புஷ்கர விழா: தமிழ்நாடு ஆளுநர் ரவியின் வருகைக்கு தருமபுரத்தில் எதிர்ப்பு வலுப்பது ஏன்?

தமிழ்நாடு ஆதின மடாலயம்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரவுள்ள மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்த்து தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தை அறிவித்துள்ளன. `420 ஆண்டுகால தமிழ்மரபு உள்ள மடமாக தருமபுரம் ஆதீனம் உள்ளது. அங்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு ஆளுநரை அழைப்பதன் மூலம் இதுவரையில் எந்த ஆதீனமும் செய்யாத தவறை அதன் தலைமை செய்துள்ளது' என்கின்றன தமிழ் அமைப்புகள். என்ன நடக்கிறது?

தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுர ஆதீனத்தில் இருந்து ஞானரதம் ஒன்று ஏப்ரல் 19ஆம் தேதி புறப்பட உள்ளது. இந்த ரதத்தின் பயணத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறைக்கு வரவிருக்கிறார்.

ஆனால், `தருமபுரம் ஆதீனம் ஆளுநருக்கு விடுத்த அழைப்பைத் திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தும் போராட்டத்துக்கு 13க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த சனிக்கிழமை தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சென்ற திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை அளித்தனர்.

தங்களுடைய கோரிக்கையை மீறி ஆளுநரை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அதன் நிர்வாகிகள் எச்சரித்தனர்.

தருமபுரம் ஆதினம்

இதைக் கண்டித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், `திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தூண்டுதலில் மடத்துக்கு ஆளுநர் வருவதை எதிர்த்து மனு கொடுத்துள்ளனர். இந்து மத கலாசாரத்தை ஒழிக்கும் நோக்கில் இவ்வாறு மனு கொடுத்துள்ளனர். அதை இந்து மதத்துக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறோம்' என்றார்.

ஆதினம் தருமபுரம்

மேலும், `ஆளுநர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பிற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டி ஆளுநரை வரவேற்போம்' என்றும் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.

எந்த ஆதீனமும் செய்யாத தவறு

``ஆளுநர் வருகையை எதிர்ப்பது ஏன்?'' என தமிழ் மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் செயராமனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.

ஜெயராமன்
படக்குறிப்பு, பேராசிரியர் செயராமன், தமிழ் மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர்

``தருமபுரம் ஆதீனத்தில் இருந்து புஷ்கர விழாவுக்காக ஞானரதம் ஒன்று தெலங்கானா வரை செல்கிறது. அதைத் தொடங்கி வைப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைத்துள்ளனர். இதை எதிர்த்து நாங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளோம். காரணம், தருமபுரம் ஆதீனம் என்பது 420 ஆண்டுகால தமிழ்மரபு உள்ளது. அதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இதுவரையில் எந்த ஆதீனகர்த்தரும் செய்யாத தவறை இவர்கள் செய்கிறார்கள்'' என்கிறார் செயராமன்.

தொடர்ந்து பேசிய அவர், ``ஒரே நாடு, ஒரே மொழி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவராக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அவரை அழைக்கும் ஆதீனத்தின் செயலை தமிழ், தமிழ்நாடு, இனம் ஆகியவற்றுக்கு விரோதமானதாகக் கருதுகிறோம். பொதுவாக, ஆளுநர் என்பவர் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். ஆர்.என்.ரவியோ, தமிழ்நாட்டுக்கு விரோதமானவராக இருக்கிறார்.

இவரது ஒப்புதல் கிடைக்காமல் 18 மசோதாக்களும் தீர்மானங்களும் கிடப்பில் உள்ளன. மாநில அரசின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவை மாதக்கணக்கில் முடக்கிப் போடும் வேலையை இவர் செய்கிறார். இதை எதிர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. அதன் ஒரு பகுதியாகத்தான் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை மாநில அரசு புறக்கணித்தது. அதனை சரியான நடவடிக்கையாகப் பார்க்கிறோம்,'' என்கிறார்.

"எங்களுக்கு வேறு வழியில்லை"

``இது தொடர்பாக, ஆதீனத்தை சந்தித்துப் பேசினீர்களா?'' என்றோம்.

``ஆதீனத்திடம் மனு கொடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமையன்று சென்றோம். அங்கு ஆதீனகர்த்தர் இல்லாததால் மேலாளரிடம் கொடுத்தோம். இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறார். அதை ஏற்க முடியாது. தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் தருமபுரம் ஆதீனம் ஆளுநரை அழைப்பது என்பது முரணானது. இதைக் கண்டித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,'' என்கிறார் .

``போராட்டம் நடத்துகிறவர்கள் மீது கடுமையான விமர்சனத்தை பாஜக முன்வைத்துள்ளதே?'' என்று கேட்டோம்.

``ஆளுநர் பொதுவானவராக இல்லை. ஒரே நாடு, ஒரே மொழியை ஏற்கவில்லை என ஆளுநர் சொல்வாரா? இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து தவறு என பேசுவாரா? ஆளுநர் 'பொதுவானவர்' என்றால் தேநீர் விருந்தை மாநில அரசு ஏன் புறக்கணிக்க வேண்டும்? தமிழ்நாட்டின் நிர்வாகத்தை முடக்குவதையும் சட்டமன்றத்தை முடக்குவதையும் தலையாய கடமை வைத்துள்ள ஓர் ஆளுநரை தமிழ்நாடு இப்போதுதான் சந்திக்கிறது. இங்கு தமிழ் மொழியை ஒழிப்பதாக இருந்தாலும் பா.ஜ.கவினர் வரவேற்பார்கள். எங்களுக்கு கட்சி என்பதெல்லாம் கிடையாது. தமிழ் மொழிக்கு எந்தவகையில் ஆபத்து வந்தாலும் எதிர்ப்போம்'' என்கிறார் செயராமன்.

வி.சி.க சொல்வது என்ன?

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, ``தமிழ்நாடு அரசு இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து அரசுக்கும் மக்களுக்கும் நல்லது நடப்பதை ஊக்கப்படுத்துவதுதான் ஆளுநரின் பணி. தமிழ்நாடு அரசின் வரியில் இருந்துதான் அவருக்கு சம்பளமும் வசதி வாய்ப்புகளும் கொடுக்கப்படுகிறது. இதுவரையில் மிக முக்கியமான 9 மசோதாக்கள் இயற்றப்பட்டுள்ளன. அதில் ஏழு பேர் விடுதலையும் முக்கியமானது. அதைப் பற்றியெல்லாம் ஆளுநர் பேசுவதில்லை'' என்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாடு ஆளுநர்
படக்குறிப்பு, வன்னி அரசு, துணைப் பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

மேலும், ``நீட் தேர்வு, கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதா, மண்ணின் மைந்தர்கள் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதா ஆகியவற்றைக் கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, ராமராஜ்ஜியம் பற்றிப் பேசுவது என ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக அவர் செயல்படுகிறார். தருமபுரம் மடத்துக்கு மட்டுமல்லாமல் ஆளுநர் எங்கு சென்றாலும் எதிர்ப்பு காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த மசோதாக்கள் முடிவுக்கு வரும். தனிப்பட்ட முறையில் ஆளுநர் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை. ஆளுநர் வேலையைச் செய்யாமல் ஆர்.எஸ்.எஸ் தலைவராக அவர் செயல்படுவதுதான் பிரச்னையே'' என்கிறார் வன்னியரசு.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியா?

ஆளுநரின் வருகைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது.

பாஜக நாராயணன் திருப்பதி
படக்குறிப்பு, நாராயணன் திருப்பதி, தமிழ்நாடு பாஜக செய்தித்தொடர்பாளர்

``நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராததால் ஆளுநரை எதிர்ப்பது என்பது தவறானது. உச்ச நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு இது. திமுகவும் இதர கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடாமல் சட்டமன்றத்தில் தீர்மானத்தை இயற்றிவிட்டோம் எனக் கூறுவது சரியல்ல. ஆன்மிக நிகழ்ச்சிக்கு செல்லும் ஆளுநரை கண்டித்தும் ஆதீனத்தை கண்டித்தும் பேசுவதும் ஏற்புடையதல்ல.

மேலும், இவர்கள் இந்துக் கடவுள்களை எதிர்த்துப் பேசுகிறார்கள். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியாகத்தான் இதனைப் பார்க்கிறோம். ஒரு மதத்தினரின் மனம் புண்படும் வகையில் பேசி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும். புஷ்கர விழாவைத் தடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கினால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

மேலும், ``இந்து நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்தி, நாத்திகர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் இவர்களுக்கு, ஆன்மிக விவகாரங்களில் தலையிடவோ, ஆன்மிகவாதிகள் குறித்து விமர்சனம் செய்யவோ எந்த தகுதியும் இல்லை'' என்கிறார்.

ஆளுநரின் வருகைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிடம் பேசுவதற்காக மடத்தின் தொலைபேசி எண்ணுக்கு பலமுறை அழைத்தும் பதில் கிடைக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :