நரேந்திர மோதி வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதலை மென்மையாக அணுகுவதற்கு என்ன காரணம்?

மோதி ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images

    • எழுதியவர், சுபஜோதி கோஷ்
    • பதவி, பிபிசி பங்களா செய்தியாளர்

வங்கதேசத்தில் துர்கா பூஜை அரங்குகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பல இந்து கோவில்கள் மற்றும் வீடுகளும் தாக்கதலுக்கு இலக்காயின. சேதப்படுத்தல் மற்றும் வன்முறையில் ஏழு பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை உலகம் முழுவதுமே இப்போது கவனித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் மத்தியில் இந்தியாவின் அணுகுமுறை சற்று ஆச்சரியத்தை அளித்துள்ளது. அண்டை நாட்டில் உள்ள இந்து சமூகத்தின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், இந்தியா மிகவும் கவனமாக அளவான முறையில் பதிலளித்துள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த போதெல்லாம், துன்பப்படும் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த இந்தியா, தூதரக பிரதிநிதிகளை அனுப்பியது. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் செய்யப்படவில்லை.

மாறாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா எடுத்த நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனாவை மேலும் சங்கடப்படுத்துவது ஏற்புடையதல்ல என்பதால் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்படுகிறது என இந்திய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஷேக் ஹசீனா மீது இந்தியாவின் நம்பிக்கை

ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Vipin Kumar/Hindustan Times via Getty Images

கடந்த காலங்களில் இதேபோன்ற சம்பவங்களுடன் இந்தியாவின் தற்போதைய அணுகுமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால், அது முற்றிலும் வித்தியாசமாகத் தெரிகிறது. கடந்தகாலத்தில் நாசிநகர், சில்ஹட் அல்லது முராத்நகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது இந்தியா அவற்றை கடுமையாக விமர்சித்தது.

இதுமட்டுமின்றி வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பிரதிநிதிகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அங்குள்ள இந்துக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசினர்.

இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த வாரம் குமில்லா, சாந்த்பூர், ஃபெனி மற்றும் சிட்டகாங் ஆகிய இடங்களில் இந்து கோவில்கள் மற்றும் வீடுகளின் மீதான தாக்குதல்களில் பல உயிர்கள் பறிபோயுள்ள போதிலும்கூட, இந்தியாவின் பதில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தது.

இதுவரை இந்தியா ஒரு நாடாக இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஒரு கருத்தை மட்டுமே கூறியுள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், "வங்கதேசத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய மனம்கலங்கும் செய்திகளை நாங்களும் பார்த்தோம்."என்றார்.

இந்த அறிக்கைக்குப் பிறகு அரிந்தம் பக்சி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வன்முறைக்குப் பிறகான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படைகளை நிறுத்தியுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

"அரசு மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் துர்கா பூஜை முடிந்தது" என பாக்சி கூறினார்.

மறுபுறம், ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக வெளிப்படையாக பேசுகின்றனர். அவர்கள் இதைப் பற்றி சமூக ஊடகங்களிலும் நிறைய எழுதுகிறார்கள். ஆனால் அரசு மட்டத்தில், அளவான பதில் மட்டுமே காணப்படுகிறது.

இந்தியா கவலை கொண்டுள்ளது ஆனால்...

மோதி ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images

டெல்லியைச் சேர்ந்த விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் உறுப்பினரான ஸ்ரீராதா தத், வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது , ஆனால் அது பகிரங்கமாக ஓர் அறிக்கையை வெளியிடுவதன் மூலம் வங்கதேச அரசை சங்கடப்படுத்த விரும்பவில்லை என்று கருதுகிறார்.

"இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என ஷேக் ஹசீனா ஏற்கனவே கூறிவிட்டார். ஆனால் அவரது அறிக்கையை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தாலும், இந்த சூழ்நிலையை யாராவது சமாளிக்க முடியுமானால் அது ஷேக் ஹசீனாதான் என இந்தியா நம்புகிறது." என்று கூறினார்.

"இவை அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொண்டு பார்த்தால், வங்கதேசத்தை மேலும் இக்கட்டில் தள்ளுவது இந்தியாவின் நோக்கம் அல்ல என்று தெரிகிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், இந்திய வெளியுறவு அமைச்சரும் வெளியுறவு செயலரும் தங்கள் வங்கதேச சகாக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள்,"என்கிறார் ஸ்ரீராதா தத்.

"இந்திய அரசு பகிரங்கமாக குறைந்தபட்சம் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியா ஷேக் ஹசீனாவிடம் அல்லது அங்குள்ள தலைமையிடம் எந்த நேரத்திலும் வெளிப்படையாக எதையும் சொல்ல முடியும். தொலைபேசி உரையாடல் செய்யும் அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அவ்வளவு வெளிப்படையானது. இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பு வழிகள் செயல்பாட்டில் உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

"இது தவிர, வங்கதேசத்தில் குறுகிய கால இடைவெளிகளில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதல்கள் முற்றிலும் எதிர்பாராதவை.இது உளவுத்துறையின் தோல்வியும் கூட. இதன் காரணமாக இந்தியா அதிர்ச்சி அடைந்தது,"என பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

"இதைப் பற்றி எங்கள் சிந்தனைக் குழுவில் நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்ததுள்ளது, ஆனால் இதைப் பற்றி யாருக்கும் இம்மியளவு கூடத் தெரியவில்லை. இந்தத் தாக்குதல்கள் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை,"என்கிறார் அவர்.

திட்டமிட்ட தாக்குதலா?

प्रदर्शन

பட மூலாதாரம், Amal KS/Hindustan Times via Getty Images

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்துள்ளன. ஆனால் இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதலானது, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை சுட்டிக்காட்டுகிறது என ஸ்ரீராதா தத் கூறுகிறார்,

"துர்கா பூஜை அரங்குகள் அல்லது கோவில்களை சேதப்படுத்துவது என்பது வங்கதேசத்தில் புதிதல்ல, ஆனால் இந்த முறை நடந்த அளவிற்கு,இதற்கு முன்பு எப்போதுமே நடந்ததில்லை," என்று அவர் கூறினார்.

தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கக்கூடும் என்று இந்திய அரசு கருதும் அதே காரணங்களை டாக்காவுக்கான முன்னாள் இந்திய தூரக உயர் அதிகாரியான பினாகரஞ்சன் சக்கரவர்த்தியும் வலியுறுத்துகிறார்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான பெரிய சதியின் ஒரு பகுதி இது என்றும், எனவே இந்தியா அந்த நாட்டுக்கு ஆதரவாக நிற்பது இயற்கையானதே என்றும் அவர் கூறுகிறார்.

ஹசீனாவுக்கு எதிரான சதி?

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடக்கும் இந்த பெரிய சதியை இந்தியா நன்கு அறிந்திருக்கிறது என பினாகரஞ்சன் சக்கரவர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த சதியின் நோக்கம் ஷேக் ஹசீனாவை வகுப்புவாத வழி மூலம் பலவீனப்படுத்துவதாகும். இப்போது இதுபோன்ற சூழ்நிலையில், இந்த சம்பவங்களை இந்தியா கடுமையாக கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டால், அது ஹசீனாவின் அரசு மீதான கண்டனமாக இருக்கும். ஆனால் அது இந்தியாவின் எந்த நோக்கத்திற்கும் உதவாது,"என்று அவர் கூறினார்.

இருப்பினும், நிலைமையை விரைவாகவும் திறமையாகவும் கட்டுப்படுத்த வேண்டும் என செய்தியை ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அனுப்பி வருகிறது என்று தான் நம்புவதாக பினாகரஞ்சன் சக்கரவர்த்தி குறிப்பிட்டார்.

"ஷேக் ஹசீனா பற்றி எங்களுக்குத் தெரிந்தவரை, அவர் அதை இப்போது செய்து கொண்டும் இருப்பார்," என்று அவர் கூறினார்.

தாலிபன்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பதன் தாக்கம்?

போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது மற்றும் அதில் பாகிஸ்தானின் பங்கு போன்றவையும் வங்கதேசத்தின் நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பினாகரஞ்சன் சக்கரவர்த்தி நம்புகிறார்.

"ஆப்கானிஸ்தானில் நடந்திருப்பது, வங்கதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகளை உற்சாகப்படுத்தியுள்ளது என்பதை முற்றிலும் மறுக்க முடியாது. பாகிஸ்தானுக்கும் இந்த இஸ்லாமிய நெட்வொர்க்குகளுடன் தொடர்பு உள்ளது" என்று அவர் கூறினார்.

"ஒருபுறம் அவர்கள் (இஸ்லாமிய அடிப்படைவாதிகள்) இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட முயற்சிக்கிறார்கள். மறுபுறம் அவர்கள் ஷேக் ஹசீனாவை இந்தியாவிற்கு நெருக்கமாக காட்டவும் முயற்சிக்கிறார்கள். இதில் புதிதாக எதுவும் இல்லை. சமீபத்திய காலங்களில். இதுபோன்ற குழுக்கள் வங்கதேசத்தில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன," என்கிறார் அவர்.

வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மற்றும் வீடுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளில் சில வாசக அட்டைகளை ஏந்தியிருந்தனர். ஷேக் ஹசீனா இந்தியாவிடம் அதிக நெருக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டும் வாசகங்கள் இவற்றில் காணப்பட்டன.

வங்கதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒழிப்பது இந்தியாவின் குறிக்கோள் என்றும் ஷேக் ஹசீனா மீது நம்பிக்கை வைக்காமல் அந்த இலக்கை அடைய முடியாது என்றும் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் நம்புகின்றனர்.

கடந்த 10 நாட்களில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பல இந்துக்கள் தாக்கப்பட்டபோதிலும், இந்தியா அதைப் பற்றி அதிகம் எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :