குரங்குகள் 200 நாய்க் குட்டிகளை கொன்றனவா? - மகாராஷ்டிரத்தின் மஜல்கோன் பகுதியில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிதின் சுல்தானே
- பதவி, லாவூலிருந்து, பிபிசி மராத்திக்காக
மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடாவிலுள்ள மஜல்கோன் தாலுகாவின் லாவூல் கிராமம், கடந்த வாரம் உலகம் முழுவதும் உள்ள செய்திகளில் இடம் பெற்றது. இந்த கிராமத்தில் குரங்குகளுக்கும் நாய்களுக்கும் இடையே நடந்த சண்டை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஊடகங்கள் பல்வேறு விதமாக செய்திகள் வெளியிடுகின்றன. குரங்குகள் 200 நாய்க்குட்டிகளை கொன்றதாக சிலர் கூறினர். ஆனால், அந்த கிராமத்துக்கு, பிபிசி மராத்தி சார்பில் உண்மை நிலவரத்தை அறிய சென்றபோது, அங்கு வேறு விதமான கதையை கண்டறிந்தோம்.
மராத்வாடா பகுதியின் பீட் மாவட்டத்தில் மஜல்கோன் தாலுகாவிலிருந்து 5 அல்லது 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது லாவூல் கிராமம். 1980ம் ஆண்டு, அதன் அருகிலிருந்த ஆற்றில் அணை கட்டியபோது, அந்த கிராமம் தனது நிலங்களில் கொஞ்சத்தை இழந்தது. மறு சீரமைக்கப்பட்ட கிராமம் லாவூல் நம்பர் ஓன் என்று அழைக்கப்பட்டது.
இந்த கிராமத்தின் மக்கள் தொகை ஐந்தாயிரத்துக்கும் அதிகம். இதன் பரப்பளவும் பெரியது. பள்ளி, வங்கி உட்பட, இந்த கிராமத்தில் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. மஜல்கோன் அணையின் நீர்த்தேக்கப் பகுதியால் இங்கு விவசாயத்திற்கு நிறைய தண்ணீர் கிடைக்கிறது.
பீட் மாவட்டத்தில் உள்ள வளமான கிராமங்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது. இந்த கிராமத்தின் செழிப்புக்கு கரும்பு உற்பத்தி பங்களிக்கிறது. ஆனால், நாணயத்தின் மறுபக்கம் போல, கரும்பு தோட்டத்தில் பணி செய்யும் பணியாளர்கள் அவலமான நிலையில் உள்ளனர் .
சமீபத்திய சம்பவம் குறித்து தெரிந்துக்கொள்ள லாவூல் கிராமத்தை அடைந்தோம். கிராமத்தினர் அவர்களின் அன்றாட வேலைகளில் மும்மரமாக இருந்தனர்.
நாங்கள் லாவூல் ஊராட்சி அலுவலகத்தை அடைந்தோம். தங்களின் அலுவல் நிமித்தம் சில கிராமத்தினரும் அங்கு வந்திருந்தனர். கிராம சபை உறுப்பினர்கள் சிலரும், மற்ற ஊழியர்களும் அங்கு இருந்தனர். அவர்கள் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி விவரிக்க தொடங்கினர்.
குரங்கு வந்தது. பிறகு...
லாவூலில் நடந்த சம்பவங்கள் கடந்த வாரம்தான் செய்திகளில் அடிப்பட்டன. ஆனால், ஊர் மக்களுடன் பேசியதிலிருந்து, இத்தகைய சம்பவங்கள் செப்டம்பர் மாதம் முதலே நடந்துவருகின்றன என்பது தெரியவந்தது.
"பொதுவாக, இங்கு குரங்குகள் அதிகமாக இல்லை. சில நேரங்களில் வரும்; ஆனால், அதனால் எந்த தொல்லையும் இல்லை. ஆனால், இம்முறை, குரங்குகள் வந்தபோது, விசித்திரமான விஷயங்கள் நடக்க தொடங்கின", என்று ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவீந்திர ஷிண்டே கூறுகிறார்.

பட மூலாதாரம், NITIN SULTANE
இந்த குரங்குகள் நாய்க்குட்டிகளை தூக்கிக்கொண்டு, மரத்தின் உச்சிக்கோ அல்லது உயரமான வீடுகளின் உச்சிக்கோ கொண்டு சென்றன. தொடக்கத்தில், என்ன நடக்கிறது என்பதை ஊர் மக்களால் கணிக்க முடியவில்லை,. ஆனால், அதன் பிறகு, குரங்குகள் நாய்க் குட்டிகளை தூக்கிக்கொண்டு செல்கின்றன என்று அவர்கள் உணர்ந்தார்கள்.
சம்பவங்களின் காலவரிசை
குரங்குகளால் கொண்டு செல்லப்பட்ட நாய்க் குட்டிகள், வீடுகளின் உச்சியிலிருந்தும், மரங்களின் உச்சியிலிருந்தும் விழுந்தன. இதனால், அவை இறந்தன. இதிலிருந்துதான் குரங்குகள் நாய்க்குட்டிகளை கொன்றன என்று தகவல் பரவத் தொடங்கியது.
பல்வேறு திசையிலும் பல்வேறு விதமாக இந்த செய்தி பரவியது. யாரோ ஒருவரை குரங்கு துரத்தியது என்று சிலர் கூறினர். குரங்கு ஒன்று குறுக்கே வந்ததால், ஒருவர் கீழே விழுந்து, காயமடைந்தார் என்று சிலர் கூறினர்.
சீதாராம் நெய்பாலும் அத்தகைய சம்பவத்தை சந்தித்திருக்கிறார். அவர் நாய்க் குட்டிகளை காப்பாற்ற ஒரு வீட்டின் உச்சிக்கு செல்ல மேலே ஏறினார். ஆனால், திடீரென ஒரு குரங்கு அவர் முன் வந்ததில், பயந்துபோன நெய்பால் கீழே குதித்தார். அந்த விபத்தில், அவரது இரண்டு குதிகால்களிலும் முறிவு ஏற்பட்டன; மேலும் அவருடைய கால்களில் கம்பிகள் ஏறிவிட்டன. சிகிச்சைக்காக அவர் ஒன்றரை லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
அந்த விபத்து நடந்து மூன்று மாதம் ஆன பிறகும், அவரால் மிகவும் மெதுவாகவே நடக்க முடிகிறது; மேலும், இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒரே சமயத்தில் நடக்க முடிகிறது.
சில சமயங்களில், குரங்குகள் குழந்தைகளை துரத்துகின்றன என்றும் அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர். அங்குள்ளவர்கள் வீடுகளில் உள்ளிருந்து மிகவும் உறுதியாக கதவுகளை தாழிட்டு கொள்கின்றனர். இறுதியாக, இந்த விவகாரம் கிராம சபைக்கு கொண்டு செல்லப்பட்டது.
`வனத்துறையின் அலட்சியம்`
ஊர் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். இதனால், இந்த விவகாரத்தில் வனத்துறையின் உதவியை நாடலாம் என்று கிராம சபை முடிவு செய்தது. அதன்படி, அவர்கள் கோரிக்கையை அனுப்பினர்.
"நாங்கள் செப்டம்பர் 12-13 ஆகிய தேதிகளில் எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பினோம். ஆனால், எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை", என்று கிராம அதிகாரி நானாசாப்பே ஷில்கே கூறுகிறார்.
பின், மீண்டும் அவர்கள் கடிதங்கள் அனுப்பினர்; ஆனால், வனத்துறையிடம் இருந்து அலட்சியத்தையே அவர்கள் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கிராமத்தினர் அவர்களை தொடர்புக்கொண்டனர். இறுதியாக, வனத்துறை இரண்டு முறை அவர்களின் குழுவை அனுப்பியது. ஆனால், அவர்கள் அந்த பகுதியை மட்டுமே ஆய்வு செய்து, சென்றனர் என்று கிராமத்தின் பிரச்னைகள் குறித்து தீர்வு காணும் குழுவின் (Dispute resolution committee) தலைவரான ராதாகிஷன் சோனாவானே கூறுகிறார்.
வேறு வழியில்லாமல், கிராமத்தினர் ஊடகங்களுக்கு சென்றனர். ஊடகங்களில் இந்த விவகாரம் பேசுபொருளான பிறகு, கிராமத்தினருக்கு தெரியப்படுத்தி, இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
நாய்க்குட்டிகள் உதவியுடன் பிடிபட்ட குரங்குகள்
ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்ட பிறகு, குரங்குகளை பிடிக்க தரூர் பகுதியிலுள்ள வனத்துறை அதிகாரிகள் நாக்பூரிலுள்ள குழுவை தொடர்புக்கொண்டனர்.
நாக்பூரில் இருந்து வந்த குழு, கடந்த சனிக்கிழமையன்று (டிசம்பர் 19) பொறி வைத்து, குரங்குகளை பிடித்தது. அவர்கள் குரங்குகளை கவர்வதற்கு நாய்க்குட்டி ஒன்றை கூண்டில் அடைத்தனர்.
பிடிபட்ட குரங்குகள், அவற்றின் பொதுவான வாழ்விடத்தில் வெளியே விடப்பட்டன என்று வடவனி பகுதியில் உள்ள வனத்துறை அதிகாரி டி.எஸ்.மோர் கூறுகிறார்.
அதிகரித்து வரும் நாய்க்குட்டிகளின் இறப்பு
ஊடகங்கள் இதனை செய்தியாக்கியதால் இந்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், நாய்க்குட்டிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்ததே இந்த விசித்திரமான சம்பவங்களின் மையப்புள்ளி.

பட மூலாதாரம், NITIN SULTANE
சில ஊடகங்கள் 10 முதல் 15 நாய்க்குட்டிகள் இறந்ததாகப் செய்தி வெளியிட்டன. மேலும் சில நாட்களிலேயே அந்த எண்ணிக்கை அதிகமானதாக செய்திகள் வந்தன. குரங்குகள் 250 நாய்க் குட்டிகளை கொன்றதாக சில ஊடகங்கள் கூறின.
ஆனால், லாவூல் கிராமத்தினர் பிபிசியிடம் கூறிய உண்மை நிலவரத்துடன் இது பொருந்தவில்லை.
50 முதல் 60 நாய்க் குட்டிகள் கொல்லப்பட்டதாக பொதுமக்களில் சிலர் கூறினர்; சிலர் 100க்கும் மேற்பட்ட நாய்க் குட்டிகள் கொல்லப்பட்டதாகக் கூறினர், ஆனால், சிலர் குரங்குகள் தாக்கியதில், 200 நாய்க்குட்டிகள் கொல்லப்பட்டன என்ற ஊடக செய்தியே சரி என்று வாதிட்டனர்.
இதுபற்றி ஊர் மக்களுடன் நாங்கள் பேசியபோது, இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்றும், உண்மையில் இந்த சம்பவங்களில் உயிரிழந்த நாய்க்குட்டிகளின் எண்ணிக்கை ஐம்பதைக் கூட தாண்டிவில்லை எனவும் சிலர் தெரிவித்தனர். இந்த முரண்பாடான கூற்றுக்கள் அனைத்தும் உண்மையான இறப்பு எண்ணிக்கை பற்றிய குழப்பத்தை மேலும் அதிகரிக்கின்றன.
ஆனால், நாங்கள் ஊர் மக்களிடம் இருந்து சேகரிக்க முடிந்த அதிகாரபூர்வ புள்ளிவிவரம், 50 முதல் 60 நாய்க்குட்டிகள் வரை இறந்தன என்பதே.
மற்றொரு புறம், இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் தவறானவை என்று வனத்துறை டி.எஸ்.மோர் கூறுகிறார். உண்மையில், மூன்று அல்லது நான்கு நாய்க்குட்டிகள் மட்டுமே உயிரிழந்திருக்கலாம் என்று மோர் பிபிசியிடம் கூறினார்.
காரணங்கள் குறித்த வதந்திகள்
நாய்க் குட்டிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தால், அது பல வதந்திகளுக்கு வழிவகுத்தது.
முதலில் நாய்கள் ஒரு குரங்கு குட்டியை கொன்றன; அதனால், குரங்கு நாய்க் குட்டிகளை எடுத்துச் சென்று, உயரமான இடத்தில் இருந்து எறிந்து கொன்றது என்று ஒரு வதந்தி கூறியது.
ஊர் மக்கள் யாரும் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை; ஆனால் அதனை தொடர்ந்து வந்ததற்கு இதுவே காரணம் என்று அனைவரும் கேள்விப்பட்டிருக்கின்றனர்.
"குரங்கு குட்டி ஒன்று இறந்ததால், அதன் தாய்க்கு வெறி பிடித்து, அது தன் குழந்தை என்று நினைத்து நாய்க்குட்டியை எடுத்துச் சென்றதாகவும் சில கிராமத்தினர் கூறுகின்றனர்," என்கிறார் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவீந்திர ஷிண்டே.
'சில நாய்க்குட்டிகள் காப்பாற்றப்பட்டன'
"எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பயப்படுகிறார்கள். ஆண்கள் விவசாய வேலைக்காகவோ அல்லது வேறு சில வேலைகளுக்காகவோ வெளியில் சென்றால், பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்," என்று லக்ஷ்மன் பகத் கூறுகிறார்.
லக்ஷ்மண் பகத்தின் பங்களாவில் ஒரு குரங்கு மேற்கூரையில் தஞ்சம் புகுந்தது. அவர்கள் ஏறக்குறைய எட்டு முதல் பத்து நாய்க்குட்டிகளைக் கொண்டு வந்து மேலே வைத்திருந்தனர்.
"குரங்குகளுடன் சேர்ந்து நாய்க் குட்டிகளின் சத்தத்தையும் எங்களால் கேட்க முடிந்தது. எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் பயந்தனர். ஆனால், நாய்க் குட்டிகளுக்கு பசி எடுத்திருக்கும்; உணவுக்காகக் கூச்சலிட்டு கொண்டு இருக்கின்றன என்று நினைத்தோம். அதனால், அடுத்த நாள் முதல், நாய்க் குட்டிகளுக்கு அரிசி ரொட்டியும் பாலும் வைத்தோம்.
இந்த உணவு சில நாய்க் குட்டிகளின் உயிரைக் காப்பாற்றியது. இப்போது இந்த நாய்க்குட்டிகள் பகத்து வீடுகளில் சுற்றித் திரிவதைக் காணலாம்.
குரங்குகள் ஏன் இப்படி செய்தன?
குரங்குகள் நாய்க் குட்டிகளை எடுத்துச் சென்றதற்கு காரணம் என்ன என்பது குறித்து வனத்துறை அதிகாரி டி.எஸ். மோர் விளக்குகிறார். நாய்களின் உடலில் அதிக அளவில் பேன் மற்றும் புழுக்கள் இருப்பதால் குரங்குகள் அவற்றை பொறுக்கி எடுத்து உண்பதற்காக நாய்க் குட்டிகளை எடுத்துச் சென்றிருக்கலாம்.

பட மூலாதாரம், NITIN SULTANE
வளர்ந்த நாய்களை குரங்குகளால் எளிதில் பிடிக்க முடியாது. எனவே, நாய்க் குட்டிகள் அதற்கு எளிதான இலக்காகின்றன. நாய்க் குட்டிகளால் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் முடியாது.
குரங்குகள் பேன்களையும் ஈக்களையும் சாப்பிட்டவுடன், அவை நாய்க்குட்டியை கூரையிலோ அல்லது மரத்தின் உச்சியிலோ விட்டுவிடும். அங்கே நாய்க் குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு எந்த உணவும் கிடைக்காது; அதனால் அவை பசியால் இறந்தன.
மேலும், நாய்க்குட்டிகள் உயரமான இடங்களில் இருந்து கீழே வர முடியாது; இதனால், கீழே இறங்க முயன்ற போது சில கீழே விழுந்தும் இறந்திருக்கலாம் என்றும் மோர் கூறுகிறார்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
டாக்டர் பி.எஸ். நாயக்வாடே அவுரங்காபாத்தில் உள்ள சித்தார்த் விலங்குகள் சரணாலயத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். குரங்குகளின் இந்த நடத்தை பற்றி மேலும் அறிய அவரிடம் பேசினோம்.
"குரங்குகள் வெறுப்புணர்வு கொண்டிருக்கலாம்; மேலும் பழிவாங்கும் நோக்கில் கோபமாக எதையும் செய்யலாம். ஆனால், இந்த சம்பவங்கள் பற்றி கூறப்படுபவை அனைத்தும் மிகைப்படுத்தி கூறுவதாகவே உள்ளன.", என்று டாக்டர் நாயக்வாடே கூறுகிறார்
லைஃப் கேர் அனிமல் அசோசியேஷன் என்ற அமைப்பின் தலைவர் தனராஜ் ஷிண்டே மேலும் ஒரு மாறுப்பட்ட காரணத்தை சுட்டிக்காட்டினார்.
குரங்குகள் தங்களைச் சுற்றி நடப்பவற்றை அறிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கும்; எனவே, அவை ஆர்வத்தினால் இதைச் செய்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார் ஷிண்டே.
முரண்களை அதிகரிக்கும் வதந்திகள்
இதுகுறித்து வனத்துறை அதிகாரி மோர் மேலும் கூறுகையில், " குரங்குகள் எந்த கிராமத்தினரையும் தாக்கியதில்லை என்று தெளிவுபடுத்துக்கிறார். பொதுமக்கள் திடீரென்று குரங்குகளுக்கு குறுக்கே வரும்போது, சில விபத்துகள் நடந்தன. ஆனால், குரங்கு ஒருபோதும் மனிதர்களை தாக்கும் முயற்சியை தொடங்காது என்று அவர் கூறினார்.
குரங்கு கூட்டங்களுக்கு இடையே ஏதேனும் மோதல் ஏற்பட்டால், மக்கள் அச்சமடைந்து அதற்கு எதிராக செயல்படலாம். இது மீண்டும் குரங்குகள் தங்களை தற்காத்துக்கொள்ள செயல்படத் தூண்டும். எனவே, குரங்குகளின் தாக்குதல் குறித்து மீண்டும் விவாதம் நடத்தப்படும்”, என்றார் மோர்.
லாவூல் கிராமத்தில் நடக்கும் இந்த விசித்திரமான சம்பவங்கள் இப்போது குறைந்துள்ளன. ஆனால், கிராமத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன.
பிற செய்திகள்:
- யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் முதல்வர் 'மகாராஜா' ஆக மாறியது எப்படி?
- மலேசியா மழை: 100 ஆண்டுகளுக்கு பிறகு கதி கலங்க வைக்கும் காட்சிகள்
- யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது?
- தாய்மை அச்சுறுத்துகிறதா? - குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை
- ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கத் துறை விசாரணை - பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












