“மத மோதல்களை அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்” – மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

இன்று (மார்ச் 13) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

"ஒரு காலத்தில் மதம் என்பது மதம் சார்ந்த பிரச்னையாக மட்டுமே இருந்தது. இப்போது சிலரால் அரசியல் நோக்கமுள்ளதாக மாற்றப்பட்டுவிட்டது. அதனால், அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்," என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற 3 நாள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை நிறைவடைந்தது.

அதில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அவ்வப்போது ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னை கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. குற்றங்களின் சதவீதத்தைக் குறைப்பது மட்டுமின்றி, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சாதி மோதல்களை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்க்கக்கூடாது.

ஒரு காலத்தில் மதம் என்பது மதம் சார்ந்த பிரச்னையாக மட்டுமே இருந்தது. இப்போது சிலரால் அரசியல் நோக்கமுள்ளதாக மாற்றப்பட்டுவிட்டது. அதனால், அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். அதைத் தடுத்தாக வேண்டும்.

சாதி, மத ரீதியிலான மோதல்களுக்கு சமூக வலைதளங்கள் முக்கியக் காரணமாக இருப்பது உண்மைதான். மோதல்களை உருவாக்கும் கருத்துகளைப் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஊடக பிரிவுக்கு தனியாக அலுவலகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்," என்று கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்ரேன் ராணுவத்தில் இணைந்த தமிழ்நாடு மாணவர் நாடு திரும்ப விருப்பம்

யுக்ரேன் ராணுவத்தில் இணைந்த கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சாய் நிகேஷ், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், "துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் ஜான்சி லட்சுமி தம்பதியின் மகன் சாய் நிகேஷ். 21 வயது இளைஞரான இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு யுக்ரேன் நாட்டில் கார்ஹிவ் நகரிலுள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நேரத்தில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த சாய் நிகேஷ், அந்நாட்டில் வசிக்கும் மக்கள் விஉர்ப்பம் இருந்தால் யுக்ரேன் ராணுவத்தோடு இணைந்து பணியாற்றலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சாய் நிகேஷ் அதன் ராணுவத்தின் "ஜார்ஜியன் நேஷனல் லிஜியன்" என்ற துணை ராணுவப் படையில் கடந்த மாதம் இணைந்தார்.

செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர், அந்தப் பணியை விட்டுவிட்டு ஊருக்குத் திரும்பும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். முதலில் அதற்கு மறுத்துவிட்டார்.

பின்னர், பெற்றோர் தங்கள் உடல்நிலை காரணங்களைக் கூறி, தொடர்ந்து வலியுறுத்தியதால், சாய் நிகேஷ் யுக்ரேன் ராணுவத்திலிருந்து விலகி மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக கோவையிலுள்ள அவருடைய குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், சாய் நிகேஷ் குறித்த இந்தத் தகவல் உளவுத் துறை அதிகாரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் 15% வரை குறைப்பு

முதுநிலை மருத்துவ படிப்பு காலியிடங்கள் நிரப்பப்படாமல் வீணாவதைத் தடுப்பதற்காக, முதுநிலை நீட் தேர்வுக்கான தகுதி மதிப்பெண்ணை 15% அளவுக்குக் குறைக்க தேசிய தேர்வுகள் வாரியத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

இதுதொடர்பாக, மருத்துவ கலந்தாய்வுக் குழு உறுப்பினர் செயலர் பி.ஸ்ரீநிவாஸ் தேசிய தேர்வுகள் வாரிய செயல் இயக்குநர் மின் பாஜ்பாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், "மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தேசிய மருத்துவ ஆணையத்துடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனையின் முடிவில் முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அனைத்து பிரிவினருக்குமான தகுதி மதிப்பெண்ணை 15% வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 35 சதவீதமாகவும் மாற்றுத் திறனாளிகளில் பொதுப் பிரிவினருக்கு 30 சதவீதமாகவும் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு 25 சதவீதமாகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவின் அடிப்படையில், திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிடுமாறும் அதன்படி தகுதிபெறும் மாணவர்களின் புதிய பட்டியலை மருத்துவக் கலந்தாய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் நடைபாதை மீது ஏறிய பி.எம்.டபுள்யூ: ஒருவர் பலி

தெற்கு டெல்லியிலுள்ள கல்யாண்புரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபாதை மீது ஏறிய பி.எம்.டபுள்யூ கார் ஏற்படுத்திய விபத்தில் 36 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் நடைபாதை மீது ஏறிய பி.எம்.டபுள்யூ: ஒருவர் பலி

பட மூலாதாரம், Getty Images

அதுகுறித்த செய்தியில், "வெள்ளிக்கிழமை அதிகாலை 2:46 மணியளவில், கல்யாண்புரியிலுள்ள லால் பஹதூர் ஷாஸ்திரி மருத்துவமனை அருகே மக்கள் கூட்டம் கூடியிருந்ததைப் பார்த்த ரோந்து வந்த காவலர்கள் விசாரனை நடத்தியபோது, நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் மீது பி.எம்.டபுள்யூ கார் ஏறி விபத்து நடந்தது தெரிய வந்தது.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்களுக்கு, காரின் நம்பர் ப்ளேட் கிடைத்தது. விசாரணையின்போது, அந்த கார் பி.எம்.டபுள்யூ என்பதும் காஸியாபாத்தில் இருக்கும் அஷ்வானி லால் என்பவருக்குச் சொந்தமனாது என்றும் தெரியவந்தது.

அவரைக் கைது செய்த காவலர்கள், விசாரித்தபோது கார் நிலை தடுமாறியதால் விபத்து ஏற்பட்டதாகவும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் கூறியுள்ளார். அதை உறுதி செய்ய மருத்துவச் சான்றிதழுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால், சிசிடிவி காணொளிகளின் படி அவருடன் ஒரு பெண் இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: