ஐஎன்எஸ் விக்ராந்தை மூழ்கடிக்க வந்த பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் காஸி மூழ்கிய கதை

நீர் மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம், LANCER PUBLICATION

படக்குறிப்பு, நீர் மூழ்கிக் கப்பல்
    • எழுதியவர், ரெஹான் ஃபஸல்
    • பதவி, பி பி சி நிருபர்

8 நவம்பர் 1971 அன்று, பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலான பிஎன்எஸ் காஸியின் கேப்டன் ஜாபர் முகமது கான் ட்ரை ரோட்டில் உள்ள கோல்ஃப் கிளப்பில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர் உடனடியாக லியாகத் பேராக்ஸில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு வர வேண்டும் என்ற செய்தி அவருக்கு வந்தது.

அங்கு, கடற்படை நலன் மற்றும் செயல்பாட்டுத் திட்ட இயக்குநர் கேப்டன் போம்பல், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை அழிக்கும் பொறுப்பை கடற்படைத் தலைவர் அவருக்கு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். அவர் ஒரு உறையை எடுத்து ஜாஃபரிடம் கொடுத்து விக்ராந்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அந்த உறையில் இருப்பதாக கூறினார்.

காஸியின் பொறுப்பில் உள்ள அனைத்து மாலுமிகளின் விடுமுறையையும் ரத்து செய்யுமாறும், அடுத்த பத்து நாட்களுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடிக்க வேண்டும் என்றும் ஜாஃபர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

போருக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட 'த ஸ்டோரி ஆஃப் த பாக்கிஸ்தான் நேவி' புத்தகத்தில், "நவம்பர் 14 மற்றும் 24 க்குள் பாகிஸ்தான் கடற்படை அதன் அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களையும் முன்பே தீர்மானிக்கப்பட்ட ரோந்துப் பகுதிகளை நோக்கிச் செல்ல உத்தரவிட்டது. காஸி வங்காள விரிகுடாவின் தொலைதூரப் பகுதிக்குச் செல்லும்படி கேட்கப்பட்டார்.

அங்கு இந்திய விமானக் கப்பல் விக்ராந்தைக் கண்டுபிடித்து அழிக்கும் பொறுப்பு அதற்கு வழங்கப்பட்டது. இந்த உத்தியின் விவேகத் தன்மை குறித்த கேள்வி எழுப்பப்படவில்லை. பாகிஸ்தானிடம் இருந்த, எதிரியின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிக்கு இத்தனை தூரம் சென்று அதை மூழ்கடிக்கும் திறன் கொண்ட ஒரே நீர் மூழ்கிக் கப்பல் காஸி மட்டுமே.

காஸி, விக்ராந்தை மூழ்கடிப்பதிலோ அல்லது சேதமேற்படுத்துவதிலோ வெற்றி பெற்றிருந்தால், அது இந்தியாவின் கடற்படைத் திட்டங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். சாத்தியமான வெற்றிக்கான பேராசை மிகவும் அதிகமாக இருந்ததால், பல அச்சங்கள் இருந்தபோதிலும், இந்தத் திட்டம் அனுமதிக்கப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விக்ராந்தின் பாய்லரில் சேதம்

விமானம் தாங்கி போர் கப்பல்

பட மூலாதாரம், LANCER PUBLICATION

படக்குறிப்பு, விமானம் தாங்கி போர் கப்பல்

தளபதி ஜாஃபர் மற்றும் கேப்டன் போம்பல் இடையேயான இந்த உரையாடலுக்கு ஒரு வருடம் முன்பு, விக்ராந்தின் தளபதி கேப்டன் அருண் பிரகாஷ் தனது தலைமை பொறியாளர் அனுப்பிய அறிக்கையைப் படித்துக்கொண்டிருந்தார். விக்ராந்தின் பாய்லரில் வாட்டர் டிரம்மில் இந்தியாவில் சரிசெய்ய முடியாத அளவுக்கு விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 1965 போரில் கூட, சில இயந்திர சிக்கல்களால் விக்ராந்த் போரில் பங்கேற்கத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த முறையும், பாய்லரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, விக்ராந்த் அதிகபட்சமாக 12 நாட்ஸ் வேகத்தில் தான் செல்ல முடிந்தது. எந்த விமானம் தாங்கி கப்பலிலிருந்தும் விமானம் பறக்கும் திறனைப் பெற 20 முதல் 25 நாட்ஸ் வேகம் தேவை.

விக்ராந்தின் பழைய பெயர் எச்எம்எஸ் ஹெர்குலஸ். 1957 இல் இந்தியா பிரிட்டனிடமிருந்து இதை வாங்கியது. இது 1943 இல் உருவாக்கப்பட்டது, ஆனால் அது இரண்டாம் உலகப் போரில் பங்கேற்க முடியவில்லை. விக்ராந்த் பின்னர் வெஸ்டர்ன் கடற்படையில் நியமிக்கப்பட்டது. ஆனால் அதன் மோசமான நிலையைக் கண்ட கடற்படைத் தலைமையகம் அதைக் கிழக்குக் கடற்படையில் இடம்பெறச் செய்வதே நல்லது என்று முடிவு செய்தது.

பம்பாயிலிருந்து மாயமான விக்ராந்த்

கப்பல் - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கப்பல் - கோப்புப் படம்

இயான் கார்டோசோ தனது '1971 ஸ்டோரிஸ் ஆஃப் க்ரிட் அண்ட் க்ளோரி ஃப்ரம் இண்டோ பாக் வார்' என்ற புத்தகத்தில், "நவம்பர் 1971 இல், பம்பாயில் ஒரு ஹோட்டலில் வசிக்கும் பாகிஸ்தான் உளவாளிகள் விக்ராந்த் பம்பாயில் நிற்பதை தங்கள் மேலிடத்துக்குத் தெரிவித்தனர். ஆனால் நவம்பர் 13 அன்று, விக்ராந்த் எங்கும் காணப்படவில்லை. விக்ராந்த் திடீரென காணாமல் போனது. இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு அனுதாபம் காட்டும் ஒரு மேற்கத்திய நாட்டிலிருந்து ஒரு கடற்படை அதிகாரி, இந்திய கடற்படையின் மேற்குக் கட்டளை அதிகாரியிடம், விக்ராந்த் அப்போது எங்கிருக்கிறது என்று கேட்டறிய முயன்றார். " என்று எழுதியுள்ளார்.

"இந்தியக் கடற்படை உளவுத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தானின் உளவாளிகள் விக்ராந்த் சென்னையில் இருப்பதாகக் கூறினர். அந்த நாட்களில் பாகிஸ்தானை ஆதரிக்கும் அதே மேற்கத்திய நாட்டின் ஒரு கப்பல் சென்னைக்குச் சென்றது. அங்கு அதில் ஏதோ கோளாறு ஏற்பட்டதாகவும் அதற்காகப் பல சோதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதன் உண்மையான நோக்கம் விக்ராந்த் சென்னையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கலாம்"

பாகிஸ்தானின் ரகசியக் குறியீட்டைக் கண்டறிந்த இந்திய உளவுத் துறை

போர் கப்பலிலிருந்து புறப்படும் விமானம்

பட மூலாதாரம், LANCER PUBLICATION

படக்குறிப்பு, போர் கப்பலிலிருந்து புறப்படும் விமானம்

நவம்பர் 8, 1971 அன்று, வயர்லெஸ் செய்திகளை ரகசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த மேஜர் தரம் தேவ் தத், கராச்சிக்கும் டாக்காவிற்கும் இடையில் செல்லும் செய்திகளைக் கேட்க முயன்றார். அந்த நாளில் செய்திகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், ஏதோ பெரிய விஷயம் நடக்கப்போகிறது என்றும் அதை இந்தியா முழுமையாக அறிந்திருப்பது அவசியம் என்றும் அவர் நினைத்தார்.

தரம் தேவ் தத் என உத்தியோகபூர்வ பதிவுகளில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டதால், என்டிஏ காலத்திலிருந்தே தரம் அவரது தோழர்களால் 3 டி என அழைக்கப்பட்டார். அவரது டேப் ரெக்கார்டர் ஐபிஎம்மின் மெயின்ஃப்ரேம் கணினியுடன் இணைக்கப்பட்டது. திடீரென நவம்பர் 10 ஆம் தேதி அவர் பாகிஸ்தான் கடற்படையின் குறியீட்டைக் கண்டறிவதில் வெற்றி பெற்று மொத்த புதிரையும் ஒரு நொடியில் தீர்த்தார்.

அவர் கிழக்கு கமாண்ட் ஸ்டாஃப் ஆபிசர் ஜெனரல் ஜேக்கப்பை அழைத்து, பாகிஸ்தான் கடற்படை கோட் உடைக்கப்பட்டது என்று அர்த்தம் கொண்ட குறியீட்டு வார்த்தையை கூறினார். இந்தியக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை மூழ்கடிப்பது பாகிஸ்தானிய கடற்படையின் முக்கிய நோக்கம் என்று முதல் முறையாக அறியப்பட்டது. அவர்களது இரண்டாவது நோக்கம் இந்தியாவின் மேற்கத்திய கடற்படையின் கப்பல்களை தனது டாஃப்னே வகை நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி மூழ்கடிப்பதாகும்.

இலங்கையில் எரிபொருள் நிரப்பப்பட்ட காஸி

காஜி நீர்மூழ்கிக் கப்பல் கராச்சியில் இருந்து நவம்பர் 14, 1971 அன்று தனது பணியை நிறைவேற்றப் புறப்பட்டது. காஸி முதலில் இலங்கைக்குச் சென்று, அங்கு நவம்பர் 18 அன்று திரிகோணமலையில் எரிபொருள் நிரப்பிக் கொண்டது. அங்கிருந்து சென்னை வரத் தயாராக இருந்த சமயத்தில் விக்ராந்த் சென்னையில் இல்லை என்று கராச்சியிலிருந்து ஒரு செய்தி வந்தது.

விக்ராந்த் காணாமல் போனதையடுத்து அடுத்த உத்தரவு என்ன என்று கேட்டு, ஜாஃபர் கராச்சிக்குச் செய்தி அனுப்புகிறார். கராச்சியிலிருந்து, பாகிஸ்தானின் கிழக்கு கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் முகமது ஷெரீப்புக்கு குறியீட்டுச் செய்தியை அனுப்பப்படுகிறது. விக்ராந்தின் இயக்கம் பற்றி ஏதேனும் தகவல் இருக்கிறதா என்று கேட்டார். இந்த செய்திகள் அனைத்தும் 3D யால் கண்காணிக்கப்பட்டு, கடற்படை தலைமையகத்திற்கு குறியீட்டு மொழியில் அனுப்பப்பட்டன.

ஆனால் இந்தியாவிலிருந்து வரும் செய்திகளை பாகிஸ்தானும் கண்காணித்து வந்தது. விக்ராந்த் அப்போது விசாகப்பட்டினத்தை அடைந்திருப்பதாக அவர் தளபதி ஜாஃபர் கானிடம் தெரிவித்தார். பாகிஸ்தானின் கடற்படைத் தலைமையகம் மற்றும் காஸியின் கேப்டன் ஆகியோர் விக்ராந்தை மூழ்கடிக்கச் சிறந்த வாய்ப்பு விசாகப்பட்டினத்தில் இருப்பதை உணர்ந்தனர். 3 டி அதைப் பற்றி அறிந்ததும், அவர் மிகவும் கவலைகொண்டார்.

இயான் கார்டோசோ, "பாகிஸ்தான் கடற்படை தனது செய்திகளின் மூலம் தனது நோக்கங்களை வெளிப்படுத்தும் தவறைச் செய்தது என்றால், இந்தியக் கடற்படையும் சளைத்ததில்லை என்று அவர் நினைத்தார். விக்ராந்த் இருக்கும் இடம் பாகிஸ்தானியர்களுக்குத் தெரியும் என்றும் அசம்பாவிதத்தைத் தவிர்க்க, இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்" என்று எழுதுகிறார்.

டிசம்பர் முதல் தேதி இரவு காஸி விசாகப்பட்டினம் வந்தது

போர் கப்பலுடன் கப்பல் படை ஹெலிகாப்டர்

பட மூலாதாரம், LANCER PUBLICATION

படக்குறிப்பு, போர் கப்பலுடன் கப்பல் படை ஹெலிகாப்டர்

காஸி திரிகோணமலையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு 23 நவம்பர் 1971 இல் பயனத்தைத் தொடங்கியது. நவம்பர் 25 அன்று சென்னையைக் கடந்து டிசம்பர் 1 அன்று இரவு 11:45 மணிக்கு விசாகப்பட்டினம் துறைமுகத்தை அடைந்தது.

மேஜர் ஜெனரல் ஃபசல் முகீம் கான் தனது 'பாகிஸ்தான் க்ரைஸிஸ் இன் லீடர்ஷிப்' என்ற புத்தகத்தில் துறைமுகத்தின் நேவிகேஷன் சேனல் ஆழமில்லாமல் இருந்ததால், காஸி, துறைமுகத்திலிருந்து 2.1 கடல் மைல் தொலைவு மட்டுமே செல்ல முடியும் என்பதே பிரச்சனையாக இருந்தது.

தளபதி ஜாஃபர் தான் இருக்கும் இடத்தில் தங்கி விக்ராந்த் வெளியே வரும் வரை காத்திருக்க முடிவு செய்கிறார். இதற்கிடையில், காஸியின் மருத்துவ அதிகாரி காஸியிலிருந்து வெளியேறும் புகை அதில் உள்ள கடற்படையினரின் உடல்நிலை குறித்த கவலையை எழுப்பியதோடு மட்டுமல்லாமல், நீர்மூழ்கிக் கப்பலின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருந்தது என்று கவலை தெரிவித்தார். காஸி இரவில் தூய காற்றைப் பெற மேற்பரப்பில் வந்து, இந்த நேரத்தில் பேட்டரிகளையும் மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

காஸியிலிருந்த மாலுமிகளின் ஆரோக்கியம் பாதிப்பு

நீர்மூழ்கிக் கப்பலின் ஹைட்ரஜன் அளவு பாதுகாப்புத் தரங்களை மீறினால், காஸி சேதமடைய வாய்ப்புண்டு என்பதை தளபதி கான் உணர்ந்தார். ஆனால் காஸியைப் பழுதுபார்க்க, சூரிய ஒளியில் மேலே கொண்டுவந்தால், அது வெளிப்பட்டுவிடும் என்பதையும் ஜாஃபர் அறிந்திருந்தார். தொலைவிலிருந்தே தெரியக்கூடிய பெரிய கப்பலாகும் காஸி.

மாலை 5 மணிக்கு நீர்மூழ்கிக் கப்பலின் நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரி இருவரும் நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே உள்ள காற்று கடுமையாக மாசுபட்டிருப்பதாக கேப்டன் ஜாஃபருக்கு தகவல் கொடுத்ததைக் கேட்டே, மாலுமிகளில் ஒருவர் மயக்கமடைந்தார்.

இரவு வரை காத்திருக்க நேரமில்லை என்றும் காஸி உடனடியாக மேல்பரப்புக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதற்கிடையில், நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே காற்று தொடர்ந்து மாசுபட்டு, பல மாலுமிகள் இருமத் தொடங்கினர், அது அவர்களின் கண்களையும் பாதிக்கத் தொடங்கியது.

காஸியை நோக்கி இந்தியக் கப்பல் வந்தது

புத்தகத்தின் அட்டைப் படம்

பட மூலாதாரம், EBURY PRESS

படக்குறிப்பு, புத்தகத்தின் அட்டைப் படம்

முதலில் காஸியை பெரிஸ்கோப் மட்டத்திற்குக் கொண்டுவந்து, வெளிப்புறச் சோதனை செய்யுமாறு ஜாஃபர் உத்தரவிட்டார். காஸி மெதுவாகக் கடல் மட்டத்திலிருந்து 27 அடி கீழே வரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து, பெரிஸ்கோப்புக்கு வெளியே காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் ஜாஃபர் திகைத்தார். ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு பெரிய இந்தியக் கப்பல் தங்களது கப்பலை நோக்கி நகர்வதை அவர் கண்டார்.

நேரத்தை வீணாக்காமல் ஜாஃபர் காஸியை உடனே கீழே இறக்க உத்தரவிட்டார். ஜாஃபரின் உத்தரவின் 90 வினாடிகளுக்குள், காஸி மீண்டும் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றாது. ஒரு நிமிடத்திற்குள் இந்தியக் கப்பல் காஸியை கடந்து சென்றது. நிலைமை இயல்பு நிலைக்கு வரும் வரை கேப்டன் கான் காத்திருந்தார்.

இதற்கிடையில், மருத்துவ அதிகாரி மீண்டும் வந்து நிலைமை மோசமாகி வருகிறது என்று கூறினார். நீர்மூழ்கிக் கப்பல் மேற்பரப்புக்குச் செல்வது அதிக அவசியமாகி வந்தது. பின்னர் காஸி டிசம்பர் 3-4 இரவு 12 மணிக்கு மேலே சென்று, நான்கு மணி நேர பழுதுபார்க்கும் வேலைக்குப் பிறகு, அதிகாலை 4 மணிக்கு மீண்டும் இறங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், மாலுமிகள் விரும்பினால், அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்குக் கடிதங்களை எழுதலாம் என்றும், அது மீண்டும் திரும்பும் போது திருகோணமலையில் இருந்து அனுப்பப்படும் என்றும் ஜாஃபர் உத்தரவிட்டார்.

பிரதமர் நாட்டுக்கு உரையாற்றும் போது வெடிச் சத்தம்

டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 5:45 மணிக்கு பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கியதை ஜாஃபர் அறிந்திருக்கவில்லை.

வைஸ் அட்மிரல் முசாஃபர் ஹுசைன் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார். அவர் விக்ராந்தை மூழ்கடித்ததாக ஜாஃபரின் செய்திக்காகக் காத்திருந்தார், ஆனால் காஸி இன்னும் உள்ளேயே இருந்தது.

டிசம்பர் 3-4 நள்ளிரவில், பிரதமர் இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பாகிஸ்தான் தாக்குதல் குறித்துத் தெரிவித்தார்.

பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ​​விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. இந்த வெடிச் சத்தம் மிகவும் வலுவாக இருந்ததால் துறைமுகத்தின் முன்புறம் இருந்த வீடுகளின் ஜன்னல்கள் நொறுங்கின.

கடல் நீர் மிக உயரத்தில் எழும்பியதை மக்கள் தூரத்திலிருந்து பார்த்தார்கள். பூகம்பம் ஏற்பட்டதாகச் சிலர் நினைத்தனர். சிலர் பாகிஸ்தான் விமானப்படை வெடிகுண்டு வீசுவதாக நினைத்தனர்.

வெடித்த நேரம் 12:15 என பதிவாகியுள்ளது. பின்னர் காஸியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரம் சரியாக அந்த நேரத்தில் நின்று போய்விட்டதைக் காட்டியது. டிசம்பர் 4 பிற்பகலில், சில மீனவர்கள் காஸியின் சில எஞ்சிய பகுதிகளைக் கடலில் இருந்து எடுத்தனர்.

ரகசியமாக அந்தமான் அனுப்பப்பட்ட விக்ராந்த்

காஸி வழித்தடத் திட்டம்

பட மூலாதாரம், Lancer publication

படக்குறிப்பு, காஸி வழித்தடத் திட்டம்

இந்தக் கதையின் மிகப்பெரிய திருப்பம் என்னவென்றால், விக்ராந்த் விசாகப்பட்டினத்திலேயே இல்லை. இதை அறிந்ததும், பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பல் விக்ராந்தைத் தேடி அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்பட்டது. விக்ராந்த் விசாகப்பட்டினத்தில் இருப்பதாகப் பாகிஸ்தானியர்களுக்குத் தோன்ற வைக்க, ஒரு பழைய போர்க் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் நிறுத்தப்பட்டிருந்தது.

1971 ஆம் ஆண்டில், கிழக்கு கட்டளைத் தலைவரான வைஸ் அட்மிரல் என் கிருஷ்ணன் தனது சுயசரிதையான 'அ செய்லர்ஸ் ஸ்டோரி' -யில், "ராஜ்புத் விசாகப்பட்டினத்திலிருந்து 160 கிமீ தொலைவில் கொண்டு செல்லப்பட்டது. விக்ராந்தின் கால் சைன் ஒலியையே பயன்படுத்தவும் அது பயன்படுத்தும் அதே வானொலி அலைவரிசைகளைப் பயன்படுத்தவும் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. " என்று குறிப்பிடுகிறார்.

விசாகப்பட்டினம் சந்தையில் இருந்து அதிக அளவு ரேஷன், இறைச்சி மற்றும் காய்கறிகள் வாங்கப்பட்டன, இதனால் அங்குள்ள பாகிஸ்தான் உளவாளிகள் விக்ராந்த் தற்போது விசாகப்பட்டினத்தில் நிற்பதாகத் தெரிவித்தனர். பாகிஸ்தானியர்கள் கடும் வயர்லெஸ் போக்குவரத்தால் அங்கு ஒரு பெரிய கப்பல் நிற்பதாக ஏமாற்றப்பட்டனர். வேண்டுமென்றே, ஒரு மாலுமியிடமிருந்து தனது தாயின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஒரு தந்தி அனுப்பப்பட்டது. இந்த போலி பிரச்சாரத்தின் வெற்றிக்கு ஆதாரம் கஜியின் எஞ்சிய பகுதிகளிலிருந்து கராச்சியிலிருந்து உளவுத் துறை அனுப்பிய ஒரு செய்தி கிடைத்தது. அச்செய்தி, கப்பல் துறைமுகத்தில் இருப்பதாகத் தகவல்' "

அதிக அளவு ஹைட்ரோஜனால் வெடிப்பா?

காஸி மூழ்கியதற்கான காரணத்தை ஊகிக்க மட்டுமே முடியும். ஆரம்பத்தில் இந்தியக் கடற்படை அதன் கப்பல் ஐஎன்எஸ் ராஜ்புத் காஸியை மூழ்கடித்தது என்ற பெருமை பெற விரும்பியது. ஆனால் காஸி தானே தன்னை அழித்துக் கொண்டது என்ற ஐயம் எழும்பியது.

மூன்றாவது ஐயம், நீர்மூழ்கிக் கப்பல் எடுத்துச் சென்ற கண்ணிவெடிகள் திடீரென வெடித்து காஸி அழிந்திருக்கக்கூடும் என்பது. அதிகப்படியான ஹைட்ரஜன் வாயு காரணமாக அது வெடித்தது என்று நான்காவது சாத்தியக்கூறும் வெளிப்படுத்தப்பட்டது.

காஸியின் எஞ்சிய பகுதிகளை ஆராய்ந்த பெரும்பாலான இந்திய அதிகாரிகள் மற்றும் டைவர்கள் நான்காவது சாத்தியம் தான் சரியாக இருக்க முடியும் என்று நம்புகிறார்கள். காஸியின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்தவர்கள், காஸியின் உடலில் டார்பிடோக்கள் வைக்கப்பட்ட இடத்தில் விரிசல் இருந்ததாகக் கூறுகிறார்கள். டார்பிடோ அல்லது கண்ணிவெடி வெடித்திருந்தால், நீர்மூழ்கிக் கப்பலின் முன்பகுதிக்கு சேதம் அதிகமாக இருந்திருக்கும். இது தவிர, காஜியின் மெசேஜ் பதிவு புத்தகத்திலிருந்து அனுப்பப்பட்ட பெரும்பாலான செய்திகளில் நீர்மூழ்கிக் கப்பலுக்குள் அதிகப்படியான ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸி மூழ்கியது குறித்த கேள்வி

பாகிஸ்தான் கமாண்டர் ஜாஃபர் மொஹம்மத் கான்

பட மூலாதாரம், PAKISTAN NAVY

படக்குறிப்பு, பாகிஸ்தான் கமாண்டர் ஜாஃபர் மொஹம்மத் கான்

காஸி மூழ்கிய முதல் செய்தி இந்தியக் கடற்படைத் தலைமையகத்தால் டிசம்பர் 9 அன்று வெளியிடப்பட்டது. காஸி டிசம்பர் 3-4 அன்றே மூழ்கிவிட்டது.

வைஸ் அட்மிரல் ஜிஎம் ஹிராநந்தானி தனது 'ட்ரான்சிஷன் டு ட்ரயம்ஃப் இண்டியன் நேவி 1965-1975' என்ற புத்தகத்தில், "காஸியை இந்தியா மூழ்கடித்ததற்கும் அதன் அறிவிப்பிற்கும் இடையிலான 6 நாள் இடைவெளி பல கேள்விகளை எழுப்பியது. அது இந்த ஊகங்களுக்கும் வழிவகுத்தது - போரை அறிவிப்பதற்கு முன்பே நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியிருக்கலாம். நவம்பர் 26க்குப் பிறகு கராச்சியால் காஸியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும் இந்தச் சாத்தியக் கூற்றுக்கு வலு சேர்க்கிறது.

ஆனால் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் இந்தியா அனைத்து ஆதாரங்களையும் சரிபார்க்க விரும்புகிறது என்று இந்தியாவின் தரப்பில் இருந்து தெளிவுபடுத்தப்பட்டது. கடலின் அலைகள் மிகவும் வலுவாக இருந்ததால் கடலுக்கு அடியில் காஸியை ஆய்வு செய்வதில் நிறைய சிரமங்கள் இருந்தன.

டிசம்பர் 5 ஆம் தேதி, இந்திய டைவர்களுக்கு மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் உண்மையில் காஸி தான் என்பதற்கு வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்தது. மூன்றாவது நாளில் நீர்மூழ்கிக் கப்பலின் கோனிங் கோபுரத்தைத் திறக்க முடிந்தது, அதே நாளில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து முதல் சடலத்தையும் கண்டுபிடித்தனர்.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் திட்டத்தை மறுத்த இந்தியா

இந்திய கடற்படை தொடர்பான புத்தகத்தின் அட்டைப் படம்

பட மூலாதாரம், LANCER PUBLICATION

படக்குறிப்பு, இந்திய கடற்படை தொடர்பான புத்தகத்தின் அட்டைப் படம்

காஸி இதுவரை விசாகப்பட்டினம் துறைமுகத்தின் வெளிப்புறத்தில் ஜல சமாதி அடைந்துள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு குத்தகைக்கு விடப்பட்டது என்ற அடிப்படையில், காஸியைத் தங்கள் சொந்த செலவில் கடலில் இருந்து எடுக்க அமெரிக்கா இந்திய அரசுக்குத் தெரிவித்தது.

ஆனால் காஸி இந்தியக் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி இந்தியா இந்த வாய்ப்பை நிராகரித்தது. இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பிறகு அது அழிக்கப்பட்டது என்று இந்தியா கூறியது.

பாகிஸ்தானும் தனது சொந்த செலவில், காஸியை வெளியே எடுக்க முன்வந்தது. ஆனால், அதையும் இந்தியா மறுத்துவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :