இலங்கை கபடி அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஸ்கரன் பயிற்சியாளராக நியமனம்

கா.பாஸ்கரன்

பட மூலாதாரம், Kayalvizhih

படக்குறிப்பு, பாஸ்கரன்

இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் தயாராகி வருகின்றன. இதன்படி, இலங்கை அணியும் தயாராகி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகளுக்கு பயிற்சியாளராக தமிழ்நட்டைச் சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் வசித்து வருகிறார்.இந்திய கபடி அணியின் முக்கிய வீரராகவும் பயிற்சியாளராகவும் அறியப்பட்ட இவர், குறிப்பாக, 1993 -96 ஆண்டுகளில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் தமிழ்நாடு அணி தொடர்ந்து முதலிடம் பெற முக்கிய பங்காற்றினார்.

கடந்த 1994ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஹீரோஷிமாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி அணியின் வீரராக களமிறங்கி தங்கம் வென்றார். தொடர்ந்து, 1995ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கபடி அணியின் தலைவராக களமிறங்கினார். இப்போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. கடந்த 1997ம் ஆண்டு இந்திய - இலங்கை கபடி தொடரில் இந்திய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்று இவர் விளையாடினார். இதில் இந்தியா முதலிடம் பெற்றது.

பயிற்சியாளராக

இந்திய கபடி அணியின் வீரராக, அணித் தலைவராக களம் கண்ட பாஸ்கரன், பயிற்சியாளராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு தாய்லாந்து, 2010ம் ஆண்டு மலேசியா, 2014ம் ஆண்டு இந்திய அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.புரோ கபடி லீக் (PKL) துவக்கத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இப்போட்டியில் அந்த அணி தங்கம் வென்றது. இதையடுத்து 2016ம் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இப்போட்டியிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. புரோ கபடி லீக் 5வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார். தற்போது இலங்கை ஆண்கள், பெண்கள் கபடி அணிகளுக்கு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாஸ்கரன் கூறுகையில், இந்தியா மற்றும் பிற நாட்டு அணிகளுக்கு பயிற்சி அளித்த அனுபவம் உள்ளது. ஆனால், தற்போது கொரோனா காலத்தில் பயிற்சி அளிப்பதும் வீரர், வீராங்கனைகளை தயார்படுத்துவதும் புது அனுபவமாக உள்ளது. ஆனாலும் என் பணியை நிறைவாக செய்வேன். மேலும், கிராமத்தில் பிறந்த எனக்கு கபடிதான் எல்லாமே. திறமை இருந்தால் போதும் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் நம்மால் சாதிக்க முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.

ஆசியப் போட்டிகளை உத்தேசித்து இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாஸ்கரன், ஓராண்டிற்கு இப்பணியில் இருப்பார்.

கபடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்.

இலங்கை கபடி அணியின் பிரதான பயிற்றுவிப்பாளருடன் இணைந்து செயற்படும் வகையிலேயே, இந்தியரான பாஸ்கரன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கபடி சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்கரன் தேர்வு ஏன்?

இலங்கை கபடி அணியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வீரர்கள் தமிழர்கள் என்பதனால், அந்த வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இந்தியாவில் புகழ் பெற்ற ஒருவரை தமது அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளதாக இலங்கை கபடி சங்கத்தின் தலைவர் அநுர பத்திரண தெரிவிக்கின்றார்.பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்திய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரே, இலங்கை கபடி அணியில் அதிகம் என அவர் கூறினார்.இந்தியாவில் புகழ் பெற்ற தமிழர் ஒருவரை, தமது கபடி அணிக்கு இணைத்துக்கொள்ளும் போது, அணியில் விளையாடும் தமிழர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே, இந்தியாவில் புகழ் பெற்ற கபடி வீரரான பாஸ்கரனை இலங்கைக்கு அழைத்து வந்த, பிரதான பயிற்றுவிப்பாளர் பதவியை வழங்கியதாக இலங்கை கபடி சங்கத்தின் தலைவர் அநுர பத்திரண தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :