ஆளுநரிடம் அரசியல் பேசிய ரஜினி - பால், தயிர் விலை உயர்வுக்கு பதில் கூற மறுப்பு

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், ARUN SANKAR / Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் மீண்டும் அரசியல் குறித்த திட்டம் ஏதும் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "அப்படித் திட்டம் ஏதும் இல்லை" என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் (ஆக. 08) ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். ரஜினிகாந்த் - ஆளுநர் ஆர்.என்.ரவியின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், தனது வீட்டின் வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.

ஆளுநருடன் அரசியல் தொடர்பாகப் பேசியதாகவும் அதில் என்ன பேசினோம் என்பதைச் சொல்லமுடியாது எனவும் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. 25 -30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் வட இந்தியாவிலேயே இருந்தவர். தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறார். தமிழ் மக்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்கிருக்கும் ஆன்மிக உணர்வு அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது. தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன். அரசியல் பற்றியும் விவாதித்தோம். அதைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.

மறுபடியும் அரசியல் குறித்த திட்டம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டபோது, அப்படித் திட்டம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசினீர்களா என்று கேட்டபோது, அதைப் பற்றிச் சொல்ல முடியாது என்று கூறினார்.

'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி அல்லது 22ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பால் - தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது குறித்து கேட்டபோது, அதைப் பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று, தான் தனிக்கட்சி தொடங்கி அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்துவந்தார். பின்னர், தன் உடல்நலனை குறிப்பிட்டு அரசியலுக்கு வரவில்லை என்று, கடந்த ஜூலை, 2021இல் உறுதியாக தெரிவித்தார். பின்னர், ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு அது முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாகவே செயல்படும் என்றும் அறிவித்தார்.

2021, நவம்பரில் அவருடைய 'அண்ணாத்த' திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து, அவருடைய 'ஜெயிலர்' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Hindustan Times / Getty Images

படக்குறிப்பு, பால்கே விருது வழங்கப்பட்டபோது

இதனிடையே, ரஜினிகாந்திற்கு இந்திய திரையுலகினருக்கு இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரஜினிகாந்த் - ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: