கூட்டுறவு சங்க பதவிக்கால குறைப்பு மசோதா: ஸ்டாலின் அரசு இனி என்ன செய்யும்?

பட மூலாதாரம், TN ASSEMBLY
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தைக் குறைப்பது தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவு வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. `கூட்டுறவு அமைப்புகளில் தி.மு.கவினரைக் கொண்டு வருவதற்காகவே இப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது' என்கிறது அ.தி.மு.க. தமிழ்நாடு அரசின் முயற்சியால் இனி என்ன நடக்கும்?
எடப்பாடி சொன்ன காரணம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தைக் குறைப்பது தொடர்பான மசோதா ஒன்றை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலமானது ஐந்தாண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா அடிப்படையில் பார்த்தால் 2018ஆம் ஆண்டு தேர்வான அ.தி.மு.கவினரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
மேலும், தனி அலுவலர்களின் பதவிக்காலத்தையும் 2022, ஜூன் 30 வரையில் நீட்டித்து சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்டமுன்வடிவினை எதிர்த்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டாக குறைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. இந்த திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்,' என்கிறார்.
மேலும், அனைத்து கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்கி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடனில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளது. போலி நகைகளை அடகு வைத்தும் நகைகளை அடகு வைக்காமலும் மோசடி நடைபெற்றுள்ளது," என்று கூறினார்.
இதற்கு காரணமான அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தாமல் அதிமுகவினரே பதவி நீட்டிப்பு மற்றும் நியமனம் செய்யப்பட்டனர்." என்று பெரியசாமி தெரிவித்தார்.
முன்கூட்டியே கோடிட்ட கே.என்.நேரு
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற்ற தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, `விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக பொறுப்புகளில் அ.தி.மு.கவினர் உள்ளதால் அவர்கள் மக்களிடம் தங்களுக்கு சாதகமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் நமக்கு பாதிப்பு ஏற்படும்' எனப் பேசியதாகத் தகவல் வெளியானது.
மேலும், `கூட்டுறவு சங்கங்களை அவ்வளவு எளிதில் கலைக்க முடியாது. இதுதொடர்பாக சட்டத் திருத்தங்களை ஆராய வேண்டும். மாநிலம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்' என அமைச்சர் கே.என்.நேரு பேசியதாக செய்திகள் வெளியானது. இதன் தொடர்ச்சியாகவே, திருத்த சட்ட முன்வடிவினை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளதாகவும் அ.தி.மு.க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், K.N. NEHRU
தேர்தலில் நடந்த மோசடிகள் என்ன?
``தமிழ்நாடு அரசின் இந்த மசோதாவை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``தமிழ்நாடு அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். காரணம், கூட்டுறவு அமைப்புகளை புனரமைக்கும் விதமாக 2011ஆம் ஆண்டு 97 ஆவது திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திருத்தத்துக்குப் பிறகு தேர்தலை எதிர்கொள்ளும்வகையில் தமிழ்நாட்டில் 1983 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கூட்டுறவு சங்கச் சட்டம் திருத்தப்பட்டது. இந்தச் சட்டத்தில் 33 ஏ என்ற ஒரு பிரிவை உருவாக்கினர். அதன்படி 2013 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தலை அ.தி.மு.க நடத்தியது.

அந்தத் தேர்தலில் உறுப்பினர் சேர்ப்பு, வேட்பு மனுத்தாக்கல், பரிசீலனை என அனைத்திலும் மோசடி நடந்தது. ஆளும்கட்சியினர் மட்டுமே அந்தத் தேர்தலில் பங்கேற்றனர். அப்போது கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் என்பது ஐந்தாண்டுகளாக கொண்டு வரப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது கூட்டுறவு சங்க தேர்தலிலும் அனைத்து பொறுப்புகளையும் அ.தி.மு.கவே முழுமையாகக் கைப்பற்றியது,'' என்கிறார்.
அ.தி.மு.கவை மீறி எதுவும் செய்ய முடியவில்லை
``மாநிலத்தில் உள்ள 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் என்பது 2018 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். இதுவரையில் நான்கு கட்டங்களாகத்தான் நடந்துள்ளன. காரணம் தேர்தல் முறைகேடு தொடர்பான ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்ததுதான். இதன்பிறகு கூட்டுறவு அமைப்புகளில் நடந்த பணி நியமனங்கள், நெல் கொள்முதல், ஏலம் விடுவது, விற்பனை, கட்டமைப்புப் பணிகள், கடன் வழங்குதல், அலுவலகம் புதுப்பிப்பது, பொங்கல் பரிசு வழங்குவது என ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகத் தகவல் வெளியானது.
அண்மையில் பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவற்றை வழங்கியதில் மோசடி நடந்திருப்பதைக் கண்டறிந்து இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், பதவியில் தொடர்ந்து அ.தி.மு.கவினர் உள்ளதால் தி.மு.க அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அ.தி.மு.க சேர்ந்தவர்தான் காசோலையில் கையொப்பமிடுவார். இதனை மீறி இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை,'' என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

பட மூலாதாரம், ANI
ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா?
தொடர்ந்து பேசுகையில், ``கூட்டுறவு சங்க சட்டத்தில் 33 (10) என்ற விதியில் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விதியில் மூன்றாண்டுகளாக அதனைத் திருத்தம் செய்துள்ளனர். தற்போது கூட்டுறவு அமைப்புகளை சீரமைக்கும் பணியில் ஆளும்கட்சி ஈடுபட்டுள்ளது. கிராமப்புற மக்கள் நம்பக்கூடிய அமைப்பாக கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு மக்கள் நம்பிக்கையோடு முதலீடு செய்ய வேண்டும்.
இதன் நிர்வாகங்களை சீரமைப்பது அவசியம். தற்போது புதிய திருத்தத்தில் செயல் ஆட்சியர் என்பதற்குப் பதிலாக தனி அதிகாரி என்ற வார்த்தையை சேர்த்துள்ளனர். நிர்வாகக் குழுவைக் கலைத்த பிறகு தனி அலுவலர்களை நியமிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்தத் திருத்தத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் உடனடியாக நிர்வாகக் குழுக்களை கலைப்பதற்கு வாய்ப்புள்ளது'' என்கிறார்.
மேலும், ``இனிவரும் நாள்களில் தேர்தல் நடத்தும் பணியை மேற்கொள்ளும்போது தகுதியானவர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்கு அறிவிப்பு செய்ய வேண்டும். பல சங்கங்களில் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் எனப் பலரையும் சேர்த்துள்ளனர். வாக்காளர் பட்டியல் வெளியிட்டு அதனைத் திருத்துவதற்குக் கால அவகாசம் வழங்க வேண்டும். அனைவருக்கும் முறையாக அடையாள அட்டை, வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை, வாக்களிக்கும் இடம் போன்றவற்றை முறையாக அமைக்க வேண்டும். இந்தப் பணியில் ஆசிரியர்களை நியமித்து ஜனநாயகப்பூர்வமாக நடத்த வேண்டும். அரசின் இந்தச் சட்டத் திருத்தம் தேவையான ஒன்று. கூட்டுறவு அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,'' என்கிறார்.
தி.மு.கவினருக்கே பதவிகளா?
தி.மு.க அரசின் கூட்டுறவு திருத்த சட்ட முன்வடிவு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க மாநில செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், ``கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வதுதான் ஜனநாயகம். தி.மு.கவினரைக் கொண்டு வருவதற்கான முயற்சியின் ஓர் அங்கமாகத்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது'' என்கிறார்.

பட மூலாதாரம், VAIGAISELVAN
மேலும், ``நகைக்கடன், பயிர்க்கடன் ஆகியவற்றில் முறைகேடு ஏற்பட்டதாகக் கூறுவது தவறான கருத்து. கூட்டுறவுத் துறையில் பத்தாண்டுகாலம் அ.தி.மு.க சிறப்பாக செயல்பட்டது. எந்த அரசும் செய்யாத வகையில் விவசாயக் கடனை ரத்து செய்தோம். தற்போது தி.மு.கவினரின் நலனுக்காக இப்படியொரு திருத்தத்தைக் கொண்டு வருகின்றனர்,'' என்கிறார்.
தி.மு.க சொல்வது என்ன?

பட மூலாதாரம், TN ASSEMBLY
``கூட்டுறவுத் துறையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை என நாங்கள் கூறவில்லை. சென்னை உயர் நீதிமன்றம்தான் கூறியது. `யாருக்குக் கடன் கொடுக்கிறார்கள், யார் தலைவர் எனத் தெரியவில்லை. முழுக்க முழுக்க முறைகேடுகளின் இடமாக கூட்டுறவு சங்கங்கள் உள்ளன' எனவும் நீதிமன்றம் கூறியது. அதனைக் கலைக்க வேண்டும் என்ற புகார்கள் வந்தபோதுகூட, `எங்களுக்குக் கலைக்கும் எண்ணம் இல்லை. ஆனால், புகார்களின் பேரில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றோம்'' என்கிறார், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி.
தொடர்ந்து பேசுகையில், ``அ.தி.மு.கவினரின் சொந்த நலன்களுக்காக அரசாணைகள் போடப்பட்டன. அதனை முறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது மீண்டும் தேர்தல் நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க மட்டும் அல்ல, உறுப்பினராக யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இந்தத் தேர்தலை நடத்தும் முறையில் யாருக்கு விருப்பமில்லையென்றாலும் நீதிமன்றத்துக்கு அவர்கள் செல்லலாம். தி.மு.கவினருக்காகத்தான் தேர்தல் நடத்தப்படுவதாக கூறுகிறார்கள் என்றால், அ.தி.மு.கவினருக்காகத்தான் அன்றைக்கு கூட்டுறவு சங்க தேர்தல் நடந்ததா?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
மேலும், ``கூட்டுறவு அமைப்புகள் தொடர்பாக, ஏற்கெனவே பல புகார்கள் வந்துள்ளன. அதில் உண்மை உள்ளது. அதனால் அவற்றை முறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதால் புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்தனர். ஜனநாயக அமைப்பில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவது இயல்பு. கூட்டுறவு அமைப்புகளை முறைப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்,'' என்கிறார்.
பிற செய்திகள்:
- ஆபத்தான ஒமிக்ரானை லேசானது என்றழைக்கக் கூடாது - உலக சுகாதார அமைப்பு
- "நாடு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது"- பாஜக எம்.பி வருண்காந்தி விமர்சனம்
- சுல்லி டீல்ஸ், புல்லி பாய் செயலிகள்: ஒரே மாதிரி வழக்குகள் - டெல்லி, மும்பை போலீஸ் கையாண்டது எப்படி?
- கஜகஸ்தான்: அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்க ரஷ்ய படை விரைந்தது - டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












