ராஷ் பிஹாரி போஸ்: ஜப்பானுக்கு தப்பிச்செல்ல காரணமாக இருந்த குண்டுவெடிப்பு

- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பலருடைய போராட்ட வரலாறுகள் இன்னும் முழுமையாக தெரியவில்லை அல்லது உலகின் கவனத்தை பெரிதாக ஈர்க்கவில்லை எனலாம். அதில் ராஷ் பிஹாரி போஸ் என்ற விடுதலை வீரரின் வரலாறும் அடக்கம்.
ஜப்பானில் சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்க முயன்றபோது, அவருக்கு உதவியாக இருந்தவர் என்ற அளவில் பலருக்கும் ராஷ் பிஹாரி போஸை தெரியும். ஆனால், அவர் ஜப்பானுக்கு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றதன் காரணம் தெரியுமா?
அன்று டிசம்பர் 23, 1912.
1910 முதல் 1916 வரை, இந்தியாவின் வைசிராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் இருந்தார் லார்ட் ஹார்டின்ஜ் (Lord Hardinge). முகலாயர்களின் நகரமாக இருந்த டெல்லியை பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக மாற்றியபிறகு, அதிகாரப்பூர்வமாக நகரத்திற்குள் யானை மீது நுழைந்தார்.
லார்ட் ஹார்டின்ஜ் டெல்லிக்குள் நுழையும்போது, அவர்மீது ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால், வைசிராய் சில காயங்களோடு உயிர் பிழைத்துவிட்டார். அவர்மீது வெடிகுண்டை வீசிய இளம் புரட்சியாளர் அந்த இடத்திலிருந்து தப்பித்துவிட்டார். வைசிராய் ஹார்டின்ஜை கொல்வதற்கான அந்தத் தீட்டத்தை தீட்டியதோடு, கொலை முயற்சியிலும் ஈடுபட்டார், ராஷ் பிஹாரி போஸ் என்ற அந்த 26 வயது இளைஞர்.
தி டூ கிரேட் இந்தியன்ஸ் இன் ஜப்பான் (The Two Great Indians in Japan) என்ற நூலில் அதன் ஆசிரியரான ஒஸாவா, இந்தச் சம்பவம் குறித்துப் பேசும்போது, "இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான புரட்சியில் இளைஞர்ளை வழிநடத்திச் செல்வதையே தன் வாழ்நாள் பணியாக சிரமேற்கொண்டார் ராஷ் பிஹாரி போஸ்," என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு - அனைத்திற்குமான தொடக்கம்
டெல்லியில் வைசிராய் ஹார்டின்ஜ் மீது ராஷ் பிஹாரி வீசிய வெடிகுண்டு தான் அவருடைய சுதந்திரப் போராட்ட புரட்சிகளுக்கான தொடக்கமாக அமைந்தது.
1954-ம் ஆண்டு வெளியான ஒஸாவாவின் நூலின்படி, "லார்ட் ஹார்டின்ஜ் மீது வெடிகுண்டை வீசும் திட்டம், ஸ்ரிஷ் சந்திர கோஷ் என்ற பெங்காளி புரட்சியாளரின் சிந்தனையில் தான் முதலில் உதித்தது. ராஷ் பிஹாரி போஸ் உடனடியாக அதற்கான திட்டத்தைத் தீட்டி, செயல்படுத்தினார்" என்று இந்த குண்டுவெடிப்பு குறித்த மோதிலால் ராய் கூறியுள்ளார்.
அக்டோபர் 13, 1912-ம் தேதியன்று, ராஷ் பிஹாரி போஸ் அகர்வால் ஆசிரமத்திற்கு அருகில் ஒரு ரகசிய சந்திப்பை நடத்தினார். அதில், அபாத் பிஹாரி, தினா நாத், பால் மொகாந்த், பசந்த குமார் பிஸ்வாஸ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
1966-ம் ஆண்டு வெளியான, உமா மூகர்ஜி எழுதிய, "டூ கிரேட் இந்தியன் ரெவல்யூஷனரிஸ்," என்ற நூலில் நீதிபதி ஹாரிசன் முன்பு டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின்போது, அந்த ரகசிய கூட்டத்தில், குண்டு வீசுவது யார், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது யார் போன்ற விவரங்கள் பேசப்பட்டது தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அவர்கள் தீட்டிய திட்டத்தின்படி, பசந்த குமார் பிஸ்வாஸ் டிசம்பர் 21, 1912 அன்று லாகூரிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார்.
ராஷ் பிஹாரி போஸ், குறிக்கப்பட்ட தேதியான டிசம்பர் 23 அன்று டெல்லிக்குச் சென்றார். அன்று வைசிராய் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் யானைமீது சவாரியாக அதிகாரப்பூர்வமாக டெல்லிக்குள் நுழைந்தார்.
போஸ், வெற்றிகரமாக வெடிகுண்டை அவர் இருந்த யானை மீது வீசிவிட்டு, வேகமாக பசந்த குமாரோடு அந்த இடத்திலிருந்து மறைந்துவிட்டார். வெடிகுண்டு வீச்சில் வைசிராய் ஹார்டின்ஜ் காயமடைந்தார், யானைப் பாகன் உயிரிழந்தார்.
மேலும், 1943-ம் ஆண்டு தன்னுடைய ஓர் உரையின்போது, "30 ஆண்டுகளுக்கு முன்பு வைசிராய் மீது நான் வெடிகுண்டு வீசினேன்," என்று ராஷ் பிஹாரி போஸே கூறியதாக, உமா மூகர்ஜி தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சுன் யாட்-சென் உடனான நட்பு
வைசிராயை கொல்வதற்கான தன்னுடைய முயற்சி தோல்வியடைந்தபோதும் அவர் துவண்டுவிடவில்லை. மேற்கொண்டு, 1913-ம் ஆண்டு நடந்த லாகூர் குண்டு வெடிப்பு உட்படப் பல புரட்சிகளை முன்னின்று வழிநடத்தினார். 1915-ம் ஆண்டு பிப்ரவரியில் அவரும் அவருடைய கூட்டணியைச் சேர்ந்தவர்களும் முன்னெடுத்த புரட்சி, பிரிட்டிஷ் ராணுவத்தின் மிஷின் கன் துப்பாக்கிகளால் தோல்வியைத் தழுவியது.
அவருடைய நண்பர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள், தூக்கிலிடப்பட்டார்கள். போஸ் இந்தியாவிலிருந்து 1915-ம் ஆண்டு மே 12ஆம் தேதியன்று, "சனுகி மாரு (Sanuki Maru)" என்ற ஜப்பானிய கப்பலில் தப்பித்தார். அந்தக் கப்பலில் மே 22-ம் தேதி, சிங்கப்பூரைச் சென்றடைந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அங்கிருந்து ஜூன் மாதத்தின் தொடக்கத்தில், போஸ் டோக்கியோவை சென்றடைந்தார். அங்கிருந்து ஆயுதங்களை வாங்குவதற்காக ஷாங்காய் சென்றார். ஆனால், சீனா ஏற்கெனவே புரட்சியின் நடுவில் இருந்தது. எங்கு திரும்பினாலும் பிரிட்டிஷ் துப்பறிவாளர்கள் மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக திரும்பவும் டோக்கியோவிற்கே வந்தார். அங்குதான் அவருக்கு புதிய சீனாவின் தந்தையாக இன்று அறியப்படும் சுன் யாட்-சென்னோடு அறிமுகம் கிடைத்தது.
தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து தப்பி வந்த அந்த இருவருக்கும் இடையே ஒரு நெருக்கமான நட்புறவு மலர்ந்தது. அவர்களுடைய நட்புறவு குறித்துப் பேசும்போது ஒஸாவா, "எந்தவித லட்சிய தாகமும் இல்லாதவர்களுக்கு இடையே உண்மையான, வாழ்நாள் நட்பு உருவாகாது. நட்பின் ஆழம், இந்த உலகின் மீதான பார்வையில் இருவருக்கும் இருக்கும் ஆழத்தைப் பொறுத்தது. அத்தகைய நட்பு அவர்களுக்கு இடையே இருந்தது," என்று குறிப்பிடுகிறார்.
பிற செய்திகள்:
- யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் முதல்வர் 'மகாராஜா' ஆக மாறியது எப்படி?
- மலேசியா மழை: 100 ஆண்டுகளுக்கு பிறகு கதி கலங்க வைக்கும் காட்சிகள்
- யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது?
- தாய்மை அச்சுறுத்துகிறதா? - குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை
- ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கத் துறை விசாரணை - பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












