பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நரிக்குறவர்கள்: 50 ஆண்டு போராட்டத்தின் பின்னணி என்ன?

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"எங்க மக்களும் இனிமே அரசு வேலைக்கு போக முடியும். எங்க சமூகத்துலயும் அரசு அதிகாரிங்க வருவாங்க" கோவை மாவட்டம் துடியலூர் அருகே புது முத்து நகரில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சத்யகுமாரிடம் வெளிப்பட்ட நம்பிக்கை இது.
தமிழ்நாட்டில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த சமூகங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் நரிக்குறவர் மற்றும் குருவிக்கார சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதே மாதம் தலைநகர் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து தமிழகம் தொடர்பான 15 கோரிக்கைகளை வழங்கியிருந்தார். அதில் நரிக்குறவர் மற்றும் குருவிக்கார சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக இருந்தது.
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், 'நரிக்குறவர் மக்களை ST பட்டியலில் சேர்க்க வேண்டுமென கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன். விளிம்பு நிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது!' என்று ட்வீட் செய்திருந்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாடு பாஜகவின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை மனதில் கொண்டும் அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளார் பிரதமர்." என்று ட்வீட் செய்தார்.


தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் (எம்.பி.சி) பட்டியலில் இருக்கும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் இனி பழங்குடியினர் பிரிவினருக்கான பலன்களைப் பெற முடியும். ஆனால் இந்த பட்டியல் மாற்றத்திற்குப் பின்னால் நெடிய வரலாறும் போராட்டமும் உள்ளன.
பட்டியல் மாற்றம் எவ்வாறு நிகழும்?
பட்டியல் சமூகம் அல்லது பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதும் நீக்குவதும் மத்திய அரசின் அதிகாரம். அரசமைப்பு சட்டத் திருத்தம் மூலம் ஜனாதிபதியால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்றால் அதற்கான கோரிக்கையை தீர்மானமாக சம்மந்தப்பட்ட மாநில அரசு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதன் பின்னர் இந்திய பழங்குடியினர் நலத்துறை மூலம் ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் ஆப் இந்தியா (ஆர்.ஜி.ஐ) அமைப்புக்கு அந்த பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்படும். ஆர்.ஜி.ஐ அமைப்பு ஒப்புதல் அளித்த பிறகு தேசிய பழங்குடியினர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களும் ஒப்புதல் அளித்த பிறகு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளும்.
தற்போது இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்படும்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே புது முத்து நகர் என்கிற பகுதியில் நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். நரிக்குறவர் குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த சத்யகுமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நாங்கள் இந்தப் பகுதியில் நாற்பது ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால் தற்போது வரை சரியான குடியிருப்பு வசதியில்லை. தொழில் தொடங்க போதிய நிதி ஆதாரங்கள் இல்லை, கடன் வசதிகளும் கிடைப்பதில்லை.
அதனால் வாகனங்களில் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். படித்த மாணவர்களுக்கும் சரியான வேலைவாய்ப்பு இல்லை. இனி எங்கள் மக்களும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெற முடியும். தாட்கோ மூலம் நிதியுதவி மற்றும் அரசின் பல நலத்திட்டங்களைப் பெற முடியும்" என்றார்.
நரிக்குறவர், குருவிக்காரர் யார்?
நரிக்குறவர், குருவிக்காரர் என்பது இருவேறு சமூகங்கள் கிடையாது என்கிறார் நரிக்குறவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கர். இந்தப் பெயர் வந்ததன் பின்னணியை பிபிசி தமிழிடம் விளக்கியவர், `வாகிரி என்பதுதான் எங்கள் சமூகத்தின் உண்மையான பெயர். வட இந்தியாவில் இன்றும் வாகிரி என்றுதான் அழைக்கப்படுகின்றனர். நரிக்குறவர், குருவிக்காரர் என்பது பிறர் எங்களுக்கு வழங்கிய தொழில்பெயர் தான். தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் விவசாயிகள் கம்பு, சோளம், கேழ்வரகு பயிரிடுவார்கள். குருவிகள் அதை உண்பதற்கு அதிக அளவில் வரும். அப்போது குருவிகள் பயிர்களை தாக்காமல் விரட்டுவதற்கு எங்களை வேலைக்கு வைத்திருந்தார்கள். அவ்வாறுதான் குருவிக்காரர் என்கிற பெயர் வந்தது.

தென் தமிழகத்தில் விவசாயிகள் கடலை, கிழங்கு, கரும்பு பயிரிடுவார்கள். கால்நடைகளும் அங்கு அதிகம் உண்டு. இவற்றை நரி, கீரி தாக்காமல் தடுக்க எங்களை வேலைக்கு வைத்திருந்தார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக வாழ்ந்த சமூகம் எங்களுடையது. அதனால் தான் நரிக்குறவர் என்கிற பெயர் வந்தது. இரண்டு பெயரில் அழைக்கப்பட்டாலும் சமூகம் ஒன்று தான்` என்றார்.
1965 முதல் 2022 வரை
நரிக்குறவர்களை பட்டியல் பழங்குடியினராக வகைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு என்கிறார் நீலகிரி பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர் சத்தியநாராயணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், `1965-ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி அளித்த அறிக்கையிலேயே நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 'Narikuravan grouped with Kuruvikkaran' என்று தான் அதிகாரபூர்வ ஆவணங்களில் உள்ளது.
1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது முதல் முறையாக பரிந்துரை அனுப்பப்பட்டது. அப்போது 'Narikoravan grouped with Kuruvikkaran' என்று அனுப்பப்பட்டிருந்தது. குறவன், கொறவன் என மாறியதால் குழப்பம் ஏற்பட்டு மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

1987-ஆம் ஆண்டு மீண்டும் பரிந்துரை அனுப்பப்பட்டது. அப்போது நரிக்கொறவன் சமூகத்தை மட்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை அனுப்பப்பட்டது.
இந்த சமூகங்களைப் போல பல சமூகங்களும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரி வருகின்றன. ஆனால் நரிக்குறவர் சமூகத்திற்கு உள்ளதைப் போன்ற வலுவான காரணங்கள் வேறு யாருக்கும் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது இந்த சமூக மக்கள் 50,000 பேர் வரை இருக்கக்கூடும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் முழுமையான எண்ணிக்கை தெரியவரும்.
அதன் பின்னர் பல முறை பரிந்துரை அனுப்பப்பட்டபோது நரிக்குறவர்களுடன் வேறு சில சமூகங்களையும் சேர்த்து பரிந்துரை அனுப்பப்படும். அதனாலே நின்று போய்விடும்.
அதன்பின் 2010-ஆம் ஆண்டு மீண்டும் இது தொடர்பான விவாதம் எழுந்தது. அப்போது நீலகிரி பழங்குடியினர் ஆய்வு மையம் அளித்த கடிதத்தில் நரிக்குறவன், நரிக்கொறவன், குருவிக்காரன் என எந்தப் பெயரில் அழைத்தாலும் ஒரே சமூகத்தை தான் குறிப்பிடும். எனவே அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கலாம் என பரிந்துரை வழங்கினோம்.
மேலும் மாநிலங்கள் கடந்து பரவலாக வாழும் சமூகங்கள் ஒரு மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் இருந்து மற்ற மாநிலங்களில் வேறு பட்டியலில் இருந்தால் அவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கலாம். இந்த மசோதா சட்டமாகி பின்னர் அரசாணையாக மாறுவதற்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகிவிடும். அதன் பிறகு சாதி சான்றிதழ் மாற்றம் தொடங்கி ஒவ்வொன்றாக நடைபெறும்` என்றார்.

தொட்டபெட்டா முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை
அரசாணை வெளிவந்தாலும் நரிக்குறவர் மேம்பாட்டிற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியது இருக்கிறது என்கிறார் சங்கர். 2011-ல் நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் அமைந்துள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரை கடிகம் வழங்கியிருந்தது. 2013-ம் ஆண்டுதான் மத்திய அமைச்சரவை முதல்முறையாக ஒப்புதல் வழங்கியது.
அதற்கு முன்னர் பெயரில் பிழை ஏற்பட்டது, பிற சமூகங்களை இணைத்தது எனப் பல்வேறு குளறுபடிகளால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமலே இருந்தது.


2013-ல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தாலும் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. அதே போல் 2016-லும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் மசோதா காலாவதியாகிவிட்டது. தற்போது மூன்றாவது முறையாக அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.
ஆனால் நாடாளுமன்றத்தில் நிறைவேறி ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசாணையாக வெளியே வந்தால்தான் மகிழ்ச்சி அடைய முடியும். இந்த முறை தடங்கல் இல்லாமல் நிறைவேறிவிட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். அப்போதும் இதன் பலன்களை முழுமையாகப் பெறுவதற்கு பல தலைமுறைகள் ஆகிவிடும். அதற்குள்ளாக எங்களுக்கான வாய்ப்புகளையும் அதிக அளவில் ஏற்படுத்தி தரவேண்டும்.
மாவட்ட அளவில் நரிக்குறவர் மக்களின் கோரிக்கைக்கு என்று சிறப்பு கூட்டம், மாணவர்களுக்கென்று சிறப்பு பள்ளிகள் ஆகியவை ஏற்படுத்தி தரவேண்டும். எங்கள் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு நீண்ட தூர செல்ல வேண்டியுள்ளது. அதற்கான முதல்படிதான் இந்தப் பட்டியல் மாற்றம் என்பது.
எம்.பி.சி பட்டியலில் உள்ள சமூகங்களுடன் எங்களால் போட்டிபோடவே முடியவில்லை. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறோம். இனி எங்கள் பிள்ளைகளும் அரசு அதிகாரிகளாக வர முடியும்` என்றார்.
வன்கொடுமை சட்டப் பாதுகாப்பு கிடைக்கும்
இந்த அறிவிப்பு காலம் கடந்த நீதி என்கிறார் பழங்குடிகள் உரிமைச் செயற்பாட்டாளர் தன்ராஜ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், 'பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போன சமூகங்களுள் இந்தியா முழுவதும் உள்ளன. அதில் நரிக்குறவர்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக வசித்து வருவதால் அரசியல் வாக்கு வங்கி என்கிற செல்வாக்கு கிடையாது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நரிக்குறவர் வேடம் அணிந்து நடித்தது மிக முக்கியமான ஒரு புள்ளி.

நரிக்குறவர்கள் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இருப்பதால் அதில் உள்ள பிற சமூகங்களுடன் அவர்களால் நிச்சயம் போட்டியிட முடியாது. நாடோடி சமூகமாக வாழும் நரிக்குறவர்கள் ஆந்திரா, கர்நாடகாவிலும் உள்ளனர். ஆனால் அங்கு பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். தமிழ்நாட்டில் தான் எம்.பி.சி பிரிவில் உள்ளனர். 1965-ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி அறிக்கை யாரை பழங்குடியினராக சேர்க்கலாம் என வரையறுத்துள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில்தான் அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற முடியும். வீட்டு வசதி மற்றும் தொழில் தொடங்குவதற்கான நிதியுதவிகளைப் பெற முடியும். மாநில அரசு வாய்ப்புகள் மட்டுமில்லாது இந்திய அரசின் கீழ் வரும் பழங்குடியினருக்கான வாய்ப்புகளையும் பெற முடியும். இதன் மூலம் நரிக்குறவர்களை இழிவாகப் பார்க்கும் பார்வை மாறும்.
மிக முக்கியமாக நரிக்குறவர் மக்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்கள் இனி எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும். இது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும்.' என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












