சைபர் குற்றம்: தெரியாத எண்ணிலிருந்து வந்த வாட்சப் வீடியோ கால் அழைப்பால் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (மார்ச் 29) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
வாட்சப் செயலியில் தனக்குத் தெரியாத எண்ணிலிருந்து வந்த வீடியோ கால் அழைப்பை எடுத்த இளைஞரை மிரட்டி ஒரு கும்பல் ரூ.55,000-ஐ பிடுங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர், வாட்சப் வீடியோ காலில் அழைத்தவர்கள் தன்னை மிரட்டி பணம் கேட்டதாகவும் இல்லையென்றால் தனது புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டியதாகக் தெரிவித்திருந்தார்.
அந்த இளைஞருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு, தெரியாத எண்ணிலிருந்து வாட்சப் அழைப்பு ஒன்று வந்தது.
அந்த அழைப்பை எடுத்த போது அதில் யாரும் இல்லை, எந்தக் குரலும் வரவில்லை. இதனால் அழைப்பை துண்டித்திருக்கிறார். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அவரின் மார்ஃபிங் செய்யப்பட்ட விடியோ ஒன்று செல்பேசிக்கு வந்தது.
உடனடியாக பணம் அனுப்பவில்லையென்றால், விடியோவை இளைஞரின் செல்பேசியில் இருக்கும் எண்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் வந்துள்ளது.
இப்படி மிரட்டியே 5,000 ரூபாய் பிறகு 30,000 ரூபாய் மூன்றாவது முறையாக 20,000 ரூபாய் என பிடுங்கியுள்ளனர் எனத் தெரிவித்தார் அந்த இளைஞர். மிரட்டல் தொடர்ந்ததால், பிறகு அவர் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
இதுபோன்று ஏராளமான மோசடிகள் தொடர்சியாக நடப்பதாக காவல்துறையினர் பல முறை எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து மோசடி கும்பல்களிடம் பலரும் சிக்குவது குறித்து காவல்துறையினரும் கவலை தெரிவித்துள்ளதாக தினமணியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"துபாய் பயணம் மூலம் 6,100 ரூபாய் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்"- மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், M.K.Stalin Twitter
"துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது" என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, முதல் அரசுமுறை வெளிநாடு பயணமாக மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந்தேதி இரவு துபாய் சென்றார். துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்துவைத்த அவர், தொடர்ந்து 2 நாட்களாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு திரும்பிய முதலமைச்சரை, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தொழிற்துறை செயலர் கிருஷ்ணன், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், "துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வெளிநாட்டினர் பாராட்டினர்.
தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையேழுத்தாகின. 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் வெறும் காகித பூக்களாகவே இருந்தன. தற்போது போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்", என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் புது வியூகம்- ராகுல்காந்தி ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images
ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் புது வியூகங்களை வகுத்து வருவதாக தினகரன் செய்தி வெளியீட்டுள்ளது.
குஜராத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், அம்மாநில சிறிய கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன.
வரவிருக்கும் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் களத்தில் இறங்க தயாராகி வருகின்றன. இந்த அனைத்துக் கட்சிகளும் பாஜக மற்றும் காங்கிரஸின் வாக்கு வங்கியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளன. அதேநேரம் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையைப் பயன்படுத்திக் கொள்ள, காங்கிரஸ் வியூகங்களை வகுத்து வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த வாரம் குஜராத் காங்கிரஸ் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினார்.
சிறிய கட்சிகளின் உதவியுடன் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஷங்கர் சிங் பகேலாவின் ஜன் விகல்ப் மோர்ச்சா கட்சி, வரவிருக்கும் தேர்தலில் முழு பலத்துடன் களத்தில் இறங்க முயற்சிக்கிறது.
குஜராத் சட்டசபை தேர்தலில், படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டத்தில் தேசிய கவனத்தை ஈர்த்த ஹர்திக் படேலை காங்கிரஸ் கட்சி நம்பியுள்ளது. காரணம், அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
அதனால் குஜராத் தேர்தலை தீர்மானிக்கும் படேல் சமூக வாக்குகள் ஆளும் பாஜகவுக்கு எதிராக திரும்பினால், காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 40 சதவீதற்கு மேல் வாக்குகளை பெற்றதால், இந்த தேர்தலில் ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாக்கூர் ஆகியோரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆளும் பாஜகவை வீழ்த்த புதிய தேர்தல் பொறுப்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













