நரேந்திர மோதி பிறந்தநாள்: 'சீட்டா' சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்து இந்தியா வந்தன

சாட்லைட் காலருடன் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை

பட மூலாதாரம், CHEETAH CONSERVATION FUND

படக்குறிப்பு, சாட்லைட் காலருடன் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை
    • எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஒவ்வோர் ஆண்டும் குஜராத்தில் தன் தாயாரைச் சந்தித்தோ, எல்லையில் ராணுவ வீரர்களுடனோ, சில சமயம் குழந்தைகளுடனோ தன் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளைக் கொண்டுவரும் விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவின் மையத்தில் உள்ள பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. மிகவும் கடுமையாகப் பணியாற்றி அங்கு ஒரு ஹெலிகாப்டர் இறங்கு தளமும் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஹெலிபேடில் இருந்து 200 மீட்டர் தொலைவில், 150 மீட்டர் சுற்றளவுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 17) நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் இந்த கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோதி இந்த ஹெலிபேடில் தரையிறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த சிவிங்கிப் புலிகள் இங்கு வந்துசேர்ந்தன. பிரதமர் இரும்பு லீவரை இழுத்து, அவற்றில் இருந்து மூன்று சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்திற்குள் விடுவிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

1.15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக, இந்த ஐந்து முதல் ஆறு வயதுள்ள சிவிங்கிப் புலிகள், ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தில் வைக்கப்படும். இங்குள்ள காலநிலைக்கு அவை பழகுவதற்கு இது உதவிடும்.

"இந்த ஒரு மாதத்தில் சிவிங்கிப்புலிகள் அந்தந்த மண்டலங்களுக்குள்ளேயே இருக்கும். அவற்றால் வேட்டையாட முடியாது. எனவே இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவைகளுக்கு எருமை இறைச்சி அளிக்கப்படும். ஒரு மாதத்திற்குப் பிறகு சிவிங்கிப் புலிகள் 500 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 'கே' மண்டலத்திற்கு அனுப்பப்படும். இதனால் அவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக வாழலாம். தேவைப்பட்டால் அவற்றை பிரிக்கவும் முடியும்," என்று மத்தியப் பிரதேச வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு வரும் இந்த சிவிங்கிப் புலிகள் சரணாலயங்களில் சிறந்தமுறையில் பிறந்து வளர்ந்தவை. தென்னாப்ரிக்காவில் இதுபோன்ற 50 சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் வயது வந்த 500 சிவிங்கிப் புலிகள் உள்ளன.

சீட்டா கன்சர்வேஷன் ஃபண்ட் என்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்பின் இயக்குநர் லாரி மார்க்கர், நமீபியாவில் இருந்து பிபிசியுடன் உரையாடினார். "இந்த திட்டத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறோம். இந்த சிவிங்கிப் புலிகள் சிறுத்தைப் புலிகளுக்கு (leopard) அருகில் இருந்து வளர்ந்தவை. இவை இந்தியாவை தங்கள் இருப்பிடமாக ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம். ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் மிக வேகமாக வளரும், "என்று அவர் குறிப்பிட்டார்.

சிவிங்கிப்புலிகள் 'பரிசு'

2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதில் இருந்து நரேந்திர மோதி தனது பிறந்த நாளை (செப்டம்பர் 17) குஜராத்தில் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

தனது பிறந்த நாளன்று அவர் பெரும்பாலும் தனது தாயாரைச் சந்திப்பார். கடந்த ஆண்டுகளில் இதே நாளில் அவர் சர்தார் சரோவர் அணை போன்ற முக்கியமான இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1965இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் குறித்த போர்க் கண்காட்சியை திறந்துவைத்துள்ளார். தூய்மை தினத்தை துவக்கி வைத்துள்ளார் அல்லது பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

ஆனால் இந்த முறை இந்தியாவிற்கு சிவிங்கிப் புலிகள் திரும்பி வருவது அவரது பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்படும் விமானம்

பட மூலாதாரம், CHEETAH CONSERVATION FUND

படக்குறிப்பு, விமானம்

குனோ பூங்காவில் சிவிங்கிப் புலிகளை விடுவித்த பிறகு, அருகிலுள்ள பால்பூர் விருந்தினர் மாளிகையில் வனக் காவலர்கள் மற்றும் சுமார் 150 'சிவிங்கிப் புலி நண்பர்களை' (இளைஞர்கள் குழு) பிரதமர் சந்திக்க உள்ளார்.

இந்த 'சிவிங்கிப்புலி நண்பர்கள்' 400 பேரும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் சிவிங்கிப் புலிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சி பெற்றவர்கள். சிவிங்கிப் புலிகளுக்கும் சிறுத்தைப் புலிகளுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்பதையும் இவர்கள் மக்களுக்கு விளக்குகிறார்கள்,"என்று குனோ தேசியப் பூங்காவுக்கு சென்று ஏற்பாடுகளை பார்வையிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் இரம் சித்திக்கி தெரிவித்தார்.

நமீபியாவில், சிவிங்கிப்புலிகள் மற்றும் சிறுத்தைப் புலிகள் காடுகளில் ஒன்றாக வாழ்கின்றன. ஆனால் மத்தியப் பிரதேசத்திற்கு வரும் சிவிங்கிப் புலிகள் குனோ பூங்காவில் தற்போதைக்கு சிறுத்தைப் புலிகளிடமிருந்து விலக்கியே வைக்கப்படும். ஆயினும் காடுகளில் இருக்கும் 150க்கும் மேற்பட்ட சிறுத்தைப் புலிகளை வருங்காலத்தில் அவை சமாளிக்க வேண்டியிருக்கும். இதற்கு ஒரு காரணமும் உண்டு.

Banner

சிவிங்கிப்புலி பற்றிய இந்த சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

  • புலி, சிங்கம், சிறுத்தை போல சிவிங்கிப் புலி கர்ஜிக்காது. இதுபோன்ற ஒலியை எழுப்பக்கூடிய எலும்பு அவற்றின் தொண்டையில் இல்லை. அவை பூனைகளைப் போல குறைந்த ஒலியை எழுப்புகின்றன. சில சமயங்களில் குருவிகளைப்போல பேசுகின்றன.
  • சிவிங்கிப் புலி உலகில் மிக வேகமாக ஓடும் விலங்கு. ஆனால் இந்த அதிக வேகத்தில் நீண்ட தூரம் அவற்றால் ஓட முடியாது. பொதுவாக இந்த தூரம் 300 மீட்டருக்கு மேல் இருக்காது.
  • சிவிங்கிப் புலிகள் மிக வேகமாக ஓடக்கூடியவையாக இருக்கலாம். ஆனால் மற்ற பூனை இனங்களைப் போலவே அவை அதிக நேரம் ஓய்வாக இருப்பதில் செலவிடுகின்றன.
  • வேகத்தைப் பொருத்தவரை சிவிங்கிப்புலிகள் ஸ்போர்ட்ஸ் கார்களை விட வேகமானவை. மணிக்கு பூஜ்ஜியத்திலிருந்து 90 கிலோமீட்டர் வேகத்தை அடைய அவற்றிற்கு மூன்று வினாடிகள் மட்டுமே ஆகும்.
  • சிவிங்கிப் புலியின் சீட்டா என்ற பெயர் 'சித்தி' என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து உருவானது. ஏனெனில் அதன் உடலின் புள்ளிகள் அதை அடையாளப்படுத்துகின்றன.
  • சிவிங்கிப்புலி, மற்ற வகை பூனை இனங்களிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் அது இரவில் வேட்டையாடுவதில்லை.
  • சிவிங்கிப் புலியின் கண்களுக்குக் கீழே உள்ள கறுப்புக் கோடுகள் கண்ணீரைப் போல தோற்றமளிக்கின்றன. அவை சூரியனின் வலுவான ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இதனால் அவை பிரகாசமான சூரிய ஒளியில் கூட தெளிவாகப் பார்க்க முடியும்.
  • முகலாயர்கள் சிவிங்கிப் புலிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர். வேட்டைக்குச் செல்லும்போது அவர்கள் சிவிங்கிப் புலிகளை தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அவை முன்னே சென்று மான்களை வேட்டையாடும்.
  • சிவிங்கிப்புலி 1952இல் இந்தியாவில் அழிந்துபோன இனமாக அறிவிக்கப்பட்டது. இப்போது மீண்டும் அவற்றை இந்தியாவில் குடியமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் சிவிங்கிப் புலிகள் திறந்தவெளியில் வேட்டையாடும் பழக்கம் கொண்டவை. மத்திய பிரதேசத்தின் காடுகளில் வேட்டையாடுவது அவற்றுக்கு எவ்வளவு எளிதாக இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆதாரம்- லண்டன் விலங்கியல் சங்கம்.

Banner

சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்படும் சிவிங்கிப்புலிகள்

நீண்ட காலமாக புலிகள் குறித்து ஆய்வு செய்து வரும் வனவிலங்கு படத்தயாரிப்பாளர் அஜய் சூரி, "சிவிங்கிப் புலிகள் மிகவும் ஆக்ரோஷமானவை. அவற்றுடன் ஒப்பிடும்போது சிறுத்தைப் புலிகள் குறைவாகவே தாக்கும். இரண்டாவதாக, சிவிங்கிப் புலிகள் தன் இனத்தைச்சேர்ந்த மற்றவகை விலங்குகள் தங்கள் பகுதியில் வசிப்பதை விரும்புவதில்லை. சிங்கங்கள் அல்லது புலிகளுடன் அவை சண்டையிடுவதில்லை. ஆனால் சிறுத்தைகளைத் தாக்கும்," என்றார்.

உலகில் தற்போது சுமார் 7,000 சிவிங்கிப் புலிகள் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை தென்னாப்ரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானாவில் உள்ளன.

1950களில் இந்தியா, சிவிங்கிப் புலியை அழிந்துவிட்ட இனமாக அறிவித்தது. நாட்டில் ஒரு சிவிங்கிப்புலி கூட அப்போது இருக்கவில்லை. ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்தின் காடுகளுக்கு இவ்வளவு பெரிய மாமிசப் பிராணி கொண்டுவரப்படுவது இதுவே முதல் முறை.

விமானத்தில் சிவிங்கிப்புலிகள் இவ்வாறு தூங்க வைக்கப்பட்டுள்ளன

பட மூலாதாரம், CHEETAH CONSERVATION FUND

படக்குறிப்பு, விமானத்தில் சிவிங்கிப்புலிகள் இவ்வாறு தூங்க வைக்கப்பட்டுள்ளன

புலிகள் விஷயத்தில் இந்தியா ஒரு முன்னுதாரணம் ஆகலாம்

இந்தியாவைப் பொறுத்தவரை இதற்கு முன் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று சொல்லமுடியாது.

"1970களில், இரானில் ஷா ஆட்சியில் இருந்தபோது, இந்தியா அங்கிருந்து சிவிங்கிப் புலிகளை கொண்டு வந்து குடியேற்ற முயன்றது. ஆனால் இரானில் அதிகாரம் மாறியவுடன் திட்டம் நிறைவேறவில்லை. 2009இல் இதே போன்ற ஒரு முயற்சி தொடங்கப்பட்டது. குனோ தேசிய பூங்கா போன்ற மூன்று இடங்களில், நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகளை கொண்டுவந்து குடியமர்த்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது," என்று வனவிலங்கு பாதுகாவலரும், உயிரியல் விஞ்ஞானியுமான ரவி செல்லம் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு பெரிய முன்முயற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு 2020 இல் உச்ச நீதிமன்றம் சிவிங்கிப் புலிகளை கொண்டு வர இந்திய அரசுக்கு அனுமதி அளித்தது.

சிவிங்கிப் புலிகள் பாதுகாப்பாக குடியேற சிறந்த இடத்தைக் கண்டறியுமாறு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவிங்கிப் புலிகளின் வருகை பற்றி உற்சாகம் அதிகமாக உள்ளது. கூடவே புலிகள் மற்றும் சிவிங்கிப் புலிகள் தங்கள் வாழ்விடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறிய வரலாறு உள்ளதா என்று அறிந்துகொள்ளும் ஆர்வமும் உள்ளது.

"இது மிகவும் உற்சாகமான விஷயம். ஆனால் சவாலானதும் கூட. அழிந்துவிட்ட விலங்குகளை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் இந்தியாவிற்கு இது மிகப்பெரிய வெற்றி,"என்று இந்த திட்டத்துடன் தொடர்புடைய இந்திய வனவிலங்கு கல்வி அமைப்பின் தலைவர் யாத்வேந்திர தேவ் ஜாலா குறிப்பிட்டார்.

சிவிங்கிப்புலி

பட மூலாதாரம், CHEETAH CONSERVATION FUND

படக்குறிப்பு, சிவிங்கிப்புலி

வங்கதேசத்தில் புலிகளை கொல்லும் மாஃபியா

இந்தத் திட்டம் வெற்றி பெறுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.

"கடந்த இருபது ஆண்டுகளில் சரிஸ்கா மற்றும் பன்னா புலிகள் காப்பகங்களில் புலிகள் அழிந்துவிட்டன. பின்னர் ரண்தம்போர் மற்றும் கன்ஹா புலிகள் காப்பகங்களில் இருந்து புலிகள் இங்கு கொண்டு வரப்பட்டன. நான்கு இடங்களிலும் இப்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் இருந்து சாம்பல் ஓநாய்கள் (Grey wolf) அழிந்துவிட்டன. ஒரு பெரிய இடமாற்ற திட்டத்தின் கீழ் அவை கனடாவிலிருந்து கொண்டு வரப்பட்டு தற்போது அவை மீள்குடியேற்றப்பட்டன," என்று வனவிலங்கு படத் தயாரிப்பாளர் அஜய் சூரி தெரிவித்தார்.

தற்போது குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகளை பராமரித்து, பாதுகாப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வனவிலங்குகளை வேட்டையாடும் பிரச்னை இன்னும் தொடர்கிறது.

வனவிலங்குகளை வேட்டையாடும் விஷயத்தில் ஒரு பெரிய மையமாக இந்தியா உள்ளது என்று 'வேர்ல்ட் வைல்ட் ஃபண்ட்' மற்றும் லண்டனின் விலங்கியல் சங்கத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

யானைத் தந்தம் மற்றும் காண்டா மிருகத்தின் கொம்புடன் கூடவே புலி மற்றும் சிவிங்கிப் புலியின் தோல், எலும்பு மற்றும் பிற உடல் பாகங்கள் இன்னும் கடத்தல்காரர்களை ஈர்க்கின்றன.

இந்த சிவிங்கிப் புலிகள் குனோ பூங்காவிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பே இரண்டு ட்ரோன் படைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. காடுகளை கண்காணித்து சிவிங்கிப் புலிகளைப் பாதுகாப்பதை இதன் நோக்கம். 'சிவிங்கிப்புலி நண்பர்களாக' இருந்தாலும் சரி, 'ட்ரோன் படை' யாக இருந்தாலும் சரி, இவர்களின் அசல் பரிசோதனை தொடங்குவதற்கு மிகக் குறைவான நேரமே மீதமுள்ளது.

காணொளிக் குறிப்பு, குழிக்குள் விழுந்த குட்டியானைக்காக தானும் விழுந்த தாய் யானை: நெகிழ வைக்கும் காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: