இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? சாதாரண பாஸ்போர்ட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

passport

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அபிநவ் கோயல்
    • பதவி, பிபிசி நிருபர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் 2022-23 ஆம் ஆண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இ-பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு பல வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன, அது எப்படிப் பயன்படுகிறது? வரும் நாட்களில், சாதாரண பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக இ-பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படும்? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடையறிய, பிபிசி பல நிபுணர்கள் மற்றும் ஏற்கனவே இ-பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தும் நபர்களிடம் பேசியது.

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?

இ-பாஸ்போர்ட் சாதாரண பாஸ்போர்ட் போலவே இருந்தாலும், இதில் மின்னணு நுண்செயலி சிப் பயன்படுத்தப்படுகிறது. இது பாஸ்போர்ட்டின் அட்டை அல்லது உள் பக்கங்களில் பொருத்தப்பட்டிருக்கும். மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன், "இ-பாஸ்போர்ட்டில் விண்ணப்பதாரர்களின் தகவல்கள் டிஜிட்டல் அடையாள வடிவில் உள்ள சிப்பில் பாதுகாக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். அதில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். இந்த சிப்பில் உள்ளிடப்பட்ட தகவலை மாற்ற முடியாது. சிப்பில் சேதம் ஏற்பட்டால், இ-பாஸ்போர்ட் செயலிழந்து விடும்.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததா?

2008 ஆம் ஆண்டில், வெளியுறவு அமைச்சகத்தின் முன்முயற்சியின் பேரில், தேசியத் தகவல் மையம் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மேற்கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சுமார் 20 ஆயிரம் இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. இந்த அனுபவத்தின் அடிப்படையில், சாதாரண குடிமக்கள், அதிகாரிகள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் இ-பாஸ்போர்ட்டை உருவாக்கிச் செயல்படுத்தும் பொறுப்பு தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இ-பாஸ்போர்ட்டில் அட்டைப் பக்கத்தில் மின்னணு சிப் பொருத்தப்பட்டிருந்தது.

இதில் என்ன விதமான தகவல் இருக்கும்?

பதில்: இ-பாஸ்போர்ட்டுக்கு பயோமெட்ரிக், செயற்கை நுண்ணறிவு, சாட்பாட்கள், ஆட்டோ ரெஸ்பான்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். ஏற்கனவே பாஸ்போர்ட்டில் கைரேகை பயன்படுத்தப்பட்டுள்ளது. கைரேகை மட்டுமின்றி கண் விழி ஸ்கேனும் இ-பாஸ்போர்ட்டில் இடம்பெறும். ஆதார் அட்டை தயாரிக்கும் போது விரல்கள் மற்றும் கருவிழிகளை ஸ்கேன் செய்வது போல, இந்தத் தகவல்கள் அனைத்தும் சிப்பில் சேமிக்கப்படும். குடிவரவு சரிபார்க்கும் இயந்திரம் சரியான நபரை அடையாளம் காண இது உதவும்.

passport

பட மூலாதாரம், Getty Images

சாதாரண பாஸ்போர்ட்டை விட இது எவ்வகையில் வேறுபட்டது?

நீங்கள் ஒரு சாதாரண பாஸ்போர்ட்டுடன் ஒரு நாட்டிற்குள் நுழையும்போது, உங்கள் நுழைவு குறித்த தகவல் அந்த பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்படும். இந்தத் தகவல்கள் அனைத்தும் இ-பாஸ்போர்ட்டில் உள்ள எலக்ட்ரானிக் சிப்பில் சேமிக்கப்படும். இ-பாஸ்போர்ட் வைத்திருப்பவர் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார், அந்தந்த நாடுகளில் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதை காகித ஆவணங்களின்றிப் பதிவு செய்யலாம்.

இ-பாஸ்போர்ட்டில் என்ன வசதி?

சாதாரண கடவுச்சீட்டுடன் நீங்கள் ஒரு நாட்டிற்குச் செல்லும்போது, முதலில் நீங்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் விசாவைப் பெற வேண்டும். பாஸ்போர்ட்டில் விசா முத்திரையிடப்படுகிறது. குடிவரவுத் துறை அதிகாரிகள், பயணம் செய்வதற்கு முன் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை சரிபார்க்கிறார்கள். இந்தக் கட்டத்தில், நீண்ட வரிசைகள் இருக்கும். மணிக்கணக்கில் காத்திருந்த பிறகுதான் அந்த நபரின் எண் வந்து பயண அனுமதி கிடைக்கிறது.

இ-பாஸ்போர்ட்டில் இந்தக் கட்டத்தைக் கடக்க, பாஸ்போர்ட் மற்றும் விசாவை அதிகாரிகள் சரிபார்ப்பதில்லை. தானியங்கி இயந்திரம் சரிபார்க்கிறது. மெட்ரோவில் டோக்கன் போட்டவுடன் கேட் திறக்கப்படுவது போல, இமிக்ரேஷன் கேட்டில் இ-பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்தால் கேட் திறக்கப்படுகிறது.

இதனால் இ-விசாவும் கிடைக்குமா?

சில நாடுகளில் இந்த வசதி உள்ளது, நீங்கள் வீட்டில் அமர்ந்து இ-பாஸ்போர்ட் உதவியுடன் இ-விசா எடுக்கலாம். மெட்டாவெர்ஸ் ப்ளாக்செயின் சொல்யூஷனின் (Metaverse Blockchain Solution) நிறுவனர் ப்ரீத்தி அஹுஜாவிடம் இ-பாஸ்போர்ட் உள்ளது. வீட்டில் அமர்ந்த படியே இ-விசா பெறுவதாக அவர் சொல்கிறார். ஒரு நாடு இ-விசாவை வழங்கும் போது, அந்தத் தகவல் பாஸ்போர்ட்டில் உள்ள மின்னணு சிப்பில் ஏற்றப்படுகிறது.

இ-பாஸ்போர்ட் வைத்திருப்பவர் குடிவரவு வாயிலை அடைந்ததும், அங்கு நிறுவப்பட்டுள்ள இயந்திரம் மற்றும் கேமரா பாஸ்போர்ட்டில் உள்ள சிப்பை ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பிறகு கதவுகள் திறக்கப்படுகின்றன. பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பயணத்திலிருந்து அனைத்து நடவடிக்கைகளும் சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன. கணினியின் உதவியால், பல ஆண்டுகள் பழமையான பதிவுகளையும் எளிதாகக் காணலாம். இந்திய அரசு எப்போது இ-விசா வழங்கத் தொடங்கும் என்பது குறித்துத் தற்போது தெளிவான தகவல் இல்லை.

பயணி

பட மூலாதாரம், Getty Images

பிற நாட்டு இ-பாஸ்போர்ட் இந்தியாவில் எப்படிச் செயல்படுகிறது?

தற்போது, இ-பாஸ்போர்ட்டில் உள்ள சிப்பை ஸ்கேன் செய்யக்கூடிய குடிவரவு நுழைவு வாயில்கள் நம் நாட்டில் இல்லை. இதுகுறித்து ப்ரீத்தி அஹுஜா கூறுகையில், "கடவுச்சீட்டில் உள்ள சிப் இந்தியாவில் வேலை செய்யாது. கடவுச்சீட்டில் உள்ள தாள்கள் குடிவரவு அதிகாரிகளால் முத்திரையிடப்படுகின்றன, அதன் பிறகு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி கிடைக்கிறது. அதாவது இ-பாஸ்போர்ட்டுக்கான உள்கட்டமைப்பும் உருவாக்கப்படவேண்டும்." என்று தெரிவிக்கிறார்.

இ-பாஸ்போர்ட்டை யார் தயாரிப்பார்கள்?

நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸிடம், எலக்ட்ரானிக் காண்டாக்ட்லெஸ் இன்லேஸ் மற்றும் இ-பாஸ்போர்ட்டுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வாங்க மத்திய அரசு டெண்டர் கொடுத்துள்ளது. நாசிக்கின் இந்தியா செக்யூரிட்டி பிரஸ் கொள்முதல் செயல்முறையை முடித்த பின்னரே இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்படும்.

எந்தெந்த நாடுகளில் இ-பாஸ்போர்ட் நடைமுறை உள்ளது?

சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு (ICAO) மூலம் பாஸ்போர்ட்டுகளைத் தரநிலையாக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது ஐ.நா.வின் ஒரு அங்கமாகும். இது தவிர, இந்தத் தரநிலைகளைத் தத்தம் சொந்த விதிகளின்படி செயல்படுத்துவதற்கு அந்தந்த நாடுகளுக்கு உரிமை உண்டு. 2016 ஆம் ஆண்டில், அனைத்து பாஸ்போர்ட்டுகளும் இயந்திரத்தால் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

பாஸ்போர்ட்டின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உலகின் பல நாடுகள் இ-பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துகின்றன. ICAO பாஸ்போர்ட்டில் உள்ள சிப்பை அதாவது இ-பாஸ்போர்ட்டை கட்டாயமாக்கவில்லை. 100க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது இ-பாஸ்போர்ட்டுகளை வழங்குவதாக ஐ சி ஏ ஓ கூறுகிறது. தற்போது உலகில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் இ-பாஸ்போர்ட்டுகள் வைத்துள்ளதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில், இ-பாஸ்போர்ட் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

இ-பாஸ்போர்ட்டில் என்னென்ன முறைகேடுகள் சாத்தியம்?

சைபர் நிபுணர் பவன் துக்கல், "இ-பாஸ்போர்ட் என்பது, சொல்வதற்கும் கேட்பதற்கும் மிகவும் நன்றாக இருக்கிறது. இ-பாஸ்போர்ட் வருவதால், இணையப் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக இருக்கும். மின்னணு பாஸ்போர்ட்டின் தகவல்கள் திருடப்பட்டுத் தரவு தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது"என்கிறார்.

இ-பாஸ்போர்ட் பயன்படுத்துவோர் கருத்து

Metaverse Blockchain Solution இன் நிறுவனர் ப்ரீத்தி அஹுஜாவிடம் இ-பாஸ்போர்ட் உள்ளது. பிபிசியுடனான உரையாடலில், "கடந்த இருபது ஆண்டுகளாக என்னிடம் இங்கிலாந்தின் இ-பாஸ்போர்ட் உள்ளது. பாஸ்போர்ட்டின் அட்டைப் பக்கத்தில் ஒரு சிறிய மின்னணு சிப் உள்ளது, அது வெளியே தெரியவில்லை. அட்டைப் பக்கத்தைத் தவிர, உள் பக்கத்திலும் சாதாரண பாஸ்போர்ட் போல எனது அனைத்துத் தகவல்களும் உள்ளன.

சாதாரண பாஸ்போர்ட்டைப் போலவே, இ-பாஸ்போர்ட்டில் 30 அல்லது 60 பக்கங்கள் உள்ளன. லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் சென்றால், இ-பாஸ்போர்ட் இமிக்ரேஷனுக்குத் தனி வரிசையும் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குத் தனி வரிசையும் இருக்கிறது. இ-பாஸ்போர்ட்டுகளுக்கான வரிசை மிகக் குறுகியது. மிக வேகமாக நகர்கிறது. ஏனெனில் சரிபார்ப்புப் பணி இயந்திரத்தால் செய்யப்படுகிறது." என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: