ரயில்வே தேர்வில் குளறுபடி புகார்: பிகார் போராட்டக் களமானதன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்திய செய்தியாளர்
"நாங்கள் பட்டதாரிகள், நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம், எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்" என, இந்தியாவின் கிழக்கு மாநிலமான பிகாரில் இளைஞர் ஒருவர், என் சக செய்தியாளரிடம் இந்த வாரம் கூறினார்.
இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பிகாரில், சுமார் 12 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு தொடர்பாக மூன்று நாட்கள் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து அவர் இந்த வேதனையை வெளிப்படுத்தினார். இந்தியாவில் பெரிதளவில் வேலைவாய்ப்பை வழங்கும் துறையான ரயில்வேயில் 35,000 காலியிடங்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த பணியிடங்களுக்கு உரியவர்களை பணியமர்த்தும் நடைமுறை வெளிப்படைத் தன்மை இல்லாமலும் மற்றும் அதிக தகுதிகள் உள்ளவர்களை குறைந்த தகுதியுள்ள வேலைகளுக்கு போட்டியிட அனுமதிப்பது உட்பட சிக்கல்கள் நிறைந்ததாக இருப்பதாகவும், இப்பணிகளுக்கு விண்ணப்பித்தோர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஏற்பட்ட விரக்தி கோபத்திற்கு வழிவகுத்து, வன்முறையை அதிகரித்தது.
மாணவர்கள் ரயில்களை நிறுத்தி, பெட்டிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து, பணிநியமன நடைமுறைகளை ரயில்வே நிறுத்தியுள்ளது, மேலும், எதிர்காலத்தில் அனைத்து ரயில்வே தேர்வுகளிலிருந்தும் அவர்களைத் தடை செய்வதாக அச்சுறுத்தியது.
இந்த போராட்டங்கள் வேலையின்மை பற்றியது மட்டுமல்ல, ஆனால், "அதற்காக இளைஞர்கள் கொடுக்கும் விலை" குறித்தது என்று ஒரு செய்தித்தாள் தெரிவித்துள்ளது. என் சக பணியாளரிடம் பேசிய போராட்டக்காரர்களுள் ஒருவர், தான் ஒரு விவசாயியின் மகன் எனவும், நிலத்தை விற்று தன் தந்தை தன்னை படிக்க வைத்ததாகவும் கூறினார். தனக்கு வீட்டு வாடகை செலுத்துவதற்காகவும், நகரத்திற்கு சென்று தனியார் பயிற்சி வகுப்புகளில் படிப்பதற்கு கட்டணம் செலுத்துவதற்காகவும், தன் தாய் உடல்நிலை சரியில்லாதபோதும் மருந்துகளை வாங்க மாட்டார் என அவர் தெரிவித்தார். பக்கோடா கடை நடத்துவது கூட வேலைதான் என, 2018ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதி கூறியதை அவர் கேலி செய்தார். "பட்டதாரிகளை பக்கோடா வறுக்க ஏன் சொல்கிறீர்கள்?" என அவர் கூறினார்.
இந்த இளைஞரின் கொந்தளிப்பு, வன்முறையான போராட்டங்கள் ஆகியவை, இந்தியாவின் வேலை நெருக்கடியின் மீதான தீவிர கவனத்தை பல வழிகளில் ஈர்த்தது. இந்தியாவில் வேலையில்லாதவர்களில் கால் பகுதி மக்கள்தொகை கொண்ட மாநிலங்களான, பீகார் மற்றும் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், இந்த வாரம் ஏற்பட்ட வேலையின்மை தொடர்பான கலவரங்கள், அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என, பலர் நம்புகிறார்கள்.
வேறு இடங்களில் வேலைகள் உள்ளன என்பது அல்ல பிரச்சினை. இந்தியாவின் வேலையின்மை விகிதம் டிசம்பரில் ஏறக்குறைய 8% வரை அதிகரித்தது என்று ஒரு தன்னிச்சையான சிந்தனைக் குழுவான இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது. இது 2020 மற்றும் 2021 இன் பெரும்பகுதிக்கு 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியாவில் காணப்பட்ட எதையும் விட இது மிக அதிகம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உழைக்கும் வயது மக்களில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: 15-24 வயதுடையவர்களில் 27% பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள். ஒரு நபர் எவ்வளவு படித்தவராக இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் வேலையில்லாமல் இருப்பார்கள் மற்றும் குறைந்த ஊதியம் மற்றும் ஆபத்தான முறைசாரா வேலைகளை மேற்கொள்ள அவர்கள் விரும்ப மாட்டார்கள். தொழிலாளர்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களின் விகிதம் உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது. இளைஞர்களில் 18 முதல் 29 வயது வரை உள்ளவர்கள், பாரம்பரியமாக இந்தியாவில் வேலையின்மையின் சுமைகளை சுமக்கின்றனர். மேலும் அதிகமான இளைஞர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வதால், படித்த இளைஞர்கள் இந்தியாவில் அதிக வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளனர் என்று தொழிலாளர் பொருளாதார நிபுணர் ராதிகா கபூர் கூறுகிறார். "இது ஒரு புதிய பிரச்சனை அல்ல, நீண்ட காலமாக நிலவுகிறது" என்று அவர் என்னிடம் சொன்னார்.

பட மூலாதாரம், VISHNU NARAYAN
இந்தியா தனது இளைஞர்களுக்கு போதுமான வேலைகளை மற்றும் தரமான வேலைகளை உருவாக்கவில்லை. தொழிலாளர் கணக்கெடுப்புகள், இளைஞர்களில் கால் பகுதியினர் வீட்டில் அமர்ந்து "ஊதியமில்லாத குடும்ப வேலை" செய்வதாகவும், அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகரமாகவும், தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகவும் காட்டுகின்றன. மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே வழக்கமான வேலைகளைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களில் 75% பேருக்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்கள் இல்லை மற்றும் 60% பேர் சமூகப் பாதுகாப்புக்கு தகுதி பெறவில்லை.
அரசாங்க வேலைகளுக்கான போராட்டம் - உதாரணமாக, ரயில்வேயில் - இளம் இந்தியர்கள் மிகவும் பிரபலமான தற்காலிக, ஒப்பந்தம் அடிப்படையிலான வேலைகளை விட நிலையான, பாதுகாக்கப்பட்ட வேலைகளை விரும்புகிறார்கள் என்பதையும் காட்டுகிறது என்று டாக்டர் கபூர் கூறுகிறார். "தற்காலிக வேலை என்பது உறுதியான வாழ்க்கைப் பாதை இல்லாமல் ஆபத்தானது மற்றும் நிலையற்றது. படித்த இளைஞர் அதை விரும்புவதில்லை. தற்காலிக வேலையை ஒரு தீர்வாக கவர்வது வேலை நெருக்கடிக்கு தீர்வாகாது" என்றார்.
பீகார் போன்ற இடங்களில், விவசாயத்தில் அதிகரித்து வரும் நெருக்கடியால் வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்துள்ளது. நிலம் சிறியளவில் இருப்பதால், விவசாயம் லாபமில்லாமல் போகிறது. விவசாயக் குடும்பங்கள் நிலத்தை விற்று கடன் வாங்கித் தங்கள் குழந்தைகளை நகரங்களுக்குத் தனியார் பயிற்சி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அவர்களில் பலர் முதல் தலைமுறை கல்வியறிவு பெற்றவர்கள், வேலைகள் பற்றாக்குறை பொருளாதாரத்தில், 'ஒயிட் காலர்' வேலைகள் எனப்படும் உடல் உழைப்பை கோராத வேலைகளை விரும்புகிறார்கள்.
அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மோசமான தரநிலைகள் நம்பிக்கையைத் தூண்டுவதில்லை.

பட மூலாதாரம், Getty Images
பீகாரின் தலைநகரான பாட்னாவில், தனியார் பயிற்சிப் பள்ளிகளின் விளம்பரங்கள், அரசு வேலைகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற விரும்புபவர்களுக்கு உதவுவதாக உறுதியளிக்கின்றன. இப்போது ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் வேலை இல்லை என்று கூறுகிறார்கள்: கலவரத்தைத் தூண்டியதற்காக ஆறு பயிற்சிப் பள்ளி ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் அரசியல் கட்சிகள் வேலை நெருக்கடி குறித்து எப்படிப் போராடத் தவறி வருகின்றன என்பதையும் இந்த வாரத்தில் நடைபெற்ற பெருமளவில் தலைமையற்ற மற்றும் தன்னிச்சையான கலவரங்கள் கூறுகின்றன. சமூக வலைதளங்களில் தங்களின் போராட்டங்களுக்கு யாரும் செவிசாய்க்காததால் தாங்கள் வீதியில் இறங்கியதாக பீகார் மாணவர்கள் கூறுகின்றனர். இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், வீடுகளில் வேலையின்மையால் குடும்ப வன்முறைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. மற்ற ஆய்வுகள், "வேலையின்மை அல்லது குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட வேலை ஆகியவற்றிலிருந்து வன்முறை மற்றும் போருக்கு வலுவான, தானியங்கி காரணமான தொடர்பு இருப்பதாக பொதுவாக கூறப்படும் கூற்றுகளுக்கு அனுபவ ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை" என்று காட்டுகின்றன.
ஆனால், அவசரநிலையைத் தூண்டிய குடிமக்கள் அமைதியின்மை - அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பொது சிவில் உரிமைகளை நிறுத்தி ஆயிரக்கணக்கான மக்களை சிறையில் அடைத்தபோது - 1975 இல் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அமைதியின்மையுடன் தொடங்கியது என்பதை நினைவில் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.
18-24 வயதுக்குட்பட்ட இளம் இந்தியர்களில் 24% பேர் வேலையில்லாமல் இருந்ததாக அவசரநிலை காலத்தின் தொடக்கத்தின் ஒரு கணக்கெடுப்பு காட்டியது. இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயத்திற்கு முன்னதாக சில மிகப்பெரிய போராட்டங்கள் பீகாரில் நடந்தன.
பிற செய்திகள்:
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












