You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெய்பீம்: சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
'ஜெய்பீம்' திரைப்படத் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் மீது வழக்குப்பதிய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் த.சா.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி பரவலான கவனத்தையும் விவாதத்தையும் துவக்கி வைத்தது.
ஒடுக்கப்பட்ட இருளர் பழங்குடி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் காரணமாக நடக்கும் ஒடுக்குமுறைகளை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது தான் 'ஜெய்பீம்' கதைக்களம்.
படத்தில் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் அமைத்துள்ளதாக கூறப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல்துறைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காட்சிகள் என்ன?
உண்மை சம்பவத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறையை நிகழ்த்திய காவல்துறை அதிகாரி வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் இல்லை எனும் போது படத்தில் காவல்துறை அதிகாரியை வன்னியராக சித்தரித்தது அவரது வீட்டில் அக்னி கலசம் இருக்கும்படியான காலண்டர் வைத்தது ஆகியவை குறித்து சலசலப்பு எழுந்தது.
மேலும், தயாரிப்பாளரான சூர்யா மீது தாக்குதல் நடத்துவோம் என காடுவெட்டி குருவின் மகம் கனலரசன் மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து நடிகர் சூர்யா படத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்க, இயக்குநர் ஞானவேலும் காட்சிகளை மாற்றி அமைக்கிறோம் என கூறி மன்னிப்பும் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னிய அமைப்பு வழக்குப் பதிவு
ஆனாலும், படத்தின் இந்த பிரச்சனை தொடர்பாக வன்னிய சேனா எனும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
'தேச ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் வன்னியர்களை இழிவுப்படுத்தும் நோக்கிலும் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது' என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்ட புகாரை வேளச்சேரி காவல்துறை ஏற்கவில்லை என கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் ருத்திர வன்னிய சேனா நிறுவன தலைவரான சந்தோஷ் நாயக்கர்.
அவர் அளித்திருந்த மனுவில், 'வன்னியர் சமூகத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசாத வட இந்தியரை கன்னத்தில் அறையும் காட்சி மூலமாக கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள்.
பச்சையம்மாள் என்ற பெயர் வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே வைக்கப்படும் பெயர் எனும் போது அதனை இருளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வைத்திருப்பது எங்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துவது போல உள்ளது" என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் படத்தில் வன்னியர்களை இழிவுப்படுத்தும் முகாந்திரம் இருக்கிறது என கூறி வேளச்சேரி காவல்துறை இன்னும் ஐந்து நாட்களில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை வருகிற 20ம் தேதிக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்