டெல்லியில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துப் பேசியதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதில் பிரதமர் மோதியுடனான சந்திப்புதான் தமிழக அரசியலில் உற்று கவனிக்கப்படும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முதல்வரின் டெல்லி விஜயத்துக்கு நிஜமான காரணம் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே, பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக நெருக்கம் காட்டுகிறதா என்ற கேள்விகள் மறுபடியும் எழ ஆரம்பித்தன.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாடின் துவக்க விழாவில் பிரதமர் மோதிக்கும் முதலமைச்சருக்கும் இடையில் வெளிப்படையாகத் தெரிந்த நல்லுணர்வு சமிக்ஞைகள், அந்தத் தருணத்திலேயே பாஜகவுடன் திமுக நெருங்குகிறதா என்ற கேள்விகளை எழுப்பின.
சொல்லி வைத்ததுபோல தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அந்த விழாவைப் புறக்கணித்தது.
இந்த நிலையில்தான் முதல்வரின் இந்த டெல்லி விஜயமும் கவனிப்பிற்கு உள்ளானது. ஆனால், திமுக - பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா என்ற கேள்விக்கு முந்தைய நாளே பதில் சொன்னார் முதலமைச்சர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மு.க. ஸ்டாலின், ''பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளிடம் குறைந்தபட்ச சமரசத்தை திமுக கையாண்டால் கூட, தி.மு.க. அணியில் பா.ஜ.க. எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய்விடும் என்று திருமா அதில் சொல்லியிருக்கிறார்.

"டெல்லிக்கு காவடி தூக்கவில்லை"
ஆனால், "திமுகவை பொறுத்தவரை தனது கொள்கையில் எப்போதுமே உறுதியாக இருக்கும். நான் இப்போது இரு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறேன், திருமா அவர்களுக்குத் தெரியும், எல்லோருக்கும் தெரியும், உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், ஒன்று கட்சித் தலைவர் பொறுப்பு, இன்னொன்று அனைவருக்குமான தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பு. உங்களால் உருவாக்கப்பட்டவன்தான் நான்; உங்களால் உட்கார்ந்திருக்க கூடியவன் நான்."


"நான் என்ன காவடியா தூக்கப் போகிறேன். கை கட்டி, வாய் பொத்தி, உத்தரவு என்ன என்றா கேட்கப் போகிறேன்? தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைப் பெறவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆகவே ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையில் உறவு இருக்கிறதே தவிர, தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல! தி.மு.க.வினுடைய கொள்கைக்கும், பா.ஜ.க.வினுடைய கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது," என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

நரேந்திர மோதி - ஸ்டாலின் சந்திப்பு - அறிய உதவும் தகவல்கள்
- மோதியை எதற்காக சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்? சென்னையில் கடந்த மாதம் நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்கு வந்ததற்காகவும் சர்வதேச செஸ் போட்டியை சென்னையில் நடத்த ஒத்துழைப்பு வழங்கியதற்காகவும் நன்றி தெரிவிப்பதற்காக டெல்லி வந்ததாக முதல்வர் கூறினார்.
- ஸ்டாலினுக்கு சலுகை காட்டினாரா பிரதமர்? டெல்லிக்கு வர மூன்று நாட்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலினின் அலுவலகம் கேட்டபோது, அதை முதல்வருக்கு உகந்த தேதியில் எப்போது வேண்டுமானாலும் வருமாறு பிரதமர் அலுவலகம் கூறியது.
- ஸ்டாலின், மோதி சந்திப்பு திமுக-பாஜக கூட்டணிக்கு அச்சாரமாகுமா? இது இப்போதைக்கு தெளிவற்று உள்ள விஷயம். அதே சமயம், தனக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு மாநில நலன்களை சார்ந்தது என்றும் பாஜகவுடன் திமுக அரசியல் கூட்டணி மேற்கொள்ளாது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


புதன்கிழமையன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரைச் சந்தித்த முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நீட் பிரச்னை, புதிய கல்விக் கொள்கை, மின்சாரம், காவேரி பிரச்னை, மேகதாது பிரச்னை போன்ற பல கோரிக்கைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்துவோம்," என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆனால், சமூக வலைதளங்களில் முதல்வரின் தலைநகர விஜயத்திற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனைகளின் பின்னணியிலும் முதல்வரின் டெல்லி பயணம் பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் சந்திப்பில் இருந்தது அரசியலா?
மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பார்வை
"இது பெரும்பாலும் தமிழக அரசுக்கு நிதி கேட்பது, மசோதாக்களை நிறைவேற்றித் தருவது என்பது தொடர்பாகவே இருக்கக்கூடும். பா.ஜ.கவை அணுகி, முதல்வர் தனிப்பட்ட ரீதியான விஷயங்களை முன்வைத்தால், அதற்கு பதிலாக பா.ஜ.க. எதிர்பார்ப்பதை தி.மு.கவால் செய்ய முடியாது. காரணம், தி.மு.கவின் வாக்கு வங்கி என்பது பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளே. திமுக பா.ஜ.கவுடன் நெருங்கும்பட்சத்தில், அந்த வாக்குகளை இழக்கக்கூடும். இதையெல்லாம் முதல்வர் உணர்ந்தேதான் இருக்கிறார். அதனால்தான் திருமாவின் விழாவில் அப்படி பேசினார்.
திமுகவும் பாஜகவும் நெருங்கி வருகின்றன என்று பேசுபவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அது தி.மு.கவின் வாக்கு வங்கியில் ஓட்டைபோடுவது. மற்றபடி இந்த டெல்லி பயணத்தில் திமுக - பாஜக இடையே ஏதும் நடப்பதற்கு வாய்ப்பில்லை" என்கிறார் ப்ரியன்.

இந்த முறை பிரதமர் அலுவலகத்தில், முதல்வர் எந்த நேரம் கேட்கிறாரோ அந்த நேரத்தைக் கொடுக்கும்படி சொல்லப்பட்டிருந்ததாகவும் அதன்படியே மாலை நான்கு மணிக்கு மேல் நேரம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. தவிர, பாஜக - திமுக நெருக்கம் குறித்த பேச்சுகள் அடிபடும் நிலையில், இந்த சந்திப்பை அரசியல் சந்திப்பாக அல்லாமல் அரசு ரீதியான சந்திப்பாக வைக்கவே முதல்வர் முனைப்பு காட்டினார்.
மோதியுடன் தனியாக சந்திப்பு
இந்தப் பின்னணியில் டெல்லியில் பிரதமர் மோதியை தலைமைச் செயலாளருடன் சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், பிறகு தனியாக பிரதமரை சந்தித்துப் பேசியிருக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று கூறப்பட்டபோதும், தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தபோது, தமிழ்நாடு தொடர்பான சில நிலுவை கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று கூறினார்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது, அவரிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தும் மனு எதையும் முதல்வர் ஸ்டாலின் தரவில்லை. அதே சமயம், தனது கையில் வைத்திருந்த துண்டுச்சீட்டில் பிரதமரிடம் என்ன பேச வேண்டுமோ அந்த குறிப்புகளை எழுதி வைத்து பேசியிருக்கிறார் முதல்வர்.
அதன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












