துபாயில் ஸ்டாலின்: ரூ.2,600 கோடி முதலீடு; 9700 பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழக அரசு செய்த ஒப்பந்தங்கள் என்ன?

பட மூலாதாரம், MK Stalin/TWITTER
இன்றைய (மார்ச் 27) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
தமிழகத்தில் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் அரசு முறைப் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அந்தப் பயணத்தில் சனிக்கிழமையன்று, முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர் அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் சிறப்புகளையும், தமிழகத்தில் சிறந்த தொழில் சூழல் நிலவுவதையும் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு அமைப்பின் உறுப்பினர்களுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் முன்னிலையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம் ரூ.500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், 3 வருடத்தில் ரூ.150 கோடி முதலீட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்திலும், 5 வருடத்தில் ரூ.350 கோடி முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்திலும் என இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஏ.மொகம்மது இல்யாஸ் கலந்து கொண்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமம் ரூ.100 கோடி முதலீடு மற்றும் 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் உணவுப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
மற்றொரு நிகழச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழக முதல்வர் முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆஸ்டர் DM ஹெல்த்கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீடு மற்றும் 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு (3000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் 500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு) என்ற வகையில், 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தமிழகத்தில் நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆஸ்டர் DM ஹெல்த்கேர் அமைப்பின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆசாத் மூப்பன் கலந்து கொண்டார்.
ஷெராப் குழும நிறுவனம், தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைத்திடுவதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுமத்தின் துணைத் தலைவர் H.E.மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஷெராப்ஃபுதின் ஷெராப் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷியாம் கபுர் இதில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மொத்தம் ரூ 2,600 கோடி முதலீடு மற்றும் 9,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக இந்து தமிழ் திசை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஏப்ரல் மாதம் கர்நாடகா பயணம்

பட மூலாதாரம், Getty Images
கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகி இருவரும் கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரங்களில் பலர் இதை பாஜகவின் தேர்தல் ஆயத்தங்களின் தொடக்கமாக கருதுகின்றனர்.வரும் ஏப்ரல் 1ஆம் தேதி துமுகூர் நகரில் உள்ள சித்த கங்கா மடத்தின் மறைந்த சிவகுமாரா சுவாமியின் 116வது பிறந்தநாள் விழாவில், அமித் ஷா பங்கேற்கவுள்ளார்.
சுமார் 2 லட்சம் பேர் கலந்துகொள்ளும் வகையில், இதை ஒரு பெரிய நிகழ்வாக மாற்ற பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மடத்திற்கு பெரும் ஆதரவாளர்களாக வீர சைவ பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியான இருப்பதால் அம்மாநிலத்தின் ஆளும் கட்சி இதனை பெரும் விழாவாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.
எடியூரப்பாவின் மகனும், மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திராவை நிகழ்ச்சியின் பொறுப்பாளராக செயல்பட முடிவு செய்யப்ப்படுள்ளது.
சர்வதேச விமான சேவை - இன்று முதல் மீண்டும் தொடக்கம்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்று பரவல் க் காரணமாக இரு ஆண்டுகளாக தடைபட்டிருந்த சர்வதேச விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக 'தினமணி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இந்த பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அதே ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்தவுடன் ஏர் பபுள் நடைமுறையின் கீழ் சில நாடுகளுடன் மட்டும் ஒப்பந்தம் மேற்கொண்டு, விமானங்களை மத்திய அரசு இயக்கி வந்தது. இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு பிறகு இயல்பான சர்வதேச விமான சேவைகள் ஞாயிற்றுகிழமை முதல் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகள் நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் மேற்கொண்டுள்ளன.
மதுரை எய்ம்ஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக 'தினந்தந்தி' செய்தி வெளிட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோதி தொடங்கி வைத்தார். இங்கு கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது.
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 50 இடங்களுக்கான வசதிகள் அனைத்தும், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் வரை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில், எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளில் 50 பேருக்கு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் பாடங்கள், செயல்முறை வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது. வருகிற ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் நல்லமலா காடு செஞ்சு குக்கிராமங்களுக்கு சென்ற முதல் ஆளுநரான தமிழசை செளந்தரராஜன்

பட மூலாதாரம், @DrTamilisaiGuv/TWITTER
பழங்குடியினரின் அவசர சுகாதாரத் தேவைகளுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில், தெலங்கானா மாநிலத்திலுள்ள அம்ராபாத் புலிகள் காப்பகத்தின் அடியிலுள்ள இரண்டு செஞ்சு குக்கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சனிக்கிழமையன்று வழங்கியதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள லிங்கல் மண்டலத்தின் அப்பாபூர் கிராம பஞ்சாயத்தை அடைந்ததன் மூலம், நல்லமலா காடுகளின் பழமையான ங்குடியினரை சந்தித்த முதல் மாநில ஆளுநர் என்ற வரலாற்றை உருவாக்கினார்.
ஆளுநர் அவர்கள் மத்தியில் இருந்ததைக் கண்டு உற்சாகமடைந்த செஞ்சு குக்கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர், அவர்களின் பாரம்பரிய நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அம்மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்குவதற்காக, 49.9 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் தமிழிசை வழங்கினார். சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












