உச்சம் தொடும் பருத்தி விலை: திருப்பூரில் இரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்கள்

திருப்பூர் நூல்

பட மூலாதாரம், Getty Images

ஆயத்த ஆடைகளுக்கு அடிப்படை மூலப்பொருளாக விளங்கும் பருத்தியின் விலை இந்தியாவில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ஜவுளித்துறை சார்ந்துள்ள பல துறைகளும் கடும் பின்னடவைச் சந்தித்துள்ளன. பருத்தி விலை உயர்வால் அதிலிருந்து தயாரிக்கப்படும் நூலின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவின் 48% நூல் உற்பத்தி தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. ஆனால் நூல் உற்பத்திக்கு தேவையான பருத்தி ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து தான் வருகிறது.

தற்போது நூல் விலை உயர்வால் ஜவுளித்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

திருப்பூர் ஜவுளித்துறையின் ஓர் ஆண்டு வர்த்தகம் மட்டும் ரூ.60,000 கோடி ஆகும். இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஜவுளி ஏற்றுமதிகளில் 55% திருப்பூரில் தான் உற்பத்தியாகிறது. கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் ஜவுளித்துறை சார்ந்து இயக்கும் 8,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர் ராமச்சந்திரன், `ஜவுளித்துறை தான் திருப்பூரில் பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது. ஆனால் இந்த நூல் விலை உயர்வால் தொழில் மந்தமடைய ஆரம்பித்திருக்கிறது. இந்த தற்காலிக வேலைநிறுத்தம் தொடர் வேலைநிறுத்தமாக மாறிவிடுமோ என்கிற அச்சம் எங்களுக்கு உள்ளது. கொரோனாவுக்குப் பிறகு தான் தற்போது தான் ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியது. இந்த தொழில் முடங்கினால் திருப்பூரின் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.` என்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சம்பத், `பொருளாதார மந்த நிலைக்கு பிறகுமே ஜவுளித்துறை முந்தைய நிலையை அடையவில்லை. பெரிய வர்த்தகர்களாலே தற்போதைய விலை உயர்வை சமாளிக்க முடியாத நிலையில் சிறிய வர்த்தகர்கள் மிகக் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். 2011-ல் இதே போல் அத்தியாவசிய பொருள் விலை உயர்வால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு சென்றன. தற்போது அதை விட மோசமான நிலை உள்ளது.

தற்போதைய பருத்தி மற்றும் நூல் விலை வரலாற்றில் இல்லாத உச்சம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே ஜவுளித்துறை நலிவடைந்து தான் வருகிறது. வெறும் வர்த்தக மதிப்பை வைத்து மட்டும் எல்லாம் சீராக இருப்பதாக சொல்லிக் கொள்ள முடியாது. 2016 - 2017 காலகட்டத்தில் இருந்த வர்த்தக அளவைக் கூட நாம் எட்டவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலை தொடர்ந்தால் ஜவுளித்துறை மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடும் என்றார்`

பருத்தி விலை
படக்குறிப்பு, செந்தில், செயலாளர் - திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் செந்தில், "மூலப் பொருட்களின் வரலாறு காணாத நூல் விலை உயர்வு ஜவுளித்துறையை கடுமையாக பாதித்துள்ளது. நூல் விலை கிலோ ஒன்றுக்கு 90% வரை உயர்ந்துள்ளது," என்றார்.

"குறிப்பாக ஏற்றுமதி ஆர்டர்கள் பெறுவதற்கான மாதிரிகளை அனுப்பி மூன்று மாதங்கள் கழித்து தான் ஆர்டர்கள் உறுதி செய்யப்படும். ஆனால் நூல் விலை உயர்வால் மூன்று மாதங்கள் முன்பு ஒப்புக்கொண்ட விலைக்கு தற்போது எங்களால் ஆடைகளை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இதனால் ஏற்றுமதி தேக்கமடைந்து கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது."

"இதனால் சர்வதேச வர்த்தகர்கள் வங்கதேசம், வியட்நாம் மாதிரியான நாடுகளை நோக்கிச் செல்கின்றனர். இந்த நாடுகளுக்கு தேவையான பருத்தி, நூல் போன்ற மூலப் பொருட்களும் இந்தியாவிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் வீழ்ச்சியில் அந்த நாடுகள் வளர்வதற்கு நாமே முக்கியமான காரணமாக அமைந்து விடுகிறோம்," என்று அவர் கூறினார்.

பருத்தி விலை

பட மூலாதாரம், Getty Images

"இதனால் அரசாங்கம் உடனடியாக நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீது உள்ள 11% வரியை ரத்து செய்ய வேண்டும். இந்தியாவில் உள்நாட்டு தேவைகளுக்குப் பிறகே நூல், பருத்தி உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்தியாவில் நிலைமை சீராகும் ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடைவிதிக்க வேண்டும்.

இதற்கு அரசின் கவனத்தை ஈர்க்கத்தான் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம். இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசாங்கம் தலையிட்டு விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.

பருத்தி விலை

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர் ராமச்சந்திரன், `ஜவுளித்துறை தான் திருப்பூரில் பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது. ஆனால் இந்த நூல் விலை உயர்வால் தொழில் மந்தமடைய ஆரம்பித்திருக்கிறது. இந்த தற்காலிக வேலைநிறுத்தம் தொடர் வேலைநிறுத்தமாக மாறிவிடுமோ என்கிற அச்சம் எங்களுக்கு உள்ளது. கொரோனாவுக்குப் பிறகு தான் தற்போது தான் ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியது. இந்த தொழில் முடங்கினால் திருப்பூரின் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.` என்றார்.

சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சம்பத், `பொருளாதார மந்த நிலைக்கு பிறகுமே ஜவுளித்துறை முந்தைய நிலையை அடையவில்லை. பெரிய வர்த்தகர்களாலே தற்போதைய விலை உயர்வை சமாளிக்க முடியாத நிலையில் சிறிய வர்த்தகர்கள் மிகக் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். 2011-ல் இதே போல் அத்தியாவசிய பொருள் விலை உயர்வால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு சென்றன. தற்போது அதை விட மோசமான நிலை உள்ளது. தற்போதைய பருத்தி மற்றும் நூல் விலை வரலாற்றில் இல்லாத உச்சம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே ஜவுளித்துறை நலிவடைந்து தான் வருகிறது. வெறும் வர்த்தக மதிப்பை வைத்து மட்டும் எல்லாம் சீராக இருப்பதாக சொல்லிக் கொள்ள முடியாது. 2016 - 2017 காலகட்டத்தில் இருந்த வர்த்தக அளவைக் கூட நாம் எட்டவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலை தொடர்ந்தால் ஜவுளித்துறை மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடும் என்றார்`

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: