நடிகர் விஜய் குறித்து நீதிபதி எதிர்மறையாகக் கூறிய கருத்துகள் நீக்கம்

பட மூலாதாரம், Getty Images
தனது காருக்கு வரிவிலக்குக் கோரிய நடிகர் விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கூறிய எதிர்மறையான கருத்துகளை நீக்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் 'கோஸ்ட்' சொகுசு காரை நடிகர் விஜய் வாங்கினார். கார் வாங்கும்போதே இறக்குமதி வரி செலுத்தப்பட்டிருந்தது.
இந்த 'கோஸ்ட்' காரின் விலை 2012-ல் 2.25 கோடி ரூபாய். இதனை சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தபோது காருக்கான நுழைவு வரி செலுத்த வேண்டும் எனவும் அதன் பின்பே காரை பதிவு செய்து பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இறக்குமதி வரி, சாலை வரி மற்றும் நுழைவு வரி ஆகியவற்றை மொத்தமாக வைத்துப் பார்த்தபோது, காரின் விலையை விட அதிகமாக இருந்தது. ஆகவே, நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பில் ஏற்கனவே 20% இறக்குமதி வரி செலுத்திவிட்டதால் நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வரிவிலக்கு கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வரியையும் செலுத்தும்படி உத்தரவிட்டார்.
மேலும், சமூக நீதிக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல; நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பு என அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி அப்போது தெரிவித்திருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கில் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியை ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் ஜூலை மாத இறுதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பட மூலாதாரம், ACTOR VIJAY
இதற்குப் பிறகு, தனி நீதிபதி விஜய்க்கு எதிராகக் கூறிய எதிர்மறைக் கருத்துகளை நீக்கும்படி விஜய் தரப்பில் கோரப்பட்டது.
இந்த வழக்கில் நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி வாதாடும்போது, "தனி நீதிபதியின் கருத்தை நீக்க வேண்டும், நடிகர் விஜய் தன் கடின உழைப்பால் கார் வாங்கியுள்ளார். தனி மனிதர்கள் கார் வாங்க வேண்டுமா, பங்களா வாங்க வேண்டுமா என்பதையெல்லாம் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியதில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தெரிவித்த கருத்து தேவையற்றது.
மேலும், ஒருவர் நீதிமன்றத்தில் பொய் கூறினால் அவருக்கு அபராதம் விதிக்கலாம். மாறாக வழக்குத் தொடர்ந்ததற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மனுதாரர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆகவே தனி நீதிபதியின் கருத்தை நீக்க வேண்டும்" என வாதிட்ட்டார். மேலும் அந்தக் காருக்கு கட்ட வேண்டிய வரியான 32 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை ஆகஸ்ட் ஏழாம் தேதியே செலுத்திவிட்டதாகவும் விஜய் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சஃபீக் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தனி நீதிபதி கூறிய கருத்துகளை நீக்க உத்தரவிடப்பட்டது.
பிற செய்திகள்:
- இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
- மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிலிருந்து மீண்டும் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா?
- யுக்ரேன் பதற்றம்: ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்க்க அணி திரளும் மேற்கு நாடுகள்
- பிபின் ராவத் பஞ்சலோக சிலை: கடலூர் முதல் டெல்லிவரை கொண்டு செல்ல திட்டமிடும் முன்னாள் ராணுவத்தினர்
- உச்ச நீதிமன்றம்: அடுத்த 10 மாதங்கள் புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு மிகவும் முக்கியம் - ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








