தமிழ்நாட்டில் கொரோனா பரவல்: மேற்கு மாவட்டங்களில் அதிகரிப்பது ஏன்?

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்தாலும், மேற்கு மண்டலங்களில் தொற்றுப் பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ` பொங்கல் பண்டிகை விடுமுறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொற்று அதிகரித்த மாவட்டங்களில் எல்லாம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது' என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள்.

தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிகரித்தபடியே உள்ளது. கடந்த 22 ஆம் தேதி மாநிலம் முழுவதும் 30,744 என்ற அளவில் பரவல் இருந்தது. மறுநாளான 23 ஆம் தேதி 30,580 என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது. அதேநேரம், கடந்த ஜனவரி முதல் தேதியன்று ஆயிரத்து 489 என இருந்த தொற்று பாதிப்பானது, 23ஆம் தேதி நிலவரப்படி 30 ஆயிரத்து 580 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக படிப்படியாகத் தொற்று குறையத் தொடங்கியுள்ளது. அதாவது, 6,452 என இருந்த பாதிப்பு, 23 ஆம் தேதி நிலவரப்படி 6,383 ஆக குறைந்துள்ளது.

இதர மாவட்டங்களைக் கணக்கிட்டால், செங்கல்பட்டு 1841, திருவள்ளூர் 751, கோவை 3912, ஈரோடு 1220, திருப்பூர் 1507, சேலம் 1074, கிருஷ்ணகிரி 1010, கன்னியாகுமரி 1248, தஞ்சை 1123 என்ற எண்ணிக்கையில் பரவலின் வேகம் உள்ளது. அதேநேரம், அரியலூர் 177, கள்ளக்குறிச்சி 224, கரூர் 250, திருப்பத்தூர் 370, வேலூர் 198 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

இதில் உயிரிழப்பை பொறுத்தவரையில் கடந்த 23 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் 40 பேர் தொற்றால் இறந்துள்ளனர். குறிப்பாக, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று உயர்ந்துள்ளதாகவும் சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் தொற்றுப் பரவல் குறைந்து வருவது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், `` டிசம்பர் மாதம் நூறு பேரில் ஒருவர் இறப்பு என்று இருந்த விகிதமானது தற்போது ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற அளவில் குறைந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் 30 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. கோவிட் வழிமுறைகளைப் பின்பற்றியதால் சென்னையில் தொற்று குறையத் தொடங்கிவிட்டது. அதேநேரம், கோவை, தஞ்சை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்பட 30 மாவட்டங்களில் பரவல் அதிகரித்து வருகிறது' என்றார்.

கொரோனா
படக்குறிப்பு, கோவையில் நடந்த ஒரு பரிசோதனை முகாம்.

`` ஒவ்வொரு கொரோனா அலையின்போதும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கட்டத்தில் அது பரவும்விதம் அதிகரிக்கும். மூன்றாவது அலையில் இங்கிலாந்து, அமெரிக்கா எனப் பரவி, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு என தொற்றின் வேகம் அதிகரித்தது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்ததற்குக் காரணம் மக்கள் அடர்த்தி, போக்குவரத்துப் பயன்பாடு மற்றும் மருத்துவனைகள் அதிகமாக இருப்பதுதான்'' என்கிறார், பொது சுகாதாரத்துறை வல்லுநர் மருத்துவர் குழந்தைசாமி.

தொடர்ந்து பேசியவர், `` சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை ஒரு பகுதியாகவும் மேற்கு மண்டலங்களை ஒரு பகுதியாகவும் பார்க்கலாம். அதேபோல், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை இன்னொரு பகுதியாகப் பார்க்கலாம். இந்த மாவட்டங்களில் இருந்து சிறிய நகரங்களுக்குத் தொற்று பரவுகிறது.

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலகட்டத்தில்தான் பொங்கல் பண்டிகைக்காக மக்கள் ஊர்களுக்குச் சென்றனர். இதன் காரணமாக தொற்று அதிகரித்திருக்கலாம். சென்னையில் பரவலாக அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதால் அது தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இனி வரும் நாள்களில் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் குறையும்'' என்கிறார்.

``பரிசோதனைகளை குறைத்துக் காட்டுவதும் எண்ணிக்கை குறைவுக்குக் காரணம் என்கிறார்களே?'' என்றோம். `` அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. தனியாரிடம் இருந்து பரிசோதனை உபகரணங்களைப் பெற்று சுயமாக பரிசோதித்துக் கொள்பவர்களால் அதன் முடிவுகள் வெளியில் வராமல் இருக்கலாம். ஆனால், அது ஒரு சதவிகிதம் என்ற அளவுக்குத்தான் பார்க்க முடியும். பெரும்பாலும் ஆர்.டி.பி.சி.ஆர் மூலமாகத்தான் பரிசோதனைகள் நடக்கின்றன. லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் இந்தக் கணக்கில் வர மாட்டார்கள். மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. எனவே, தொற்று குறைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுகாதாரத்துறையில் எந்தப் புள்ளிவிவரங்களையும் மறைக்க முடியாது. மனித செயல்பாடுகள் எந்தெந்த மாவட்டங்களில் அதிகமாக உள்ளதோ, அங்கு தொற்று அதிகரித்துள்ளது. அவ்வாறு அதிகரிக்கும் தொற்றானது, படிப்படியாக குறைந்து வருவதும் வாடிக்கையானதுதான்'' என்கிறார்.

`` பொங்கல் பண்டிக்கைக்காக வெளியூர் சென்றவர்கள் எல்லாம் சென்னைக்கு வந்துவிட்டார்கள். அதற்கும் தொற்றுப் பரவல் அதிகரித்தற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொற்று பரவல் காலகட்டம் என்பதே இரண்டரை முதல் 5 நாள்கள்தான். பொங்கல் பண்டிகை முடிந்து எட்டு நாள்களாகிவிட்டன. அவ்வாறு பரவியிருந்தால் அதன் வெளிப்பாடு உடனே தெரிந்திருக்கும். ஆனால், அவ்வாறு தென்படவில்லை'' என்கிறார், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணிராஜன்.

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போலீஸ்காரர் ஒருவர்.
படக்குறிப்பு, கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போலீஸ்காரர் ஒருவர்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` எந்த மாவட்டத்தில் தொற்று அதிகமாகத் தென்பட்டதோ, அங்குதான் முதலில் குறையத் தொடங்கும். அமெரிக்காவில் அதிகமாக இருந்த தொற்று குறையத் தொடங்கிவிட்டது. சென்னையைப் பொறுத்தவரையில் மற்ற மாவட்டங்களைவிடவும் இங்கு பரவல் அதிகமாக இருந்தது. அது தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உள்ள மாவட்டங்களில் பரவல் குறையும். இதுதான் தொற்றுப் பரவலின் அடிப்படை'' என்கிறார்.

`` இது சமூகப் பரவலாக மாறிவிட்டது. ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது 1.1 என்ற அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் 3.4 என்ற அளவில் சென்றது. ஒவ்வொருவரும் 3 பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்தினர். அந்தவகையில், சென்னையில் குறையத் தொடங்கிவிட்டது. இதனை அறிவியல்பூர்வமாகத்தான் பார்க்க வேண்டும். ஊரடங்கு, கோவிட் தடுப்பு முறைகளை நடைமுறைப்படுத்தியது, தடுப்பூசி முகாம்கள் ஆகியவை பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தன'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: