ஆன்லைன் மோசடி: இணைய செயலியில் பணத்தை இரட்டிப்பாக்க ஆசைப்பட்டு ஏமாற்றப்பட்ட கிராம மக்கள்

பட மூலாதாரம், Getty Images
(இன்று 08.01.2022 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
இணைய செயலியில் முதலில் 500 ரூபாய் வரை முதலீடு செய்த பணம் அடுத்த நாள் இரட்டிப்பாகி வந்துள்ளது. அதை நம்பி லட்சக் கணக்கில் முதலீடு செய்து ஒட்டு மொத்த கிராமமே பணத்தை இழந்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கட்மூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு, ஒரு நிறுவனத்தின் பேரில் வாட்ஸ்-ஆப் மூலம் ஒரு மொபைல் செயலிக்கான இணைப்பு வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்த போது, அந்த செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பி சிலர் அதில் 500 ரூபாய் வரை முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணம் அடுத்த நாள் இரட்டிப்பாகி வந்துள்ளது. இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது.
உடனே இதை நம்பி அந்த செயலியில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் இந்த முறை முதலீடு செய்யப்பட்ட பணம் திரும்ப வரவில்லை.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் அது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரை கணக்கிடக்கோரிய மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க இறுதிவாய்ப்பு - உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
மாநில அளவில் சிறுபான்மையினரை கணக்கிடுவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி வாய்ப்பு அளித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் 'நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இருப்பினும், சிறுபான்மையினருக்கான சலுகைகள் எதுவும் அவா்களுக்கு கிடைப்பதில்லை.
ஏற்கெனவே, 'டிஎம்ஏ பாய் ஃபவுண்டேஷன்' வழக்கில், நாட்டின் நலன் கருதி சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஆனால், கடந்த 2004-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சட்டத்தில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்.
உண்மையான சிறுபான்மையினருக்கு சலுகைகள் மறுப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, லடாக், மிசோரம், லட்சத்தீவுகள், காஷ்மீா், நாகாலாந்து, மேகாலயா, அருணாசல பிரதேசம், பஞ்சாப், மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் ஜுடாயிஸம், பஹாயிஸம், இந்துயிஸம் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றுவோர் சிறுபான்மையினராக உள்ளனா். எனவே, அவா்களை சிறுபான்மையினராக அறிவித்து, அவா்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.கே.கௌல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள் ஆகிய ஐந்து சமூகத்தினரை சிறுபான்மையினராக மத்திய அரசு அறிவித்ததை எதிா்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரிக்கலாம் என்று மனுதாரர் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர்.
மேலும், அஸ்வினி குமாா் உபாத்யாய தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க கடைசி வாய்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் கூறினர், என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க கிராமத்தினர் உறுதி: விசாரணைக்கு போலீஸார் உத்தரவு

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் கன்டி கலா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிப்போம் என்று உறுதி மொழியேற்கும் காணொளி வைரலாகியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணைக்கு உத்தர விட்டுள்ளனர். கடந்த 1ஆம் தேதி கன்டி கலா கிராமத்துக்கு பல்ராம்பூர் மாவட்டம் ஆரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டு கொண்டாட வந்துள்ளனர். ஆரா கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் கன்டி கலா கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் மத ரீதியான மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆரா கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அன்றே அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இது கன்டி கலா கிராமத்தினரைக் கொதிப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் கடைகளைப் புறக்கணிப்போம் என்று கன்டி கலா கிராம மக்கள் உறுதியேற்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
துணை காவல் கண்காணிப்பாளர் விவேக் சுக்லா கூறுகையில், ''சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியில் இருந்து சிலர் கன்டி கலா கிராமத்துக்கு வந்து மக்களை தூண்டிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக உறுதியேற்க வைத்துள்ளனர். அவர்கள் யாரென கிராம மக்களுக்குத் தெரியவில்லை. மக்களை தூண்டி விட்டவர்களை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்வோம்'' என கூறியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- மனித மாமிசம்: பாலுறவு கொள்வதாக அழைத்து கொன்று திண்ற முன்னாள் ஆசிரியர்
- ஸ்டீஃபன் ஹாக்கிங்: காலப் பயணிகளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்த அறிவியல் மேதை
- பஞ்சாப் போராட்டத்தில் சிக்கிய நரேந்திர மோதி: நேரில் பார்த்தவர்கள் சொல்வதென்ன? களத் தகவல்கள்
- கூட்டுறவு சங்க பதவிக்கால குறைப்பு மசோதா: ஸ்டாலின் அரசு இனி என்ன செய்யும்?
- உடல் வெட்கத்திலிருந்து விடுதலை பற்றி பேசியதா நிகண்ட் புடவை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








