கள்ளக்குறிச்சியில் கைதான குறவர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார் - என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி
படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள ஓம் பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி

கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைதான நிலையில், அவர்கள் போலீஸ் விசாரணையில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த விவகாரம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த விவகாரத்தில் பிரகாஷ், தர்மராஜ் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மூன்றாவது நபரான சக்திவேல் பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் தற்போது அவர் விழுப்புரம் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் கூறியதாக தெரிய வந்துள்ளது.

1990களின் துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், மறுபடியும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருட்டுக் குற்றங்களில் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சியில் என்ன நடந்து?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரைச் சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் கடந்த வார இறுதியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் மூன்று பேர் தற்போது கைதாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் மனைவியான புவனேஸ்வரி தனது கணவரும் வேறு இரண்டு பேரும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதன் பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்த அவர், அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 14ஆம் தேதி இரவு சுமார் சுமார் 11.45 மணியளவில், தனது கணவர் பிரகாஷ் (25), அவரது உறவினரான தர்மராஜ் (35), செல்வம் (55) ஆகியோர் தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, சீருடை அணியாத காவலர்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து வேனில் இழுத்துச் சென்றதாகத் தெரிவித்திருக்கிறார்.

அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், திங்கட்கிழமையன்று சின்னசேலம் காவல் நிலையத்திற்குச் சென்று புவனேஸ்வரி விசாரித்தபோது அவர்கள் அங்கில்லை என்பதும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இதனிடயே மீண்டும் ஊருக்குள் வந்த காவல் துறையினர் புவனேஸ்வரி - பிரகாஷ் தம்பதியின் உறவினர்களான பரமசிவம் (42), சக்திவேல் (29) ஆகிய மேலும் இருவரையும் வேனில் அழைத்துச் சென்றதாக புவனேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனைவி புகார்

தாங்கள் பட்டியலின குறவர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும் படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதாலும் தங்களது சமூகத்தை காவலர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் அந்த 15 காவலர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புவனேஸ்வரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரியிருக்கிறார்.

குறவர் கைது

பட மூலாதாரம், Getty Images

அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது தெரியாத நிலையில், நவம்பர் 16ஆம் தேதி இரவு 11 மணியளவில் செல்வம், பரமசிவம் ஆகிய இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் துறையினரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டபோது, "கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதில் வழிப்பறி, கொள்ளை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக மூன்று பேரது கை ரேகைகள் ஒத்துப்போகின்றன. மீதமுள்ள இருவரை (செல்வம், பரமசிவம்) அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டோம்.

பிடிபட்டவர்கள் சின்ன சேலம், கீழ் குப்பம், கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணையில் என்ன நடந்தது?

இதற்கிடையில் பிரகாஷ், தர்மராஜ் முதலாவதாகவும் சக்திவேல் தனியாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் 22 குற்றங்களை ஒப்புக்கொண்டிருப்பாதாகவும் 12 வழக்குகளில் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மூவரும் சின்ன சேலம் கூகையூர் ரயில்வே நிலையம் அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

குறவர் கைது

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையே, கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட செல்வம் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பிரகாசையும் தர்மராஜையும் தலைகீழாக தொங்க விட்டதாகவும் அவர்கள் கத்தியதைத் தன்னால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லையென்றும் அந்த அளவுக்குக் காவல்துறை சித்ரவதை செய்ததாகவும் செல்வம் கூறியுள்ளார்.

தற்போது இந்த விவகாரத்தை விட்னஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு கையில் எடுத்துப் போராடி வருகிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அந்த அமைப்பின் செயல் இயக்குநர் ஜெயசுதா, "இன்று காலையில் பிரகாஷை அவரது வீட்டிற்கு வெள்ளை வேனில் அழைத்துவந்த காவல்துறையினர் அவரது மனைவி புவனேஸ்வரி முன்பாகவே அடித்து சித்ரவதை செய்துள்ளனர். திருட்டு நகையைக் கொடுத்துவிடும்படி கூறியே இவ்வாறு தாக்கியுள்ளனர். தங்களிடம் நகை ஏதும் இல்லையென புவனேஸ்வரி பல மணி நேரம் கதறிய பிறகு, உங்களிடமிருந்து எப்படி நகையை வாங்குவது என்பது எங்களுக்குத் தெரியும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அதற்கு முன்பாகவே திருட்டுப்போன வீடுகளில் பிரகாஷ் மற்றும் தர்மராஜின் கைரேகைகள் பதிவாகியுள்ளன," என்கிறார்.

காவல்துறை என்ன கூறுகிறது?

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கீழ்க்குப்பம் மற்றும் கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது என கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தி அறிக்கையின்படி "இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அன்று பெரிய சிறுவத்தூர் ரயில்வே நிலையம் ரோட்டில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்தவர் கழுத்தில் இருந்து 5 பவுன் தாலி செயினையும் அவரது மகள் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலியையும் பறித்து சென்றதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைரேகை நிபுணர் மூலம் தடயம் சேகரிக்கப்பட்டு பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு சோதனை செய்தபோது பிரகாஷ் என்பவரது கைரேகையுடன் ஒத்துப்போனது. அவர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.

மேலும் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த ஒருவரது வீட்டில் சுமார் 400 கிராம் எடைகொண்ட வெள்ளி பொருட்கள், ரூ. 25,000 ஆகியவற்றை யாரோ மர்ம நபர் திருடி சென்றதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் தர்மராஜ் என்பவரது கைரேகைகளுடன் ஒத்துப்போயின. இதையடுத்து தர்மராஜ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த வழக்குகளில் பிரகாஷ் மற்றும் தர்மராஜ் இருவரும் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டனர். மேலும் தங்களுடன் சிலர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தர்மராஜின் சகோதரர் சக்திவேல் என்பவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவரும் தனக்கு இந்தக் குற்றங்களில் பங்கிருப்பதாக ஒப்புக்கொண்டார்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய சிறுவத்தூர், எலவடி, மேலூர், எரவார், எலியத்தூர், தென்செட்டியேந்தல், கனியாமூர், அம்மையகரம் உள்ளிட்ட பகுதிகள், கீழ்க்குப்பம் காவல் எல்லைக்கு உட்பட்ட பெத்தாசமுத்திரம், அரியலூர் பகுதிகள், கச்சிராயபாளையம் எல்லைக்கு உட்பட்ட தெங்கியாநத்தம், வடக்கந்தல் பகுதிகள், கள்ளக்குறிச்சி எல்லைக்கு உட்பட்ட ராமசந்திரா நகர் ஆகிய இடங்களில் இவர்கள் மூவரும் 13 இடங்களில் இவர்கள் களவாடியதாக கண்டறியப்ட்டது.

இதில் சுமார் 25 சவரன் நகை சின்ன சேலம் நகைக் கடையிலும் 13 சவரன் நகை கள்ளக்குறிச்சி நகைக் கடையிலும் என மொத்தமாக 38 சவரன் மீட்கப்பட்டது. இதில் தர்மராஜ் மற்றும் பிரகாஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்‌. சக்திவேல் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார் (பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்).

இந்த வழக்கில் பரமசிவம் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் எந்த குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என தெரிய வந்ததை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :