்சர் கே. என். நேரு பேசினார். அதுகுறித்து மேயர் பிரியா ''அமைச்சர் என்னை ஒருமையில் பேசவில்லை , உரிமையில் பேசினார்'' என்று விளக்கமளித்திருந்தாலும் பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறு அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.
அடுத்தடுத்த விமர்சனங்கள்
இந்நிலையில் இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பத்திரிகையாளர் சமஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், "தான் டாம்பீகமாக அமர்ந்தபடி தன்னைச் சந்திக்க வந்த பழங்குடி சமூக பிரதிநிதியை நிற்க வைத்துப் பேசும் அமைச்சர் ஒருவரின் புகைப்படமும், அரசு அளிக்கும் மக்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை 'ஓசி' என்று விவரிக்கும் அமைச்சர் ஒருவரின் காணொளியும் அப்பட்டமான ஆண்டைத்தனம்தான்," என விமர்சித்துள்ளார் பத்திரிகையாளர் சமஸ்.
"எங்கோ ஒருவர், ஏதோ ஒரு முறை என்று இப்படி வெளிப்படவில்லை என்பதைத் திமுக தலைமை கவனிக்க வேண்டும். மேற்படி விஷயங்களிலேயே அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பொன்முடி, நேரு ஆகியோர் இப்படி சர்ச்சையில் அடிபடுவது முதல் முறை இல்லை. அப்படியென்றால், இது எதை வெளிப்படுத்துகிறது?"

பட மூலாதாரம், Getty Images
"முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும்; வெளிப்படையாகக் கட்சியினருக்கு இது தொடர்பிலான அறிவுறுத்தல்களைக் கொடுக்க வேண்டும். தொடர்ந்தும் மாறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
என்ன சொல்கிறது திமுக?
இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், "எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன. மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன.
அதற்காகக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிட்டு, அவற்றைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்." என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் அதுகுறித்து அடுத்தடுத்து வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் திமுக செய்தி தொடர்பாளர் கான்டஸ்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது, இந்த வீடியோக்கள் உண்மை மாதிரி தெரியவில்லை. "இந்த அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு ஏதும் இல்லாத போது ஒன்றுமில்லாத விஷயங்களை கையில் எடுக்கின்றனர்," என்றார்.
மேலும் இதுகுறித்து அமைச்சரிடமிருந்து அறிக்கை வந்தால் மட்டுமே உண்மை என்ன வென்று தெரியும் என்று கூறிய அவரிடம் அமைச்சர் தீண்டாமை செயலில் ஈடுபட்டுள்ளார் என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, "அவர் (அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன்) நீண்டகாலமாக அமைச்சராக இருப்பவர். இயல்பாக பழகக் கூடியவர். எனக்கு தெரிந்து அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருந்திருப்பார். இவர்கள் பார்க்க சென்றவுடன் நான் பார்த்து செய்கிறேன் தம்பி என்று சொல்லியிருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது" என்றார்.
அமைச்சர் பொன்முடியின் வீடியோ குறித்து பேசிய அவர், "பெண்கள் கல்லூரிக்கு பெற்றோர்களிடம் பணம் கேட்டு நிற்காமல் சுதந்திரமாக தற்போது செல்கின்றனர் என்பதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கான ஒரு தடை நீங்கியுள்ளது என்பதைதான் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்," என்றார்.
மேலும், "தத்துவார்த்த ரீதியாக இயங்கும்போது இம்மாதிரியான சில விஷயங்கள் வரும் அது உண்மையாக இருந்தால் திருத்தி கொள்ள வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மனதில் தீண்டாமை எண்ணங்கள் இல்லாமல் அவர்கள் நடந்திருந்தால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








