அட்லான்டிக் தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் திட்டம் தோல்வி

கௌக் தீவு

பட மூலாதாரம், RSPB

படக்குறிப்பு, கௌக் தீவு
    • எழுதியவர், ஜோனா ஃபிஷர்
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி

தெற்கு அட்லான்டிக்கில் இருக்கும் கௌக் என்ற தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் லட்சியத் திட்டத்தின் தலைவர், இந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் மனமுடைந்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

கௌக் தீவில் பொருத்தப்பட்ட ஒரு தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட காட்சிகள், எலிகளை முழுவதுமாக அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு எலியாவது உயிர் பிழைத்திருப்பதைச் சுட்டிகாட்டியுள்ளது.

எலி போன்ற கொறிப்பு உயிரினங்கள், 19-ம் நூற்றாண்டில் அந்தத் தீவுக்குச் சென்ற மாலுமிகளின் மூலமாக அங்கு பரவியுள்ளன.

அவை அங்குள்ள கடற்பறவைகளின் குஞ்சுகளையும் முட்டைகளையும் உணவாகக் கொள்கின்றன.

அட்லான்டிக் பெருங்கடலில் தனியாக இருக்கும் அந்தத் தீவில் லட்சக்கணக்கான கடற்பறவைகள் கூடு கட்டுகின்றன. ஆனால், அங்குப் பரவியுள்ள எலிகள் தீவில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

"அனுமானப்படி, ஓர் எலி இருக்கும் இடத்தில் அதிக எலிகள் இருக்க வாய்ப்புள்ளது. திட்டம் அதன் முதன்மை இலக்கில் வெற்றிபெறவில்லை என்பதே இதன் அர்த்தம்," என்று ராயல் சொசைட்டி ஃபார் தி ப்ரொடெக்ஷன் ஆஃப் பேர்ட்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆண்ட்ரூ கால்லெண்டர் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.

கால்லெண்டர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். மேலும் அவர் இந்தத் தோல்வியால் மனமுடைந்து இருப்பதாகவும் எலியைப் பார்த்ததால் அவருடைய குழு உடைந்து போயிருப்பதாகவும் கூறினார். இன்னும் எத்தனை எலிகள் உயிர் பிழைத்திருக்கின்றன என்று பார்க்க இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கௌக் தீவு ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையில் ஏறக்குறைய பாதி தூரத்தில் அமைந்துள்ளது. இந்தத் தீவு, உலகின் மிகப்பெரிய கடற்பறவை காலனிகளில் ஒன்று.

எலிகள் வருவதற்கு முன்பு வரை, பல நூற்றாண்டுகளாக, அந்தத் தீவில் பாலூட்டிகளே இல்லை. இதனால், டிரிஸ்டன் ஆல்பட்ராஸ், மேக்கில்லிவ்ரே'ஸ் ப்ரியான் போன்ற அழியும் நிலையிலுள்ள கடற்பறவை இனங்கள் பாதுகாப்பாக கூடு அமைத்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டன.

கௌக் தீவு

பட மூலாதாரம், RSPB

படக்குறிப்பு, கௌக் தீவில் எலிகளை ஒழிக்கும் திட்டம் தோல்வி

"பாலூட்டிகள் வேட்டையாடுவதிலிருந்து தப்பிக்கும் அளவுக்கு அந்த கடற்பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கவில்லை," என்று கூறும் கால்லெண்டர், "முட்டைகள் குஞ்சு பொரிக்கும் சில மணிநேரங்களுக்குள் அவை எலிகளால் கொல்லப்படுவது அடிக்கடி நடக்கின்றது" என்கிறார்.

2021-ம் ஆண்டின் தெற்கு அரைக்கோளத்தில் குளிர்காலமாக இருக்கையில், மிகப்பெரிய அளவில் எலிகள் ஒழிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. சிலர் பறவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அந்தப் பாதுகாப்பு முயற்சியை சந்திரனில் தரையிறங்குவதற்கு நிகரான முயற்சி என்று அழைத்தனர்.

இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தென்னாப்பிரிக்காவில் இருந்து படகில் ஒரு வாரம் பயணித்து கௌக் தீவை அடைந்தார்கள். பறக்க ஏதுவான வானிலை நிலவிய நாட்களில், ஹெலிகாப்டர்கள் தீவு முழுவதும் எலிகளைக் இலக்கு வைத்து விஷத்தை தூவினர்.

இந்த முழுத் திட்டத்திற்கும் ஒன்பது மில்லியன் பவுண்டுகளுக்கும் மேல் செலவாகும் நிலையில், ஒரே முயற்சியில் எலிகளை மொத்தமாக ஒழிக்கவேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: