கனிமொழி திமுக துணைப் பொதுச் செயலாளரானார் - அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?

கனிமொழி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கனிமொழி. அவருடைய அரசியல் பயணம் எப்படியிருந்தது? எதிர்காலம் என்ன?

தி.மு.க. தனது 15வது உட்கட்சி பொதுத் தேர்தல்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிலிருந்து விலகியிருக்கும் நிலையில், கனிமொழிக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மற்ற நான்கு பொதுச் செயலாளர்களாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

சுமார் பதினைந்து ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழி, ஏற்கனவே மகளிரணிச் செயலராக இருக்கும் நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பின் மூலம் அவரது அரசியல் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த மு. கருணாநிதியின் கடைசி மகளான கனிமொழி, பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். 1968ல் பிறந்த கனிமொழி, சென்னை பிரசென்டேஷன் கான்வென்டில் பள்ளிப் படிப்பையும் எத்திராஜ் கல்லூரியில் வணிகவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

துவக்கத்தில் The Hindu ஆங்கில நாளிதழில் பணியாற்றிய கனிமொழி, தொடர்ந்து கவிதைகளை எழுதிவந்தார். தொடர்ந்து இலக்கியவாதியாகவே அறியப்பட்டாலும், 2005ஆம் ஆண்டில் அவரும் கார்த்திக் சிதம்பரமும் இணைந்து கருத்து.காம் என்ற இணையதளத்தைத் துவங்கியபோது அவர் மீதான கவனம் அதிகரித்தது.

தனது தந்தையும் கட்சித் தலைவருமான மு. கருணாநிதியுடன் கனிமொழி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது தந்தையும் கட்சித் தலைவருமான மு. கருணாநிதியுடன் கனிமொழி

சமூக வலைதளங்கள் இந்தியாவில் பிரபலமாக இல்லாத காலகட்டம் அது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாணவ மாணவிகளுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்தார். அதனை எதிர்த்து கார்த்திக் சிதம்பரமும் கனிமொழியும் குரல் கொடுத்தனர். இதுபோல, கருத்துகளைத் தெரிவிக்க விரும்பும் பலருக்கும் ஊடகம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து, இருவரும் இணைந்து 2005 நவம்பர் 13ஆம் தேதியன்று கருத்து.காம் இணையதளத்தைத் துவங்கினர்.

அதற்குப் பிறகு பல்வேறு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவ, மாணவிகளிடம் பேசினார் கனிமொழி. அதுதான் அவரது பொதுவாழ்வின் வெளிப்படையான துவக்கமாக இருந்தது. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தனது தந்தையும் கட்சித் தலைவருமான மு. கருணாநிதி பிரசாரச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டபோது, உடன் சென்றார் கனிமொழி.

2006 நவம்பர் 27ஆம் தேதியன்று, ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் பிரம்மாண்டமான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் கனிமொழி. 2007 பிப்ரவரியில் கனிமொழியும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து, 'சென்னை சங்கமம்' என்ற கலாசாரத் திருவிழாவை நடத்தினர். இந்த நிகழ்வு மாநிலம் தழுவிய அளவில் கவனிக்கப்பட்டது.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, இது குறித்து விமர்சனங்களை முன்வைத்தபோது அந்த விழாவுக்கான கணக்குகளைப் பொதுவெளியில் முன்வைத்தார் கனிமொழி. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தி.மு.க. மகளிர் இட ஒதுக்கீட்டு ஆதரவுப் பேரணி ஒன்றை நடத்தியது. அதில் கனிமொழி முன்னிலை வகித்தார். இந்த விழாவில், அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின், கலந்துகொண்டு பாராட்டிப் பேசினார். இதற்கு அடுத்த வாரம் சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை வந்தபோது, ஸ்டாலின் பேசியதைக் காண, சட்டமன்ற மாடத்தில் கனிமொழி அமர்ந்திருந்தார்.

2007ஆம் ஆண்டு ஜூலையில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மகளிர் பேரணியை கனிமொழி முன்னின்று நடத்தியதாகச் சொல்லப்பட்டது.

Banner

துணைப் பொதுச் செயலாளருக்கு என்ன அதிகாரம்?

  • திமுகவில் 5 துணைப் பொதுச் செயலாளர்கள் உண்டு.
  • இவர்களில் குறைந்தபட்சம் ஒரு தலித், ஒரு பெண் இருக்கவேண்டும் என்பது கட்சி விதி.
  • தற்போது ஆ.ராசா, க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஐ.பெரியசாமி, கனிமொழி ஆகிய ஐந்து பேர் இந்தப் பதவியில் உள்ளனர்.
  • தற்போது இவர்களில் இரண்டு பேர் தலித்துகள்.
  • இந்தப் பதவி தேர்ந்தெடுக்கும் பதவி அல்ல. தலைவர் நியமிக்கும் பதவி.
  • இந்தப் பதவிக்கு என்று தனியாக அதிகாரம் இல்லை. அவ்வப்போது தலைவர் அளிக்கும் பணிகளை இவர்கள் மேற்கொள்வர்.
  • சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு துணைப் பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்படுவார்.
  • உள்கட்சித் தேர்தல் நடக்கும்போதும் இப்படியே துணைப் பொதுச் செயலாளர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்படுவர்.
Banner

இந்த நிலையில்தான் 2007ஆம் ஆண்டில் அவர் நேரடியாக அரசியலில் இறங்கினார். அந்த சமயத்தில் ஊடகங்களில் பேசிய அவர், "எனது சிந்தனைகளுக்கு வடிவம் தந்த மாபெரும் இயக்கம் தி.மு.க. ஆகவே அதற்குப் பங்காற்ற ஆசைப்படுகிறேன்" என்றார். கனிமொழி நேரடியாக 2007ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் இறங்கினார். அந்த ஆண்டில் தி.மு.கவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றார். 2013ஆம் ஆண்டிலும் மறுபடியும் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் கனிமொழி. மாநிலங்களவை தி.மு.க. தலைவராகவும் இருந்தார்.

2007லிருந்து தொடர்ந்து மேலெழுந்துவந்த கனிமொழியின் அரசியல் வாழ்வில், ஒரு தடைக்கல்லாக 2ஜி விவகாரம் அமைந்தது. டிபி ரியாலிட்டியின் சாஹித் பால்வாவிடமிருந்து கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்ட கனிமொழி 190 நாட்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது.

ஆனால், 2017ஆம் ஆண்டில் 2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் வெளிவந்த தீர்ப்பு, கனிமொழி மீதான குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறியது.

2007லிருந்து தொடர்ந்து மேலெழுந்துவந்த கனிமொழியின் அரசியல் வாழ்வில், ஒரு தடைக்கல்லாக 2ஜி விவகாரம் அமைந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2007லிருந்து தொடர்ந்து மேலெழுந்துவந்த கனிமொழியின் அரசியல் வாழ்வில், ஒரு தடைக்கல்லாக 2ஜி விவகாரம் அமைந்தது.

இதற்குப் பிறகு மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்து தென் மாவட்ட அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்த கனிமொழி, 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழிசை சவுந்தர்ராஜனை சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். தற்போது தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவராகவும் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.

தொழிற்சங்கச் செயல்பாட்டிலும் கனிமொழிக்கு ஈடுபாடு உண்டு. தற்போது தி ஹிந்து தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே மகளிரணிச் செயலாளராக இருந்தாலும், அது கட்சியின் துணை அமைப்பு என்ற வகையில்தான் இருந்தது. ஆனால், தற்போது தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் கட்சியின் பிரதானக் கட்டமைப்பிற்குள் வந்திருக்கிறார் கனிமொழி. தி.மு.கவின் அதிகாரப் படிநிலையில், கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், முதன்மைச் செயலர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச் செயலாளர் பதவி இருக்கிறது. ஐந்து துணைப் பொதுச் செயலாளர்கள் இருக்கும் நிலையில், இந்தப் பதவிக்கென பிரத்யேகமான பெரிய அதிகாரங்கள் ஏதும் கிடையாது என்றாலும், கனிமொழியின் அரசியல் வாழ்வில் இந்தப் பதவியின் மூலம் மேலும் ஓர் அடி முன்னோக்கி நகர்ந்திருக்கிறார்.

"தி.மு.க. ஒரு குடும்பக் கட்சி என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. குடும்பக் கட்சியாக இருப்பதில் சில ஆதாயங்கள் இருக்கவே செய்கின்றன. ஜெயலலிதா மறைந்தவுடன் அ.தி.மு.கவில் ஏற்பட்டதைப் போன்ற பிரச்னைகள் தி.மு.கவில் ஏற்படவில்லை. இப்போது கனிமொழி கட்சிக்குள் பதவிக்கு வந்திருப்பதன் மூலம், குடும்பக் கட்சி என்ற விமர்சனம் மீண்டும் முன்வைக்கப்படும். ஆனால், அந்த விமர்சனங்கள் கட்சிக்கு வெளியில் இருந்துதான் வரும். தி.மு.கவினர் யாரும் இதனை எதிர்க்கப் போவதில்லை. கட்சிக்குள் எதிர்ப்பு ஏதும் இல்லாத நிலையில், இந்த விமர்சனங்களால் பிரச்சனை ஏதும் இல்லை," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

கனிமொழியைப் பொறுத்தவரை துவக்கத்திலிருந்தே அவருடைய நாடாளுமன்றச் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டே வந்தருக்கின்றன. 2018ஆம் ஆண்டில் சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருதை கனிமொழி பெற்றார். தவிர, மாநில உரிமைகள், இந்தி எதிர்ப்பு போன்றவற்றில் அவரது குரல் வெகுவாகக் கவனிக்கப்படுகிறது.

உட்கட்சி பொதுத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த மு.க. ஸ்டாலினுடன் கனிமொழி

பட மூலாதாரம், @Udhaystalin/twitter

படக்குறிப்பு, உட்கட்சி பொதுத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த மு.க. ஸ்டாலினுடன் கனிமொழி

"கனிமொழி நாடாளுமன்றத்தில் தி.மு.கவை மிகச் சிறப்பாக பிரநிதித்துவம் செய்கிறார். தென் மாவட்டங்களில் கட்சிக்காக சிறப்பாக பணியாற்றுகிறார். ஆகவே கனிமொழி அதற்குத் தகுதியானவர்தான்" என்கிறார் ப்ரியன்.

ஆனால், தி.மு.கவின் அடுத்த வாரிசாக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறார் என்று கூறப்படும் நிலையில், கனிமொழிக்குக் கொடுக்கப்படும் கூடுதல் முக்கியத்துவம் எவ்விதமானது, இந்த முக்கியத்துவத்தை கட்சியினர் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதெல்லாம் வரும் காலங்களில் வெகுவாகக் கவனிக்கப்படும்.

தவிர, கனிமொழி தற்போது வகித்துவரும் மகளிரணிச் செயலாளர் பதவியை அவரே தொடர்ந்து வகிப்பாரா அல்லது அதற்கு வேறொருவர் நியமிக்கப்படுவாரா என்பதும் உற்றுநோக்கத் தக்கது. காரணம், துணைப் பொதுச் செயலாளர்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மகளிரணிச் செயலாளர்களுக்கு ஓரளவுக்கு அந்த சுதந்திரம் உண்டு. ஆகவே, இந்த விவகாரத்தில் கட்சி என்ன செய்யப் போகிறது என்பதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு வலுவான பெண் அரசியல் தலைவர்கள் இல்லை என்று கூறப்படும் நிலையில், தி.மு.கவில் கனிமொழிக்கு அளிக்கப்படும் எந்த ஒரு முக்கியத்துவமும் அரசியல் அரங்கில் வெகுவாகக் கவனிக்கப்படும். அவர் பெண் என்பதால் மட்டுமல்லாமல், பெண்ணுரிமை, மாற்றுத் திறனாளிகள், பால் புதுமையினர் உரிமை தொடர்பாகவும் அவர் தொடர்ந்து பேசிவருவதும் இதற்குக் காரணம்.

எப்படிப் பார்த்தாலும் கனிமொழிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த முக்கியத்துவம், தி.மு.கவில் ஒரு முக்கியமான தருணம் என்பதில் சந்தேகமில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: