கேஜிஎஃப் 2: 121 ஆண்டுகளில் 900 டன் தங்கம் - கோலார் தங்க வயலின் வரலாறு என்ன?

பட மூலாதாரம், KGF FACEBOOK
- எழுதியவர், ஹர்ஷல் ஆகுடே
- பதவி, பிபிசி மராத்தி
(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 34வது கட்டுரை இது.)
"என் கேஜிஎஃப் ஐ எடுக்க வருகிறேன் என்று அவர்களிடம் சொல்லுங்கள்." கேஜிஎஃப்-2 படத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் இந்த டயலாக் பற்றி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலர் வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் வீடியோவை யூடியூப்பில் இரண்டு நாட்களில் 6 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இந்தப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனால் சமூக வலைத்தளங்கள் உட்பட எல்லா இடங்களிலும் இந்தப் படம் பற்றிய விவாதம் நடந்து வருகிறது.
இந்தப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் முக் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் முதலில் கன்னட மொழியில் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் முதல் பாகம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 2018 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. இந்தப்படம் நாடு முழுவதிலுமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு ரசிகர்கள் அதன் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர்.
கேஜிஎஃப் வரலாறு
கேஜிஎஃப்அதாவது கோலார் தங்க வயல் கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு கோலார் மாவட்டத்தின் தலைமையகத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ராபர்ட்சன்பேட்டை தாலுகாவில் இந்த சுரங்கம் உள்ளது.
பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையில், பெங்களூருவுக்கு கிழக்கே 100 கி.மீ தொலைவில் கேஜிஎஃப் டவுன்ஷிப் உள்ளது. 'தி குயின்ட்' என்ற செய்தி இணையதளம் தனது செய்தி ஒன்றில் KGF-ன் புகழ்பெற்ற வரலாற்றைப் பற்றி எழுதியுள்ளது.
1871 இல் நியூசிலாந்தில் இருந்து இந்தியா வந்த பிரிட்டிஷ் சிப்பாய் மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் லெவெல்லி பெங்களூரில் தனது இல்லத்தை அமைத்தார். அவர் படிப்பதில் அதிக நேரத்தைச் செலவிட்டார்.
இதற்கிடையில் அவர் 1804 இல் ஏசியாடிக் ஜர்னலில் வெளியான நான்கு பக்க கட்டுரையைப் படித்தார். அதில் கோலாரில் கிடைக்கும் தங்கம் பற்றி கூறப்பட்டிருந்தது. இந்தக்கட்டுரையால் கோலார் மீதான அவரது ஆர்வம் அதிகரித்தது.
இந்த விஷயத்தைப்பற்றி தொடர்ந்து ஆராய்ந்தபோது, பிரிட்டிஷ் அரசின் லெப்டினன்ட் ஜான் வாரனின் கட்டுரையை லெவெல்லி கண்டார். 1799 ஸ்ரீரங்கப்பட்டினம் போரில், திப்பு சுல்தானைக் கொன்ற பிறகு ஆங்கிலேயர்கள் கோலாரையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் கைப்பற்றினர் என்று அவருக்கு தெரிய வந்தது.
சில காலத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் இந்த நிலத்தை மைசூர் மன்னருக்கு வழங்கினர். ஆனால் கோலார் நிலத்தை ஆய்வுக்காக அவர்கள் தங்களிடம் வைத்திருந்தனர்.

பட மூலாதாரம், AFP/GETTY
தங்கத் தேடல்
சோழப் பேரரசில் மக்கள் கையால் நிலத்தை தோண்டி தங்கம் எடுப்பார்கள். அதன்பிறகு தங்கம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தார் வாரன்.
அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குப்பிறகு மாட்டு வண்டியில் சில கிராமவாசிகள் வாரனிடம் வந்தனர். அந்த மாட்டு வண்டியில் கோலார் பகுதியின் மண் ஒட்டிக்கொண்டிருந்தது. கிராம மக்கள் வாரன் முன்னிலையில் மண்ணைக் கழுவியபோது, அதில் தங்கத்தின் தடயங்கள் காணப்பட்டன.
வாரன் மீண்டும் விசாரிக்கத் தொடங்கினார். கோலார் மக்கள் தங்கத்தை கையால் தோண்டி எடுத்தால் 56 கிலோ மண்ணில் இருந்து சிறிதளவே தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்பதை வாரன் அறிந்து கொண்டார்.
"இவர்களின் சிறப்புத் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன், அதிக தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்" என்று வாரன் கருதினார்.
வாரனின் இந்த அறிக்கைக்குப் பிறகு, 1804 மற்றும் 1860 க்கு இடையில், இந்த பகுதியில் நிறைய ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் நடந்தன. ஆனால் ஆங்கிலேய அரசுக்கு அதிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஆராய்ச்சியால் பலன் ஏதும் கிடைக்கவில்லை என்பதோடு கூடவே பலர் தங்கள் உயிரையும் இழந்தனர். அதன் பிறகு அங்கு அகழ்வாராய்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் 1871 இல், வாரனின் அறிக்கையைப் படித்த பிறகு, லெவெல்லியின் மனதில் கோலார் பற்றிய ஆர்வத்தின் வலு கூடியது.
லெவெல்லி ,பெங்களூரில் இருந்து கோலார் வரை 100 கி.மீ தூரம் மாட்டு வண்டியில் சென்றார். சுமார் இரண்டு வருடங்கள் அங்கு ஆராய்ச்சி செய்த பிறகு, 1873 இல், லெவெல்லி அந்த இடத்தில் அகழ்வு செய்ய மைசூர் மகாராஜாவிடம் அனுமதி கேட்டார்.
லெவெல்லி கோலார் பகுதியில் 20 ஆண்டுகள் வரை தோண்டுவதற்கான உரிமம் பெற்றார். அதன் பிறகு 1875 ஆம் ஆண்டு அந்த இடத்தில் வேலை தொடங்கியது.
முதல் சில வருடங்களில், லெவெல்லியின் பெரும்பாலான நேரம் பணம் திரட்டுவதிலும், ஆட்களை வேலைக்கு தயார் செய்வதிலும் செலவானது. மிகுந்த சிரமத்திற்குப் பிறகு, கேஜிஎஃப்பில் தங்கம் பிரித்தெடுக்கும் பணி தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
கேஜிஎஃப்: மின்சார வசதி பெற்ற இந்தியாவின் முதல் நகரம்
கோலார் தங்க வயல்களில், தீப்பந்தங்கள் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் எரியும் விளக்குகள் வெளிச்சத்தை அளித்தன. ஆனால் இது போதுமானதாக இல்லை. எனவே அங்கு மின்சாரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவில் மின்சாரம் பெற்ற முதல் நகரமாக கோலார் ஆனது.
கோலார் தங்க வயலின் மின் தேவையை பூர்த்தி செய்ய அங்கிருந்து 130 கி.மீ., தொலைவில், காவிரி மின் நிலையம் கட்டப்பட்டது. ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஆசியாவின் இரண்டாவது பெரிய மின்சார நிலையம் இது. இது இன்றைய கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிவன்சமுத்திரத்தில் இருந்தது.
இந்தியாவில் மின்சாரம் முழுமையாக வந்த முதல் நகரம் கேஜிஎஃப் ஆகும். நீர் விசையில் இருந்து மின்சார உற்பத்தி தொடங்கிய பிறகு அங்கு எல்லா நேரத்திலும் மின்சாரம் கிடைக்கத் தொடங்கியது. தங்க சுரங்கங்கள் காரணமாக பெங்களூரு மற்றும் மைசூருக்கு பதிலாக கே.ஜி.எஃப்-க்கு முன்னுரிமை கிடைத்தது.
மின்சாரம் வந்த பிறகு, KGF இல் தங்கஅகழ்வு அதிகரித்தது. அங்கு அகழ்வு வேகத்தை அதிகரிக்க விளக்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதன் விளைவாக, 1902 வாக்கில், கேஜிஎஃப் இந்தியாவின் மொத்த தங்க உற்பத்தில் 95 சதவிகிதத்தை பங்களிக்கத் தொடங்கியது. 1905 இல் இந்தியா தங்க அகழ்வில் உலகில் ஆறாவது இடத்தை பிடித்தது.
சிறிய இங்கிலாந்தாக மாறிய கேஜிஎஃப்

பட மூலாதாரம், KGF FACEBOOK
கேஜிஎஃப்-ல் தங்கம் கிடைக்கத்தொடங்கிய பிறகு அதன் தோற்றமே மாறிவிட்டது. அன்றைய ஆங்கிலேய அரசின் அதிகாரிகளும் பொறியாளர்களும் அங்கேயே வீடுகளை கட்டத் தொடங்கினர்.
அந்த இடம் குளிர்ச்சியாக இருந்ததால் மக்கள் அங்குள்ள சூழ்நிலையை விரும்ப ஆரம்பித்தனர். ஆங்கிலேய பாணியில் வீடுகள் கட்டப்பட்டிருந்ததால், அது இங்கிலாந்து போல தோற்றமளித்தது.
இந்த காரணத்திற்காக கேஜிஎஃப்,' லிட்டில் இங்கிலாண்ட்' என்று அழைக்கப்பட்டது என்று டெக்கான் ஹெரால்ட் தெரிவிக்கிறது.
கோலார் தங்க வயலின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பிரிட்டிஷ் அரசு அருகில் ஒரு குளத்தை அமைத்தது. அங்கிருந்து KGF வரை தண்ணீர் குழாய் போட ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அதே குளம் அங்கு முக்கிய சுற்றுலா மையமாக மாறியது.
பிரிட்டிஷ் அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் அங்கு சுற்றுலா செல்லத் தொடங்கினர். மறுபுறம், தங்கச் சுரங்கம் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
1930ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் அருகிலேயே வசித்து வந்தனர்.
கேஜிஎஃப் தேசியமயமாக்கல்
நாடு சுதந்திரம் அடைந்ததும் இந்த இடத்தை இந்திய அரசு தன் வசம் எடுத்துக் கொண்டது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 1956 இல் இந்த சுரங்கம் தேசியமயமாக்கப்பட்டது.

பட மூலாதாரம், KGF FACEBOOK
1970 இல் இந்திய அரசின் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனம் அங்கு வேலை செய்யத் தொடங்கியது. ஆரம்ப வெற்றிக்குப் பிறகு நிறுவனத்தின் லாபம் நாளுக்கு நாள் குறைந்தது. 1979 க்குப் பிறகு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.
ஒரு காலத்தில் இந்தியாவில் கிடைக்கும் தங்கத்தில் 90 சதவிகிதம் கோலாரில் கிடைத்த நிலை மாறி, 80களில் இதன் உற்பத்தி சரிவுப்பாதையில் செல்லத்தொடங்கியது.
அந்த நேரத்தில் பல ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். கூடவே நிறுவனத்தின் நஷ்டமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. தங்கத்தைப் பிரித்தெடுக்க செலவழிக்கப்பட்ட தொகையை காட்டிலும் அங்கிருந்து கிடைத்த தங்கத்தின் மதிப்பு குறைவாக இருந்த காலம் வந்தது.
இதன் காரணமாக 2001-ம் ஆண்டு பாரத் கோல்டு மைன்ஸ் லிமிடெட் நிறுவனம் அங்கு தங்கம் எடுப்பதை நிறுத்த முடிவு செய்தது. அதன் பிறகு அந்த இடம் பாழடைந்து போனது.

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் வேலை துவக்கப்படலாம் என்ற சமிக்ஞை
கேஜிஎஃப்பில் தங்க அகழ்வு 121 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. 2001 ஆம் ஆண்டு வரை அங்கு தங்கம் எடுக்கப்பட்டது. அந்த 121 ஆண்டுகளில் அங்குள்ள சுரங்கங்களில் இருந்து 900 டன்களுக்கும் அதிகமான தங்கம் எடுக்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. சுரங்கம் மூடப்பட்ட பிறகு 15 ஆண்டுகளாக KGF இல் எல்லாமே ஸ்தம்பித்திருந்தன.
ஆனால், அந்த இடத்தில் மீண்டும் பணி தொடங்கப்படலாம் என்ற சமிக்ஞையை 2016ஆம் ஆண்டு நரேந்திர மோதி அரசு அளித்தது. கேஜிஎஃப் சுரங்கங்களில் இன்னும் ஏராளமான தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில், கேஜிஎஃப் ஐ புதுப்பிக்க ஏல நடவடிக்கையை தொடங்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பிறகு என்ன நடக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












