'ராகுலுக்கு அரசியல் புரிந்துள்ளது; திட்டமிருந்தாலும் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை' : என். ராம் பேட்டி

என். ராம்
படக்குறிப்பு, என். ராம், மூத்த பத்திரிகையாளர்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு குறித்து மக்களவையில் ராகுல்காந்தி பேசிய பேச்சுக்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. `மாநிலங்களின் ஒன்றியம் இது. மத்தியில் இருந்து மட்டும் யாராலும் அதிகாரம் செலுத்த முடியாது. அது உண்மை. நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் அது தெளிவாக உள்ளது. ராகுல்காந்தியின் பேச்சு வரவேற்கத்தக்கது,' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி ஆற்றிய உரையின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அவர் தனது பேச்சில், ` நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என தமிழ்நாடு தொடர்ந்து உங்களிடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. அவர்களின் கோரிக்கையை மறுத்து நீங்கள் அவர்களை வெளியேற்றுகிறீர்கள். மக்களின் கருத்தை அரசர் கேட்காதது போல உங்களின் அரசு செயல்படுகிறது. அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை கொடுக்கப்பட வேண்டும்,' என்றார்.

தொடர்ந்து பேசுகையில், கூட்டாட்சி என்பது, தமிழ்நாட்டில் உள்ள சகோதரரிடம் என்ன வேண்டும் என நான் கேட்பது பின் அவர் தேவையை என்னிடம் சொல்வதுபோல எனக்குத் தேவையானதை நானும் கேட்டுப் பெறுவேன். இது ஒன்றும் முடியாட்சி அல்ல. நீங்கள் ராஜாவும் அல்ல. மாநில சுயாட்சியில் தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஆள முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் தமிழ்மொழி பற்றிய சிந்தனை உள்ளது. கேரள மக்களுக்கும் ஒரு கலாசாரம் உள்ளது. நான் கேரளாவில் இருந்து மக்களவைக்குத் தேர்வானவன். அதனை நானும் உணர்கிறேன். அவர்களுக்கு என அடையாளமும் சிந்தனையும் உண்டு. நான் அவற்றைக் கற்றுக் கொள்கிறேன்,' என்றார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த ராகுலிடம், தமிழ்நாடு குறித்துப் பேசியது குறித்து கேட்டபோது 'நானும் தமிழன்தான்' என பதில் அளித்த காட்சியும் வைரலானது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, ராகுல் காந்தி

ராகுல்காந்தியின் பேச்சு தொடர்பாக ட்விட்டரில் பதில் அளித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `தமிழ்நாட்டின் மைந்தன் என்ற முறையில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன். தமிழகத்தில் தி.மு.கவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐ.சி.யூவில் இருக்கிறீர்கள். நாங்கள் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம். நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரித்த புதுவை மக்களுக்கு நன்றி. அது ஒரு மைல்கல். அந்த மைல் கல்லின் அடுத்த ஜங்ஷன் தமிழகமாக இருக்கும்' என பதிவிட்டுள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இதையடுத்து, ராகுல்காந்தியின் பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் என்.ராம், ``அதை ஒரு சிறந்த பேச்சாகவும் உண்மையான பேச்சாகவும் பார்க்கிறேன். அவரது பேச்சுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் சாராம்சம் என்னவென்றால், இது மன்னர் காலம் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இது. மத்தியில் இருந்து மட்டும் யாராலும் அதிகாரம் செலுத்த முடியாது என்பதுதான் உண்மை. நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் அது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதனை தமிழ் மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அதனை தமிழ்நாடு முதல்வர் வரவேற்றுள்ளார். அது ஒரு நல்ல நினைவூட்டல்,'' என்கிறார்.

``மாநிலங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்தது என்பது காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் நடந்தது தானே?'' என்றபோது, ``உண்மைதான். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் தொடங்கியதுதான் இவையெல்லாம். அவசர நிலையின்போது மாநில அரசுகளுக்கு என்ன அதிகாரம் இருந்தது? மக்களுக்கே எந்த அதிகாரமும் அப்போது இல்லை. தமிழ்நாட்டில் இரண்டு முறை தி.மு.க ஆட்சியைக் கலைத்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்ல.

ஸ்டாலின்

ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி நடக்கும். இது அரசியலமைப்பு சார்ந்த கூட்டணி அல்ல. மாநிலக் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பார்கள். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்போது, மாநிலங்களைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், அவசர நிலையைத் தவிர அதைவிட மோசமான நிலைக்கு தற்போதைய அரசு எடுத்துச் சென்றுள்ளது. அவசர நிலையை எதனோடும் நான் ஒப்பிட மாட்டேன். எங்களுக்கு அந்த அனுபவம் உள்ளது. மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை மத்தியில் ஆட்சிக்கு வருபவர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது மோசமான திட்டம். அதனால்தான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ராகுல் பேசியதை வரவேற்கிறோம்,'' என்கிறார் ராம்.

``காங்கிரஸ் ஆட்சியிலும் சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவை அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டதே?'' என்றபோது, ``அதனை ராகுல் செய்யவில்லை. அவரை யாராவது நேர்காணல் செய்யும்போது இதனை அவர் ஏற்றுக் கொள்வார் என நினைக்கிறேன். அவசர நிலையை தவறு எனச் சொல்வதுபோல, இதனையும் சொல்வார். அதனைச் சொல்லும்போதுதான் மக்கள் நம்புவார்கள்'' என்கிறார் ராம்.

தொடர்ந்து நீட் தேர்வு சர்ச்சை குறித்துப் பேசிய என்.ராம், ``நீட் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களின் நிலைமையைப் பொறுத்துத்தான் பேச முடியும். அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான சட்டங்களைப் போட முடியாது. தமிழ்நாட்டில் நீட் பிரச்னை பேசப்படுகிறது. இங்கு சமூக நீதியால்தான் பலரும் மருத்துவ படிப்பை படிக்க முடிந்தது என்ற பார்வை உள்ளது. ராகுல் காந்தி பேசுவதை தவறு என கூற மாட்டேன். இதர மாநில மக்களின் கோரிக்கைகளை பொறுத்துத்தான் முடிவெடுக்க முடியும். அதற்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்க முடிகிறது.

ராம்

அதேநேரம், 1967ஆம் ஆண்டுடன் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியோ, பாரதிய ஜனதா கட்சியோ திராவிட இயக்கங்களைத் தாண்டி வர முடியவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது முக்கிய அதிகார மையமாக அ.தி.மு.க இருந்தது. இன்றைக்கு தி.மு.கவின் காலம். சுயமரியாதை, பெண்ணுரிமை, சமூக நீதி ஆகியவை இங்கு முக்கியமாக உள்ளது. சிலருக்கு ஆட்சேபனை இருந்தாலும் பெரும்பான்மையான மக்களின் எண்ணங்களை அடிப்படையாக வைத்து அதனை வரவேற்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவுகள் ஒருபக்கம் இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது இங்கேதான். நீட் தொடர்பாக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். மாநிலங்கள் அதிகமாக கேட்டாலும் அதில் பொதுவான எண்ண ஓட்டம் வர வேண்டும்'' என்கிறார் ராம்.

`` தமிழ்நாட்டில் ஒருபோதும் உங்களால் ஆள முடியாது என ராகுல் பேசினார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் எங்கே உள்ளது எனப் பாருங்கள் என பா.ஜ.க விமர்சிக்கிறதே?'' என்றபோது, ``ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியை பற்றிக் கூறவில்லை. அவர்களின் காலம் என்பது முடிந்துவிட்டது. மத்தியில் பா.ஜ.கவுக்கு அதிகாரம் இருந்தாலும் இங்கு எதையும் செய்ய முடியவில்லை. இந்தி திணிப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் இங்குள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லை. மொழி, சிந்தனை உணர்வு அதிகம்.

நீட் மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டுக்கென பா.ஜ.கவுக்கு ஒரு திட்டம் உள்ளது. ஆனால் எதுவும் முடியவில்லை. எத்தனையோ கட்சிகளுக்கு குஷ்பு மாறியுள்ளார். தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் அவர் இருந்துள்ளார். இன்னும் அ.தி.மு.கவுக்கு மட்டும்தான் அவர் செல்லவில்லை. ராகுலுக்கு எதிராக பதில் அளிப்பதால் அவர் பெரிய தலைவரா? அவர் நல்ல நடிகை. ஆனால், அரசியலில் தோற்று விட்டார். பொதுவாழ்வுக்கு வருகிறவர்களை மக்கள் நம்பும் அளவுக்குச் செயல்பட வேண்டும்.

அண்ணாமலை பழைய போலீஸ் அதிகாரி. அவருக்கு இங்கே என்ன அடிப்படை உள்ளது? போலீஸ்காரர்களை பா.ஜ.க அதிகப்படியாக பயன்படுத்துகிறது. குறிப்பாக ஆளுநராக நியமிப்பது உள்பட. கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மதவாத சக்திகளால் முன்னேற முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் கடுமையாக வேலை செய்தாலும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவு அதிகாரம் உள்ள பா.ஜ.க, இங்கே முன்னேறாததைப் பற்றி சிந்திக்க வேண்டும்'' என்கிறார் ராம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: