தமிழ்நாடு: `மீண்டும் பாடம் எடுக்கச் சொல்லி குழப்புகிறார்கள்' - சர்ச்சையில் துணை ஆய்வாளர் நியமனங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
பள்ளிக்கல்வித்துறையில் பள்ளித் துணை ஆய்வாளர்களை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதியவர்களை நியமிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. `நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் ஏன் பள்ளிக்கே எங்களை அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. இதன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன' என்கின்றனர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள். என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் 120 பள்ளித் துணை ஆய்வாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் 3 முதல் 10 ஆண்டுகள் வரையில் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு செல்வது, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது, பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளை ஆய்வு செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 6.1.2022 அன்று பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர் தொகுதி இணை இயக்குநர் பி.ஏ.நரேஷிடம் இருந்து ஒரு செயல்முறை சுற்றறிக்கை வெளிவந்துள்ளது. அதில், `மூன்றாண்டுகள் பணி முடித்த அனைத்து பள்ளித் துணை ஆய்வாளர்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு புதிய பள்ளித் துணை ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இதனால், பள்ளித் துணை ஆய்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பள்ளித் துணை ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் கிருபாகரன், `` அரசுப் பணியில் 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஐந்து துறைத் தேர்வுகளை எதிர்கொண்டு பள்ளித் துணை ஆய்வாளராக நியமிக்கப்பட்டோம். தமிழ்நாட்டில் 120 கல்வி மாவட்டங்களில் 120 பேர் வேலை பார்த்து வருகிறோம். எங்களில் 3 முதல் 10 ஆண்டுகள் வரையில் பணியில் உள்ளவர்கள் இருக்கின்றனர். இதுவரையில் பள்ளித் துணை ஆய்வாளர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பியதாக வரலாறு இல்லை'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகச் சிறப்பாக பணிபுரிந்து வருகிறோம். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சிறப்பாக செயல்படலாம் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், எங்களை மீண்டும் பள்ளிக்கே செல்லுமாறு கூறுகின்றனர். எங்கள் பணியிடங்களில் தகுதி, திறமை உள்ளவர்களை 10 மணிநேரத்தில் எப்படிக் கண்டறிந்து நியமிப்பார்கள் எனத் தெரியவில்லை. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சரை சந்தித்துப் பேசினோம். அவருக்கு இதில் உடன்பாடு இல்லை எனத் தெரியவருகிறது.
`இது அரசின் கொள்கை முடிவு, நிர்வாக சீர்திருத்தம்' என்ற பெயரில் ஏன் பள்ளிக்கே அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. எங்களுக்கு வேறு வழி தெரியாததால் மதுரை உயர் நீதிமன்றத்தில் 12 பேர் வழக்கு தொடர்ந்தோம். கடந்த 7 ஆம் தேதி இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. நீதிமன்றத் தடை இருந்த நிலையில், `அதன் நகல் கிடைக்கவில்லை' எனக் கூறி தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட பள்ளித்துணை ஆய்வாளர்களை இடம் மாற்றிவிட்டனர். நாங்கள் என்ன குற்றவாளிகளா? நாங்கள் பள்ளிக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம். அரசுக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. ஆனால், எங்களை அனுப்புவதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் சொல்ல வேண்டும்'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், `` பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் ஒப்புதலின்றி இந்த இடமாற்றம் நடப்பதாகப் பார்க்கிறோம். ஆளும்கட்சியைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், இந்த நியமனங்களில் தலையீடு செய்வதாகவும் கூறப்படுகிறது. ஆத்தூர் கல்வி மாவட்டத்தில் ஏற்கெனவே ஒரு பள்ளித் துணை ஆய்வாளர் இருக்கிறார். தற்போது புதிதாக பள்ளித் துணை ஆய்வாளரை நியமித்துள்ளனர். இதன்மூலம் ஒரே மாவட்டத்தில் 2 பள்ளித் துணை ஆய்வாளர்கள் உள்ளனர். இந்த நியமனத்தில் முறைகேடு நடக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது'' என்கிறார்.
பள்ளித் துணை ஆய்வாளர்கள் நியமன சர்ச்சை தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` வகுப்புகளை ஆய்வு செய்யும் பணிகளில் பள்ளித் துணை ஆய்வாளர்கள் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, 6,7,8 ஆகிய வகுப்புகளில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உதவியாக இருந்தனர்.
அவர்கள் ஆசிரியராக இருந்ததால்தான் பள்ளித் துணை ஆய்வாளர்கள் என்ற பதவிக்கு வந்தனர். அதற்கான அடிப்படைத் தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதே தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரம் பேர் உள்ளனர். எனவே, அவர்கள் இதே இடத்தைக் கேட்பது சரியில்லை. இவர்கள் அனைவரும் 8 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என வேலை பார்த்துவிட்டனர். மீண்டும் வகுப்பறைக்குச் சென்று பாடம் எடுப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆளும்கட்சியைச் சேர்ந்த ஆசிரியர் சங்கத்தினர் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்களே? என்றோம். `` அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஒரே பணியிடத்தில் இருப்பதால் அவர்கள் இடமாறுதலை விரும்பவில்லை. தவிர, அவர்கள் முழுக்க நிர்வாகப் பணிக்கு வரவில்லை. எனக்கு ஆசிரியர் வேலை தெரியாது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது? மாவட்ட கல்வி அலுவலருக்குக் கிடைக்கும் மரியாதை இவர்களுக்குக் கிடைப்பதால், அதனை விடுவதற்கு இவர்களுக்கு மனமில்லை'' என்கிறார்.
மேலும், `` 120 பணியிடங்களில் 48 பேரை மட்டுமே இடமாற்றம் செய்கிறோம். மற்றவர்களை நீக்கவில்லை. இவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லும் வகையில் அவர்களுக்குத் தேவையான இடங்களைக் கூறி விரும்பிய இடத்துக்கு அனுப்புகிறோம். சொந்த மாவட்டத்தில் காலியிடம் இல்லாவிட்டாலும் அவர்கள் விரும்பிய வேறொரு இடத்தைத் தேர்வு செய்யலாம். இதுநாள் வரையில் தலைமை ஆசிரியர்களிடம் இவர்கள் வேலை வாங்கினர். இப்போது தலைமை ஆசிரியருக்குக்கீழே வேலை பார்க்க வேண்டும். அதுதான் இவர்களுக்கு பிரச்னையாக உள்ளது'' என்கிறார்.
பிற செய்திகள்:
- தெலங்கானாவில் காளி சிலையின் காலடியில் மனிதத் தலை - ஊடகச் செய்தியின் பின்னணி
- நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசி தேவையா? வல்லுநர்கள் சொல்வதென்ன?
- துபாய்க்கு சுற்றுலா செல்கிறீர்களா? - நீங்கள் தவறவிடக் கூடாதவை
- ஏழை நாடுகளை தனது கடன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?
- மிளகாய் பொடியை நுகர வைத்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








