விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்திற்கு ட்ரைலரை வைத்து தடை கோருவது ஏன்?

பட மூலாதாரம், Nelsondilipkumar
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, செய்தியாளர்
நடிகர் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நேற்று மாலை தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிக்கை விடுத்துள்ளது. என்ன காரணம்?
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. இந்த மாதம் 13ம் தேதி நேரடியாக திரையரங்குகளில் இந்த வெளியாக இருக்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், ரெடின் ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் இருந்து 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் 'பீஸ்ட்' படத்திற்காக நடிகர் விஜய் பத்தாண்டுகளுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டியும் கொடுத்துள்ளார். விஜயிடம் நேர்க்காணல் செய்தவர் இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
'பீஸ்ட்' படத்திற்கு தடை கோரிக்கை- என்ன காரணம்?
கடந்த வாரம் சனிக்கிழமை இந்தப் படத்தின் முன்னோட்ட காட்சிகளை (ட்ரைலர்) தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அதில், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக சொல்லி, தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளது.
"தற்போது ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இது போன்ற சமயத்தில் அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த திரைப்படம் இப்போது வெளிவந்தால் பிரச்சனை ஏற்படும்.
அதனால், அந்த திரைப்படத்தை வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்," என அந்த கட்சியின் தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மேலும் குவைத்திலும் 'பீஸ்ட்' படம் சென்சார் ஆகாமல் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும் குவைத் நாட்டில் தடை பற்றியும் சினிமா பத்திரிக்கையாளர் வெற்றியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
சட்ட ரீதியாக ஏன் அணுகவில்லை?
ட்ரைலர் மட்டுமே தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த காட்சிகளை வைத்து மட்டுமே எந்தவொரு முன் முடிவும் எடுப்பது தவறு என்று கூறிய அவர், "ஒரு படம் வரலாமா? வேண்டாமா ? அந்த படத்தில் ஆட்சேபகரமான விஷயங்கள் ஏதும் இருக்கிறதா? என்பது அனைத்தையும் பற்றியும் முடிவெடுக்க கூடிய அதிகாரம் தணிக்கை குழுவிடம் மட்டும்தான் இருக்கிறது.
தணிக்கை குழு இதில் எந்த பிரச்சனையும் இல்லை என சான்றிதழ் கொடுத்த பிறகு எந்தவொரு அரசியல் கட்சியோ தனிப்பட்ட அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிப்பது என்பது தேவையில்லாத ஒன்று. இதற்கு முன்பும் பல படங்களுக்கு இது போன்று நடந்திருக்கிறது.
ஒரு படத்தில் இது போன்று ஏதேனும் விஷயம் ஆட்சேபகரமாக இருந்தால் சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை முன்பே செய்யலாம். இல்லை என்றால் சென்சார் அமைப்பிலோ, அரசிடமோ, நாடாளுமன்றத்திலோ முறையிடலாம். அது இல்லாமல், அதிரடியான அறிக்கை ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது. இந்த படத்திற்கு மட்டுமில்லை. எல்லா படங்களுக்குமே இது பொருந்தும்" என்கிறார்.

பட மூலாதாரம், BEAST
தொடர்ந்து நடிகர் விஜய் படங்கள் மீது மதம் சார்ந்த இது போன்ற பிரச்சனைகள் வருவது பற்றி கேட்ட போது, "சர்ச்சைக்குரிய விஷயங்களை படத்தில் காட்சிகளாக வைத்து பரபரப்பாக பேசவைப்பதன் மூலம் பட வெளியீடு சமயத்தில் பயன்படுத்தப்படும் விளம்பர உத்தியாகவும் இதை பார்க்கலாம். 'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி என்ற விஷயத்தை வைத்தார்கள், 'துப்பாக்கி' படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததை எடுத்து கொள்ளலாம்," என்கிறார் அவர்.
"இஸ்லாமியர்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது"
"முஸ்லீம்கள் கேட்பதும் நியாயமான ஒரு விஷயம் தான். ஏனென்றால் தொடர்ந்து சில படங்களிலும் அப்படியே சித்தரித்து வருகிறார்கள். தீவிரவாதிகள் என்றால் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் என்று காட்டியே ஆக வேண்டிய அவசியம் என்ன? அதையும் தவிர்க்கலாமே? குறிப்பிட்ட ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமா தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்? 'ஜெய்பீம்', 'விஸ்வரூபம்' படங்களுக்கும் முன்பு இப்படிதானே நடந்தது. இதனால், இயக்குநர்களின் படைப்பு திறனுக்கும் பாதிப்பு இருக்கத்தானே செய்கிறது" என்கிறார்.
குவைத்தில் தடை ஏன்?
சினிமா என்பது ஒரு வியாபாரம். அதை யாருக்கும் பாதகமில்லாமல் எடுத்து செல்ல வேண்டும். சமீபத்தில் மதம் சார்ந்து எடுக்கப்படும் சினிமாக்களும் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்ட அவர் குவைத் உள்ளிட்ட நாடுகளில் 'பீஸ்ட்', முன்பு 'FIR' பட வெளியீட்டுக்கு தடை விதித்தது குறித்தும் பேசினார். "ஒரு படத்தை வெளியிட ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பாலிசி இருக்கும்.
உதாரணமாக இந்தியாவில் இந்து கடவுள்களை அவமரியாதை செய்வது போன்ற படங்கள் வந்தால் நிச்சயம் அதை தடை செய்வார்கள். அரேபிய நாடுகள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. 'பீஸ்ட்' படத்தில் வன்முறை அதிகம் என தடை செய்திருக்கிறார்கள். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததால் தடை விதித்தார்கள். அதை நாம் தவறு என்று சொல்ல முடியாது" என்கிறார் வெற்றி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













