தான்சேனின் கல்லறையில் வளர்ந்துள்ள பெர்ரி இலைகளை சாப்பிட்டு இனிய குரலைப்பெறும் கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அகீல் அப்பாஸ் ஜாஃப்ரி
- பதவி, ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர், கராச்சி
இந்தியாவில் ஒரு இசைக்கலைஞர் இருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது கல்லறையில் ஒரு பெர்ரி செடி வளர்ந்தது. அது பின்னர் பெரிய மரமாக மாறியது என்ற கதை மிகவும் பிரபலமானது.
இன்றும் இசை கற்பவர்கள் அவருடைய கல்லறைக்கு சென்று அந்த மரத்தின் இலைகளை சாப்பிடுகின்றனர். இலைகளை உண்பதால் குரல் இனிமையாக மாறும் என்பது ஒரு நம்பிக்கை.
இந்தக் கல்லறை இசைக்கலைஞர் உஸ்தாத் தான்சேனுடையது. 'குவாலியர் கரானா', பாரம்பரிய இசையில் அற்புதமான அழகு மற்றும் நேர்த்தியை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த கரானாவில், 'துருபத் பாணி' ஆழமான முத்திரையை பதித்தது. பின்னர் அதே சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் 'க்யால் பாணி' பக்கம் திரும்பியபோது, அந்த பிரிவுக்கும் ஒரு பெரிய அடித்தளம் அமைத்தனர். அது, 'குவாலியர் கரானா' என்றும் அழைக்கப்படுகிறது.
முகலாய பேரரசர் ஜலாலுதீன் அக்பரின் காலத்தில் குவாலியர், இசைக்கலையின் முக்கிய மையமாக கருதப்பட்டது. ராஜா மான் சிங் தோமர் (காலம் 1486-1516) என்பவரால் அங்கு ஒரு அகாடமி நிறுவப்பட்டது. அதில் நாயக் பக்க்ஷு போன்ற தனித்துவமான வல்லுநர்கள் இசைக் கலையைக் கற்பிக்க நியமிக்கப்பட்டனர்.
நாயக் பக்க்ஷு 'துருபத்' இல் சிறந்த நிபுணராகக் கருதப்பட்டார். வட இந்தியாவின் இசைக்கலைஞர்கள் மீது அதன் செல்வாக்கு ஷாஜஹான் காலம் வரை ஆதிக்கம் செலுத்தியது. மான் சிங் தோமர், நாயக் பக்க்ஷு, சுல்தான் ஆதில் ஷா சூரி மற்றும் ஹஸ்ரத் முகமது கவுஸ் குவாலியோரி ஆகியோர் காரணமாக, 'குவாலியர்', இசையின் முக்கிய மையங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.
அக்பரின் அரசவையில் இருந்த 18 பாடகர்களில் பதினோரு பேர் குவாலியருடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேரரசர் அக்பரின் அரசவையுடன் தொடர்புடைய குவாலியரின் பாடகர்களில் மிகவும் பிரபலமானவர் உஸ்தாத் தான்சேன்.
பேராசிரியர் முகமது அஸ்லம், தனது 'சலாட்டின்-இ-டெல்லி மற்றும் ஷஹான்-இ-முகலியா கா ஸாக்-இ-மௌசிகி' என்ற புத்தகத்தில் உஸ்தாத் தான்சேனைப் பற்றி எழுதியுள்ளார்.
" தான்சேனின் பெயரைக் கேட்டவுடன் மற்ற பாடகர்கள் ஆதீத மரியாதை தருவார்கள். அவர் குவாலியருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்தவர்.
அவரது தந்தை மகரந்த் பாண்டே ஒரு கவுர் பிராமணர்.அவருக்கு ஹஸ்ரத் முகமது கவுஸ் குவாலியோரியிடம் மிகுந்த மரியாதை இருந்தது. மக்ரந்த் பாண்டேக்கு குழந்தை இல்லை. தனக்கு குழந்தை பிறக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு ஹஸ்ரத் முகமது கவுஸிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்."

பட மூலாதாரம், DEPARTMENT OF POST/INDIA
"ஹஸ்ரத் முகமது கவுஸின் பிரார்த்தனையால் தான்சென் பிறந்தார். தான்சேனுக்கு ஐந்து வயது ஆனபோது, மகரந்த் பாண்டே அவரை ஹஸ்ரத் முகமது கவுஸிடம் அழைத்துச் சென்று, தான்சேனை இசையில் வல்லவராக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஹஸ்ரத் அப்போது வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்தார். தான்சேனின் வாயில் தனது எச்சிலை விட்டார். இவன் எங்கள் மதத்தை விட்டுப்போய்விட்டான். இனி உங்கள் காலடியில் இருப்பான் என்று மகரந்த் பாண்டே கூறிவிட்டார்.
ஹஸ்ரத் முகமது கவுஸ் தான்சேனை தனது மகன்களைப் போலவே வளர்க்கத் தொடங்கினார். குவாலியரின் பிரபல இசைக்கலைஞர்களின் மேற்பார்வையில் அவருக்கு இசைக் கல்வியை அளித்தார். தான்சேனும் சில காலம் சுல்தான் அதில் ஷாவிடம் இசை பயின்றார். அதன் பிறகு தெற்கு நோக்கி சென்று நாயக் பக்க்ஷுவின் மகளிடம் ராகங்களை கற்றார்.
பாபா ஹரிதாஸிடம் இருந்து தான்சென் ராகங்களின் கல்வியை கற்றதாக சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தான்சேன் தனது வாழ்நாள் முழுவதும் ஹஸ்ரத் முகமது கவுஸ் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். அவர் காரணமாகவே தானும் ஒரு முஸ்லிம் ஆனார். பின்னர் அவரது சீடர்களின் வட்டத்தில் சேர்ந்தார். பீர் மற்றும் முரீத் அதாவது குரு -சீடர் என்ற இந்த உறவு பிரிக்க முடியாதது.
தான்சேன், ஹஸ்ரத் முகமது கவுஸின் கல்லறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது குருவின் கல்லறையைப் போலவே தான்சேனின் கல்லறையும் அனைவரின் மரியாதைக்குரிய மையமாக உள்ளது. துணைக்கண்டத்தின் பிரபல பாடகர்கள் அங்கு பாடுவதை பெருமையாக கருதுகின்றனர்.
தனது கல்வியை முடித்த பிறகு, தான்சேன் ராஜா ராம்சந்திராவிடம் வேலைக்குச் சேர்ந்தார். ராஜா ராமச்சந்திரா தான்சேனின் தீவிர ரசிகர். ஒருமுறை தான்சேனின் பாடலைக் கேட்ட அவர், அவருக்கு ஒரு கோடி சன்மானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.
தான்சேனின் கலையின் புகழ் அக்பரின் அரசவையை எட்டியதும், ராஜா ராமச்சந்திராவிடம் கூறி அவரை ஆக்ராவிற்கு வரவழைத்தார். அக்பரின் அரசவையில் தான்சேனுக்கு ஒரு தனி இடம் இருந்தது அவர் அக்பருக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார்.

பட மூலாதாரம், FILM POSTER/ TANSEN
அக்பரின் விருப்பத்திற்கு இணங்க தான்சேன் தர்பாரி கான்ஹரா, தர்பாரி கல்யாண், தர்பாரி அசாவரி மற்றும் ஷஹானா போன்ற ராகங்களை இயற்றினார்.
'மியான் கி மல்ஹார்', 'மியான் கி தோடி' மற்றும் 'மியான் கி சாரங்' ஆகியவையும் தான்சென் இயற்றிய ராகங்கள் என்று டாக்டர் அப்துல் ஹலிமின் ஆராய்ச்சி கூறுகிறது. அதிர்ஷ்டவசமாக, தான்சேன் உருவாக்கிய ராகங்களின் கையெழுத்துப் பிரதிகள் ராம்பூரில் உள்ள ரஸா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இசைக் கலைக்கு தான்சேன் ஆற்றிய சேவையைப் பற்றி சையத் அபித் அலி இவ்வாறு எழுதுகிறார். "அவர் கிளாசிக்கல் இசைக்கு ஒரு புதிய ரசத்தையும், ஒரு புதிய இனிமையையும், புதிய பாவத்தையும் கொடுத்தார். அவர் ராகங்களில் மிகவும் கவர்ச்சிகரமான சோதனைகளைச் செய்தார். இந்த ராகங்களும் அந்த சோதனைகளுடன் அவருடைய பெயரால் அறியப்படுகின்றன.
உதாரணமாக மியான் கி தோடி, மியான் கி மல்ஹர். ஆனால் பாரம்பரிய இசையில் தான்சேன் பெயரை என்றென்றும் நிலைக்க வைத்துள்ள ராகம் தர்பாரி. இந்த ராகத்தை கேட்கும்போது இதயத்தின் உறங்கும் ஆசைகள் விழித்தெழுகின்றன, மேலும் பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுகிறது என்று அக்பர் கூறுகிறார்."
இரவின் முதல் பகுதி கடந்து நள்ளிரவு தொடங்குவதற்கு சற்று முன், இந்த ராகம் பாடப்படுகிறது. மெதுவாகத் தொடங்கும் 'நி சா ரே தானி பா' என்று பாடத் தொடங்கும் போதே மனம் அமைதி பெறுகிறது என்று தர்பாரி ராகம் பற்றி எழுதுகிறார் பேராசிரியர் காதிம் மொகியுத்தீன்.
இந்த ராகத்தின் பெரும்பாலான ஸ்வரங்களின் முக்கியத்துவம், கீழ் ஏழு ஸ்வரங்களில் அமைந்துள்ளது. இது அக்பரின் விருப்பமான ராகம். அரச விவகாரங்களில் நாள் முழுவதும் உழன்ற பிறகு பேரரசர் அமைதியையும் சாந்தியையும் தேடுவது வழக்கம். எனவே தான்சேன் இந்த ராகத்தை பாடுவார்.
'என்னைத் தவிர சிறந்தவர் வேறு யாருமில்லை' என்று எப்போதும் முழக்கமிடும் அபுல் ஃபசல், தான்சேனின் தகுதியை உணர்ந்து, 'கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அவரைப் போன்ற ஒரு பாடகர் இந்த மண்ணில் பிறக்கவில்லை' என்று எழுதுகிறார்.
தான்சேன் தெற்கு நோக்கிச் சென்று நாயக் பக்க்ஷுவின் மகளிடம் ராகப் பாடங்களைப் பெற்றதாக பேராசிரியர் முகமது அஸ்லம் எழுதுகிறார். மாதாந்திர 'ஆஜ்கல்' இசை எண் - 1956 ஆகஸ்ட் இதழில் சேர்க்கப்பட்டுள்ள தான்சேன் பற்றிய தனது கட்டுரையில் இந்த சம்பவத்தை காசி மிராஜ் தோல்பூர் விவரித்துள்ளார். "தான்சேனின் தொண்டையில் இனிமை மற்றும் ரசம், ஹஸ்ரத் முகமது கவுஸின் வெற்றிலை பாக்கின் தாக்கத்தால் ஏற்பட்டது.
அதனாலேயே தான்சேனுக்குப் பாடும் நாட்டம் அதிகரித்தது. அதுவரை இசை விதிகளை அறியாதவராக இருந்த போதிலும், அவரது இனிமையான பாடல் எல்லா இடங்களிலும் பிரபலமானது."
"பின்னர் ஹஸ்ரத் முகமது கவுஸ் அவரை 1532 இல் ராஜா மான்சிங் குவாலியரில் நிறுவிய இசைப்பளியில் சேர்த்தார். அப்போது அங்கே முச்சு, பன்வர் என்ற இருவர் தங்கள் கலையில் நிகரற்ற வல்லுநர்கள் இருந்தனர். அவர்களது உஸ்தாத் (ஆசிரியர்) பக்க்ஷு அந்த நேரத்தில் காலமாகிவிட்டார். அவர் தனது காலத்தின் சிறந்த பாடகராக இருந்தார். ராஜா மான் சிங்கின் சிறந்த நண்பராகவும் அவர் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ராஜா, தனது ராணி மிருகநயனியின் பெயரில் இந்தப் பள்ளியை நிறுவினார்.ராணி ஒரு உயர்தர கலைஞர் ஆவார். பாடுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் அவர்.
நான்கு-ஐந்து ஆண்டுகளில் அந்தப் பள்ளியில் பயிற்சி எடுத்த பிறகு தான்சேன் அங்கிருந்து கிளம்பினார். ஆனால் உஸ்தாத் பக்க்ஷுவின் வழிகாட்டுதல் தனக்குக் கிடைக்கவில்லை என்று அவர் எப்போதும் வருந்தினார்.
பக்க்ஷுவின் மகள் கணவருடன் தெற்கில் வசித்து வந்தார். பக்க்ஷு தனது திறமை அனைத்தையும் தனது மகளுக்கு அளித்திருந்தார். எனவே தான்சேன் அவருக்கு சேவை செய்து பக்க்ஷுவின் இசை அறிவைப் பெறத் தீர்மானித்தார். தனது குருவின் அனுமதியுடன் தென்னிந்தியாவை அடைந்தார்.
பக்ஷூவின் மகளிடம் பாடிக்காண்பித்தார். ஆனால் அவர் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. மகனே நீ மேலும் கற்கவேண்டும் என்று அவர் கூறிவிட்டார். தான்சென் வெறுங்கையுடன் திரும்பினார். தன் குருவிடம் முழு விவரத்தையும் சொன்னார். அவர் தான்சேனுக்கு ஆறுதல் கூறினார், பதற்றப்பட வேண்டாம். ஒரு நாள் பக்க்ஷூவின் மகள் உன்னுடைய திறமையை ஏற்றுக்கொள்வார் என்று சொன்னார்.
இரவில் இந்தக் கொந்தளிப்பிலும் விரக்தியிலும் தான்சேன் உறங்கிப் போனார். ஒரு முதியவர் பாடிக்கொண்டு ஏதோ சொல்வதுபோல கனவு கண்டார். பல உயர்நிலையிலான பாடல்களையும் கனவின் மூலம் அந்த முதியவர் கற்றுக்கொடுத்தார்.
தான்சேன் கண்விழித்தபோது இந்த பாடல்கள் அவருக்கு நினைவில் இருந்தன. முதியவர் கற்றுத்தந்த அனைத்துமே அவரது மனதிலும் மூளையிலும் பதிந்துவிட்டன. அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கனவு பற்றி தனது குருவிடம் அவர் விவரித்தார். அந்த விஷயங்களை மறக்க வேண்டாம் ,. பக்க்ஷு உன்னை கலையில் வல்லவனாக ஆக்கிவிட்டார் என்றார் குரு.
பக்க்ஷுவின் நன்கு அறியப்பட்ட சீடர்களிடம் தான்சேன் பயிற்சி பெற்றார். நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்படுவது உணரப்பட்டது. தான்சேனுக்கு முழு நம்பிக்கை வந்ததும் மீண்டும் தெற்கே செல்ல முடிவு செய்தார். உஸ்தாத் பக்க்ஷுவின் மகளிடம் பாடிக்காட்டினார். தன் குடும்பத்தின் எல்லா கல்வியையும் தான்சேன் பெற்றிருப்பதைப்பார்த்து திகைத்துப்போன அவர், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எஞ்சிய கல்வியை தான்சேனுக்கு வழங்கினார்.
தான்சேன் அக்பரின் கட்டளையின் பேரில் 16 ஆயிரம் ராகங்களையும், 360 தாளங்களையும் ஆய்வு செய்தார். விரிவான சிந்தனைக்குப் பிறகு, இருநூறு மூல ராகங்களையும் தொண்ணூற்று இரண்டு அடிப்படை தாளங்களை மட்டுமே நிறுவி, மீதமுள்ளவற்றை நீக்கிவிட்டார். இது தான்சேன் செய்த மாபெரும் சாதனை.
தான்சேன் என்ற இதழில் , அந்த பொற்காலப் படைப்பான ராகங்களையும் தாளங்களையும் பாடும் விதவிதமான முறைகள் அழகாக சொல்லப்பட்டுள்ளன.
"தான்சேன் பழைய ராகங்களுக்கு புதிய வடிவம் கொடுத்தது மட்டுமல்லாமல், மியான் கி தோடி, மியான் கா சாரங் மற்றும் மியான் கா மல்ஹார் போன்ற பல புதிய ராகங்களை உருவாக்கினார். தர்பாரி மற்றும் ஷாம் கல்யாண் போன்ற ராகங்கள் அக்பருக்கு மிகவும் பிடித்தமானவை. அவர் அடிக்கடி அவற்றை பாடுமாறு கேட்பார்," என்று பேராசிரியர் முகமது அஸ்லம் எழுதுகிறார்.

பட மூலாதாரம், TANSEN/BOOK TITLE/AMAZON
துருபத் பாணியில், குவாலியர் கரானாவின் சிறந்த பிரதிநிதியாக தான்சேன் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாமல், பல வரலாற்றாசிரியர்கள் அவரை குவாலியர் கரானாவின் நிறுவனராகக் கருதுகின்றனர்.
தான்சேன் காலத்தில் துருபத், இந்திய இசையில் சாஸ்த்ரிய பாணியாக அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் அது நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டது. அவை கௌரஹார், கண்டஹார், நௌவஹார் மற்றும் தாகர். இவற்றில் இரண்டு பிரிவுகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.
தான்சேனின் துருபத் பாணியில் இருந்து ஒன்றல்ல, இரண்டு கரானாக்கள் புழக்கத்திற்கு வந்து அவை தொடர்ந்தன. தான்சனின் மூத்த மகன் தான் தரங்-( 1536-1602) படுவது சேனியா கரானா என்று அழைக்கப்பட்டது. துருபத் பாணி வாய்ப்பாட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை.
இரண்டாவது பாணி தான்சேனின் இளைய மகன் பிலாஸ் கான் மூலம் வளர்ந்தது. துருபத்தின் இந்த பாணியில், இசைக்கருவிகளும் இணைந்தன. இந்த பாணியின் இசைக்கலைஞர்கள் ருபாப், பீன் (ருத்ர வீணை) மற்றும் சிதார் வாசிப்பதில் சிறந்து விளங்கினர். ஆனால் அவர்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தினர். இசைக்கருவி மற்றும் குரலை ஒத்திசைத்து ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கினர். இன்றும் அதன் தாக்கத்தை ராம்பூர் கரானா, ஷாஜஹான்பூர் கரானா மற்றும் இட்டாவா கரானாவில் காணலாம்.
துணைக்கண்டத்தில் தான்சேன் வாழ்க்கை குறித்து பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தலைப்பில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 1943 இல் வந்தது, இதில் கே.எல்.செய்கல், தான்சேன் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தை இயக்கியவர் ஜெயந்த் தேசாய்.
1990 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் தொலைக்காட்சி இந்த தலைப்பில் ஒரு தொலைக்காட்சி தொடரை உருவாக்கியது. இதன் தயாரிப்பாளர் குவாஜா நஜ்முல் ஹசன். மற்றும் எழுத்தாளர் ஹசினா மொயீன். அந்த தொலைக்காட்சி தொடரில் ஆசிஃப் ராசா மிர் மற்றும் ஜெபா பக்தியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












