தெலங்கானாவில் காளி சிலையின் காலடியில் மனிதத் தலை - ஊடகச் செய்தி

மகா காளி சிலை
படக்குறிப்பு, மகா காளி சிலை

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் மகா காளி சிலையின் காலடியில் மனிதத் தலை இருந்ததாக தெலங்கானா செய்தித்தாளான ஈநாடு செய்தி வெளியிட்டுள்ளது.

வேண்டுதலுக்காக இது நடந்ததா, இல்லை வேறு ஏதாவது காரணமா என்பது இன்னும் தெரியவில்லை. நல்கொண்டா மாவட்டம் சிந்தப்பள்ளி மண்டலம் விராட்நகர் காலனி, நாகார்ஜுனாசாகர் - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. சாலையை ஒட்டி மேட்டு மகா காளி கோவிலின் சிலை உள்ளது.

சம்பவம் நடந்த கோவிலின் பூசாரி பிரம்மச்சாரி திங்கள்கிழமை காலை கோவிலில் உடல் இல்லாமல் தலை மட்டும் தனியாக இருப்பதைக் கண்டிருக்கிறார். உடனடியாக அது தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக ஈநாடு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நபரை அடையாளம் காணும் வகையில் தலையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. பகிரப்பட்ட புகைப்படங்கள் மூலம் பிறகு கிடைக்கப்பட்ட தகவலின்படி, இறந்தவர் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள சன்யாபஹாட் கிராமத்தைச் சேர்ந்த ஜஹேந்தர் நாயக் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஜஹேந்தர் நாயக் மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த ஐந்தரை ஆண்டுங்களாக வீட்டை விட்டு வெளியே இருந்து வந்திருக்கிறார். சில ஆண்டுகள் ரங்காரெட்டி மாவட்டத்தில் இப்ராஹிம்பட்டினம் அருகே துர்க்யாஞ்சல் என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலில் வசித்து வந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்க 8 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எங்கள் விசாரணை நடந்து வருகிறது" என துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ரெட்டி உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக ஈநாடு கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: