பாரத் ஜோடோ: ராகுல் காந்தியின் கன்னியாகுமரி - காஷ்மீர் ஒற்றுமை பயணம்; கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் கன்னியாகுமரியில் துவங்கும் இந்திய ஒற்றுமை பயணத்துக்கான ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளன? கன்னியாகுமரியில் இருந்து பிபிசி தமிழ் வழங்கும் கள நிலவரத்தை இதில் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டபடி, 'பாரத் ஜோடோ யாத்திரையை' கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை மாலையில் தொடங்குகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பயணம், 150 நாட்களுக்குப் பிறகு காஷ்மீரில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை இரவு சென்னை வந்தடைந்தார். புதன்கிழமை காலை ஏழு மணியளவில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தமது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அஞ்சலி கூட்டத்தில் ராகுல் கலந்து கொள்கிறார்.
அதற்குப் பிறகு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ராகுல் காந்தி, அங்கிருந்து பிற்பகல் 2 மணியளவில் கன்னியாகுமரியை வந்தடைகிறார். மாலை மூன்று மணியளவில் திருவள்ளுவர் சிலை, அதற்குப் பிறகு விவேகானந்தர் மண்டபம், காமராஜர் மண்டபம் ஆகியவற்றுக்குச் சென்று விட்டு மாலை 4.10 மணியளவில் மண்டபத்தை வந்தடைகிறார் ராகுல் காந்தி.
மாலை 4.30 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் அளிக்கிறார். அங்கிருந்து தேசிய கொடியுடன் கடற்கரை சாலையில் தொண்டர்களுடன் நடக்கும் ராகுல் காந்தி மாலை 5 மணியளவில் 'இந்திய ஒற்றுமைப் பயணத்தை' முறைப்படி துவக்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியையொட்டி, மாலையில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவில் விவேகானந்தர் கல்லூரியில் ராகுல் காந்தி தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த நாளான வியாழக்கிழமை காலை 6 மணியளவில் விவேகானந்தர் கல்லூரியில் இருந்து யாத்திரை துவங்குகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் வழியாக திட்டமிடப்பட்டுள்ள யாத்திரை பிறகு கேரளாவிற்குள் நுழைகிறது.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸைப் பொறுத்தவரை, வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சிக்கு வரும் நிலையிலோ, முக்கிய எதிர்கட்சியாகவோ இருந்தாலும், இந்த யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து துவங்க முடிவு செய்யப்பட்டிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி, 1990களில் நடத்திய ரத யாத்திரை சோம்நாத்தில் துவங்கி அயோத்தியில் நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவின் மையப் பகுதியில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
"இந்த நடை பயணத்தின் பிரதான நோக்கமே இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாப்பதுதான். 5,000 ஆண்டுகளாக இந்திய சமூகம் ஏற்றத்தாழ்வுகளால் நிரப்பப்பட்டது. இந்த ஏற்றத்தாழ்வுகளை சனாதன தர்மம் 'சரி' என்கிறது. அன்றைய சமூகம் அதை ஏற்றுக் கொண்டது.

ஆர்எஸ்எஸ் முழக்கத்துக்கு எதிரான யாத்திரை
இந்த ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்த கடவுளின் பெயரையும் மதத்தின் பெயரையும் சனாதனிகள் பயன்படுத்தினார்கள். ஆனால், 'காந்தி' அந்த ஏற்றத்தாழ்வுகளை ஏற்கவில்லை. மறுப்பு தெரிவித்தார். சிறந்த ஆன்மிகவாதியாகவும் ராமரின் மீது பக்தி கொண்டவர் என்பதாலும் அவர் முன்வைத்த சீர்திருத்தங்களை இந்தியா ஏற்றுக்கொண்டது.


அவர்தான் முதன் முதலில் 'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்' என்றார். மகாத்மா இதைச் சொன்னபோது பெரும் எழுச்சி ஏற்பட்டது. இப்போது 70 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். தைரியமாக 'சனாதனம்' காப்பாற்றப்பட வேண்டும் என்கிறது, இந்தியா ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஓரே மொழி, ஒரே இறை வழிபாட்டைக் கொண்டது என்கிறது.
இந்தியா ஒரு தேசம். பல பிராந்தியங்களின் கலவை. இந்தியாவில் 100க்கணக்கான மொழிகள் உள்ளன. இறைவழிபாட்டைப் பொறுத்தவரை பல நூறு பிரிவுகள் இந்து மதத்திலேயே உள்ளன. இது இல்லாமல் கிறிஸ்தவம், இஸ்லாம், சைனம், சீக்கியம் என பல மதங்கள் உள்ளன. இந்த தவறான சனாதான நம்பிக்கையை தகர்க்கவே ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை துவக்கியிருக்கிறார். எனவே ராகுல் மேற்கொண்டிருக்கும் இந்த நடைபயணம் என்பது புரட்சிகரமான, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது." என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கே.எஸ். அழகிரி.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடத்தப்பட்ட பெரும்பாலான யாத்திரைகள், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் நடத்தியவை. ஆனால், இந்த யாத்திரையின் நோக்கம் அதுவல்ல என்கிறது காங்கிரஸ் கட்சி.
"இது அரசியல் யாத்திரை அல்ல. நாட்டை ஒற்றுமையாக்கும் யாத்திரை. எப்படி இருந்த இந்தியாவை இப்படி ஆக்கிவிட்டார்களே என்று மக்களிடம் சுட்டிக்காட்டும் யாத்திரை" என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

பட மூலாதாரம், Getty Images
தேர்தலுடன் தொடர்பா?
"கிரிக்கெட் மேட்ச்சில் ஒருவர் கேட்சை நழுவவிட்டால் அவரது மதத்தை வைத்து அவரை 'ட்ரோல்' செய்கிறார்கள். போன முறை பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றபோது முகமது ஷமியை 'ட்ரோல்' செய்தார்கள். ஆமிர் கான் நடித்த படத்தை புறக்கணிக்கச் சொல்கிறார்கள். இது போல சுதந்திர இந்தியாவில் நடந்ததே இல்லை. இதைத்தான் சுட்டிகாகாட்ட விரும்புகிறோம்," என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
இந்த யாத்திரைக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் தொடர்பே இல்லை என்கிறார் அவர்.
"தேர்தல் 2024ல்தான் வரவிருக்கிறது. 2022ல் இந்த யாத்திரை நடக்கிறது. இது தேர்தலுக்காக நடத்தப்படும் யாத்திரை இல்லை. எந்த இடத்திலாவது கைச் சின்னத்தைப் பயன்படுத்தியிருக்கிறோமா என்று பாருங்கள்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு தரப்பினரின் மனநிலையைப் புரிந்துகொள்வதுதான் ராகுல் காந்தியின் நோக்கமாக இருக்கக்கூடும். இந்தப் பயணத்திற்கு முன்னேற்பாடாகவும் பல்வேறு தரப்பினரின் மனநிலையைப் புரிந்து கொள்ளும்விதத்திலும் 150க்கும் மேற்பட்ட சிவில் குழுவினரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியிருக்கிறார்.
கன்னியாகுமரியிலும் 8ஆம் தேதி முதல் பத்தாம் தேதிவரை பல சிவில் சொசைட்டிக் குழுக்களை ராகுல்காந்தி சந்தித்துப்பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல தரப்பினரையும் சந்திப்பதோடு, அவர்களது பார்வைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த யாத்திரை கன்னியாகுமரியில் துவங்கவிருக்கிறது.
ஆனால், செவ்வாய்க்கிழமை மாலை வரையில் கன்னியாகுமரி நகருக்குள் அது தொடர்பான பரபரப்பு ஏதுமில்லை. சில இடங்களில் காங்கிரஸ் கட்சியின் கொடிகளும் சில இடங்களில் சுவர் விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன. கலைக்குழு ஒன்று, இந்த யாத்திரை தொடர்பான விழிப்புணர்வு நாடம் ஒன்றை சில இடங்களில் நடத்தியது.
பல சுற்றுலா பயணிகளிடம் பிபிசி பேசியபோது, அடுத்த நாள் இப்படி ஒரு நிகழ்வு நடக்கவிருக்கிறது என்ற தகவலே அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












