பஞ்சாப்பை மீண்டும் தக்கவைக்குமா காங்கிரஸ்? பாஜகவின் வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், ANI
இந்தியாவில் தற்போது நடைபெறவுள்ள 5 மாநிலத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் கவனிப்பது பஞ்சாப் மாநிலத் தேர்தலைத்தான்.
ஏனென்றால், உ.பி.யை தக்கவைத்துக் கொள்வது எப்படி பாஜகவுக்கு முக்கியமோ அதைப் போலவே பஞ்சாபைத் தக்கவைத்துக் கொள்வது ஆளும் காங்கிரசுக்கு மிகவும் முக்கியமானது. தேசிய அரசியலில் இதன் தாக்கமும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கின் விலகல் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமா? சமீபத்தில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை உருவாக்கிய அவர், பா.ஜ.க.வுடன் கூட்டணியை அமைத்துள்ளார். சிரோமணி அகாலி தளம் இந்த முறை தான் இழந்த அரசியல் தளத்தை மீண்டும் கைப்பற்றமுடியுமா?
இம்முறை மாநிலத்தில் ஆம் ஆத்மியின் மாயாஜாலம் நடக்குமா அல்லது காங்கிரஸ்- அகாலி தளம் இடையே மீண்டும் இதே அரசியல் மோதல் நீடிக்குமா?
இப்படி பல கேள்விகள் உங்கள் மனதில் இருக்கும். ஆனால் இவற்றைப் பற்றி விவாதிப்பதற்கு முன், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பல்வேறு கட்சிகளின் வலு என்ன என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
பஞ்சாப் சட்டப்பேரவைத்தேர்தல் எப்போது நடைபெறும்?
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
16 வது பஞ்சாப் சட்டப்பேரவையின் 117 இடங்களுக்கு இந்தத் தேர்தல் நடைபெறும்.
கடந்த தேர்தல் 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. மாநில அரசின் பதவிக்காலம் , 2022 மார்ச் 17 ஆம் தேதி காலாவதியாகும். (கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் முதல்வராக 2017 மார்ச் 17 ஆம் தேதி பதவியேற்றார்).
எத்தனை தொகுதிகள் உள்ளன, பெரும்பான்மை எண்ணிக்கை என்ன?
பஞ்சாப் சட்டப் பேரவையில் 117 தொகுதிகள் உள்ளன.
சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெற, எந்த ஒரு கட்சி அல்லது கூட்டணியும் குறைந்தது 59 தொகுதிகளை கைப்பற்றவேண்டும்.
தேர்தலில் எந்தக் கட்சி 59 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சி பஞ்சாபில் ஆட்சி அமைக்கும்.
முக்கிய சட்டப்பேரவைத்தொகுதிகள் எவை?
• பட்டியாலா (நகர்புறம்)- கேப்டன் அமரிந்தர் சிங் போட்டியிடும் தொகுதி
• லாம்பி - பிரகாஷ் சிங் பாதலின் தொகுதி
• ஜலாலாபாத் - சுக்பீர் சிங் பாதலின் தொகுதி
• அமிர்தசரஸ் (கிழக்கு) - நவ்ஜோத் சிங் சித்துவின் தொகுதி
• டேரா பாபா நானக் - சுக்ஜிந்தர் சிங் ரந்தவாவின் தொகுதி
பஞ்சாப் சட்டப்பேரவைத்தேர்தலில் முக்கிய விஷயங்கள் என்னவாக இருக்கும்?
விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் - மத்திய அரசு இயற்றிய 3 விவசாயச் சட்டங்களுக்கு எதிராக சுமார் ஒரு வருடம் டெல்லி எல்லையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த சட்டங்கள் காரணமாக அகாலிதளம் பாஜகவுடனான தனது பல தசாப்த கால கூட்டணியை முறித்துக் கொண்டது.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES/GETTYIMAGES
மதச்சின்னத்தை இழிவுபடுத்திய வழக்கில் நீதி கிடைக்காதது - இந்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது. இந்தப்பிரச்சனை தொடர்பாக தன் கட்சி அரசையே விமர்சித்தார் நவ்ஜோத் சிங் சித்து . அதன் விளைவு நம் கண்முன்னே உள்ளது.
வேலையின்மை - கேப்டனின் 'கர்-கர் நௌக்ரி' (வீடுதோறும் வேலை) வாக்குறுதி பஞ்சாப் அரசியலில் பலமுறை சலசலப்பை உருவாக்கியது.
இந்தப் பிரச்னைகள் மட்டுமின்றி, போதைப்பொருள், சுரங்கம், மின்சாரம் உள்ளிட்ட பிரச்னைகளும் இந்தத்தேர்தலில் முக்கியமானதாக இருக்கும்.
2017 தேர்தல் முடிவுகள் என்ன சொல்கிறது?
தற்போது மாநில அரசு, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் உள்ளது. முன்னதாக கேப்டன் அமரிந்தர் சிங் முதல்வராக பதவி வகித்து வந்தார்.
2017 சட்டப்பேரவைத்தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் ,117 தொகுதிகளில் 77-ஐ வென்றது.
அதேசமயம் பஞ்சாப் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரசின் இந்த மாபெரும் வெற்றி, சிரோமணி அகாலி தளம் மற்றும் பாஜக கூட்டணியை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது. சிரோமணி அகாலி தளம் 15 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் பெற்றன.
லோக் இன்சாஃப் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.
மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,மூன்று தசாப்தங்களாக பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த சிரோமணி அகாலி தளம், 2020-ஆம் ஆண்டு பாஜகவை விட்டு விலக முடிவு செய்தது.

பட மூலாதாரம், GURPREET SINGH/HINDUSTAN TIMES VIA GETTY IMAGE
இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்தன.
ஆம் ஆத்மி கட்சி 2017 தேர்தலில் லோக் இன்சாஃப் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது, ஆனால் பின்னர் அந்த கூட்டணி முறிந்தது.
• 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 38.5 சதவிகிதம் அதாவது (59,24,995) வாக்குகள் பெற்றது.
• சிரோமணி அகாலி தளம் 25.3 சதவிகிதம் (38,98,161) வாக்குகள் பெற்றது.
• ஆம் ஆத்மி கட்சி 23.8 சதவிகிதம் (36,59,266) வாக்குகள் பெற்றது.
• பாஜக 5.3 சதவிகிதம் (8,19,927) வாக்குகள் பெற்றது.
பஞ்சாபில் 2017 தேர்தல் முடிவுகளில் மால்வா, மாஜா மற்றும் தோவாபா ஆகிய முக்கிய பிராந்தியங்களின் புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:
• மால்வா - காங்கிரஸ் (40), ஆம் ஆத்மி கட்சி (18), சிரோமணி அகாலி தளம் (8), பாரதிய ஜனதா கட்சி (1), லோக் இன்சாஃப் கட்சி (2)
• மாஜா - காங்கிரஸ் (22), சிரோமணி அகாலி தளம் (2), பாரதிய ஜனதா கட்சி (1)
• தோவாபா - காங்கிரஸ் (15), சிரோமணி அகாலி தளம் (5), ஆம் ஆத்மி கட்சி (2), பாரதிய ஜனதா கட்சி (1)
கடந்த சட்டப்பேரவைத்தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை இருக்கும் வித்தியாசம் என்ன?
முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரிந்தர் சிங் ராஜினாமா செய்து, சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக தேர்வு செய்யப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

பட மூலாதாரம், ANIL DAYAL/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES
மறுபுறம் அகாலி தளம், தனது பல தசாப்த கால கூட்டணி கட்சியான பாஜக விடமிருந்து பிரிந்து பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது. 2022 சட்டப் பேரவைத்தேர்தலில் அகாலிதளம் வெற்றி பெற்றால் தலித் ஒருவர்தான் துணை முதல்வராக ஆக்கப்படுவார் என்று அகாலி தளம் அறிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் இதற்கு ஒருபடி மேலே சென்று, தலித் சமூகத்தை சேர்ந்த சன்னியை முதல்வராக்கிவிட்டது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப்பின் ஆதரவு, ஆம் ஆத்மி கட்சிக்கு வரப்பிரசாதமாக அமையக்கூடும்.
இந்தத்தேர்தலில் முதல்வர் வேட்பாளர்கள். இதில் யார் கை ஒங்கி உள்ளது, அவர்களின் நிறை குறைகளை பற்றிய ஒரு அலசல்.
1. சரண்ஜித் சிங் சன்னி (காங்கிரஸ்):-
நிறைகள்-
சரண்ஜித் சிங் சன்னி தலித் சமூகத்தில் இருந்து வந்தவர். முதலமைச்சராக கடந்த நான்கு மாதங்களில் தலித் சமூகத்தின் மீதான தனது பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
முதல்வர் பதவிக்கான மற்ற வேட்பாளர்கள் அனைவரும் ஜாட் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தசூழ்நிலையில் ஜாட் சீக்கியர்களின் வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தலித் சமூகத்தின் ஒரே முதல்வர் வேட்பாளரான சன்னிக்கு இதன் பலன் கிடைக்கக்கூடும்.
மறுபுறம், விவசாயிகளின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது, மின்சாரம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு முடிவுகளால் சன்னி பயனடையலாம்.
பிரதமர் நரேந்திர மோதியின் வருகையின் போது பஞ்சாப் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது மற்றும் தனது உறவினர்கள் மீது அமலாக்க இயக்குநரக சோதனைகளை நடத்தியதன் மூலம் மக்களின் ஆதரவை அவர் பெறக்கூடும்.
குறைகள்-
நவ்ஜோத் சித்து, சுனில் ஜாகர் மற்றும் மனீஷ் திவாரி போன்ற காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பின் தாக்கம் சன்னி மீது ஏற்படக்கூடும்.
மதச் சின்ன இழிவுபடுத்தல் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளில் எந்த ஒரு வலுவான நடவடிக்கையும் எடுக்காதது சரண்ஜித் சிங் சன்னிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
காங்கிரஸ் கட்சி மற்றும் பஞ்சாப் அரசின் குறைபாடுகளின் பொறுப்பும் சன்னி மீது சுமத்தப்படலாம்.
2. பகவந்த் மான் (ஆம் ஆத்மி கட்சி):-
நிறைகள்:
பகவந்த் மான் ஒரு நட்சத்திர கலைஞராக இருந்துள்ளார். அவர் பஞ்சாப் முழுவதும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். நேர்மையான தலைவர் என்று அறியப்படுபவர். அவர் இரண்டு தசாப்தங்களாக அரசியலில் இருந்து வருகிறார், இருப்பினும் அவர் மீது ஊழல் கறை எதுவும் இல்லை.
பஞ்சாபில் கேஜ்ரிவாலின் 'டெல்லி மாதிரி' முறையீடும் பகவந்த் மானுக்கு ஆதரவாக இருக்கலாம்..
குறைகள்:
குடித்துவிட்டு பொதுநிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் கட்டமைப்பு காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் போல் வலுவாக இல்லை. இது அவருக்கு பிரச்சனையாக இருக்கலாம்.
ஒரு நகைச்சுவை நடிகராக இருப்பதால், அரசியல் எதிரிகள் உருவாக்கியுள்ள 'தீவிரமற்றவர்' என்ற அவரது பிம்பமும் அவருக்கு தீங்கு விளைவிக்கலாம்.
3. சுக்பீர் சிங்பாதல் (அகாலி தளம்-BSP):-
நிறைகள்:
சுக்பீர் சிங் பாதல் ஒரு நல்ல தலைவராகவும், தேர்தல் செயல்பாட்டின் திறமையான மேலாளராகவும் அறியப்படுகிறார். சுக்பீரின் திறமைக்கு ஈடு இணை இல்லை என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சிரோமணி அகாலிதளத்தில் அவரது தலைமைக்கு எந்த சவாலும் இல்லை. பஞ்சாப் முழுவதும் வலுவான அகாலிதள அமைப்பு மற்றும் ஒழுக்கமான தொண்டர்கள் இருப்பது பலமுனைப் போட்டியில் பலனளிக்கும்.
பகுஜன் சமாஜ் கட்சியுடனான அகாலிதளத்தின் கூட்டணி ஜாட் சீக்கியர் மற்றும் தலித் வாக்கு வங்கியின் நல்ல கலவையாக இருக்கலாம்.
குறைகள்:
சுக்பீர் சிங் பாதல், அகாலி தளத்தை ஒரு தனியார் நிறுவனம் போல நடத்தி, ஆயுத பலத்தில் தனது தொழிலை விரிவுபடுத்திய குற்றச்சாட்டில் இருந்து இன்னும் விடுபடவில்லை.
அகாலிதள ஆட்சியில் குரு கிரந்த் சாஹிப்பை இழிவுபடுத்தியது, மணல், போதைப்பொருள், கேபிள் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் மாஃபியா நடவடிக்கைகள் மற்றும் நீதியின்மை போன்ற குற்றச்சாட்டுகள் அவரைப் பின்தொடர்கின்றன.
4. கேப்டன் அமரீந்தர் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்-பாஜக-ஐக்கிய அகாலி தளம்):-
இம்முறை பாஜக, அமரீந்தர் சிங்கின் புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய அகாலிதளம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. ஆனால், இந்த கூட்டணி முதல்வர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
எனினும் இந்த கூட்டணியில் கேப்டன் அமரீந்தர் சிங் மட்டுமே முதல்வர் பதவிக்கு போட்டியிடக்கூடிய ஒரே முகம் என்று கருதப்படுகிறது.
நிறைகள்:
கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் மாநிலத்தின் நலன்களைக் காக்கும் நபராக அறியப்படுகிறார். அவர் தனது வெளிப்படையான கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். ஆபரேஷன் புளூ ஸ்டாருக்கு எதிர்ப்பு தெரிவித்து 1984-ல் நாடாளுமன்றம் மற்றும் தனது சொந்தக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது, 2004-ல் பஞ்சாப் சட்டப்பேரவையில் மாநில தண்ணீர் பிரச்சினை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றியது ஆகியவை இதில் அடங்கும். தேசியவாதம் மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு விஷயத்தில் அவர் பாஜகவை விட ஒரு படி மேலே இருப்பதாகத் தோன்றுகிறது. இது அவரை இந்து சமூகத்தினர் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது.
குறைகள்:
அவரது கடந்த நாலரை ஆண்டுகள் ஆட்சி அவரது மிகப்பெரிய குறைபாடாகும். கேப்டன் அமரீந்தரை எளிதில் அணுகமுடியாது என்று மக்கள் கருதுகின்றனர்.அதே சமயம் சாமானிய மக்களின் பணிகளுக்கு அவர் முன்னுரிமை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
மூன்று விவசாயச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் (பின்னர் அந்த மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டாலும்), ஏறக்குறைய ஒட்டுமொத்த கிராமப்புறங்களிலும் பாஜக மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
அவர் தற்போது பாஜகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், "விவசாயிகளின் விரோதிகளுடன்" கூட்டணி வைத்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
5. பல்பீர் சிங் ராஜேவால் (ஐக்கிய சமூக முன்னணி):-
நிறைகள்:
மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி நபராக இருந்தார். பரம்பரை அரசியலுக்கு எதிரான முகமாக மாறினார்.
உண்மைகளின் அடிப்படையில் எளிமையான மொழியில் பேசும் கலையில் ராஜேவால் நிபுணத்துவம் பெற்றவர். அவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் மீது குற்றச்சாட்டுகளோ, சர்ச்சைகளோ இல்லை.
குறைகள்:
தீவிர தொண்டர்களின் பற்றாக்குறை, தேர்தலுக்கு போதுமான நிதி மற்றும் உள்கட்டமைப்பு இல்லாதது ஆகியவை இந்த முன்னணியின் பலவீனமாக இருக்கலாம்.
ராஜேவாலுக்கு தற்போது 80 வயதாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விவசாயிகள் இயக்கத்தில் தன் திறமையை நிரூபித்திருந்தாலும்கூட தேர்தலில் வெற்றி பெறமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
6. நவ்ஜோத் சிங் சித்து:-
இவர் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் அல்ல. ஏனென்றால் அக்கட்சி சரண்ஜீத் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்துவிட்டது.
நிறைகள்:
நவ்ஜோத் சிங் சித்து ஒரு நட்சத்திர வீரராகவும், பொழுதுபோக்கு உலகில் பெரிய பெயராகவும் பஞ்சாபிற்கு வெளியேயும் அறியப்படுகிறார். பஞ்சாப் மாடல், கர்தார்பூர் வழித்தடத்தைத் திறப்பதில் அவரது பங்கு போன்றவை அவருக்கு நல்ல பெயரை தந்திருக்கிறது.
போதைப்பொருள் மாஃபியா மற்றும் மதச்சின்னத்தை இழிவுபடுத்தியது போன்ற விவகாரங்களில் நீதிக்கான அவரது நிலைப்பாடு அவருக்கு நன்மை தரக்கூடும்.
குறைகள்:
நவ்ஜோத் சித்து வெளிப்படையாகப்பேசுபவர். கோபத்தில் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததது அவரது இமேஜுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. குழுவாக பணியாற்றாமல் 'தனி நபராக' செயல்படும் அவரது பாணி காங்கிரசுக்கு எதிராக அமைந்தது.

பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- "தேர்தலில் வெற்றிபெற பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்"
- திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













