பீஸ்ட்: “அரசு பதவிகளில் உள்ளோரை விமர்சிக்க வேண்டாம்” - விஜய் சார்பில் அறிக்கை

பட மூலாதாரம், Sun Pictures/Beast
அரசியல் பதவிகளில் உள்ளோர்களை விமர்சிக்க வேண்டாம் என விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை
"அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது." என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாஜக எதிர்ப்பு நிலையா?
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது.
அதில் நடிகர் விஜய் காவிக் கலரில் ஒரு ஸ்கீரினை கிழிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இது பாஜகவை எதிர்க்கும் விதமாக வைக்கப்பட்ட காட்சி என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் எழுந்தன.
பாஜக தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஜய்யின் சார்பாக இப்படி ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது.
முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு
இதற்கிடையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதாக சொல்லி, தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி படத்தை தமிழ்நாட்டில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
"தற்போது ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இது போன்ற சமயத்தில் அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த திரைப்படம் இப்போது வெளிவந்தால் பிரச்னை ஏற்படும்.

பட மூலாதாரம், Sun Pictures
அதனால், அந்த திரைப்படத்தை வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்," என அந்த கட்சியின் தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மேலும் குவைத்திலும் 'பீஸ்ட்' படம் சென்சார் ஆகாமல் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. இந்த மாதம் 13ம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், ரெடின் ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் இருந்து 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை ஒட்டி பல வருடங்களுக்கு பிறகு விஜயின் நேர்காணலையும் ஒளிபரப்பவுள்ளது சன் பிக்சர்ஸ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












