You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரியங்கா மீது வழக்கு: லக்னெள விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்னா
காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி மற்றும் 10 பேர் மீது உத்தர பிரதேச மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றதாக அம்மாநில காவல்துறையினர் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், போலீஸாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளவர், அச்சமற்றவர் என்றும் அவர் ஓர் உண்மையான காங்கிரஸ்காரர் என்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சீதாபூரில் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை சந்திப்பதற்காக காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகெல் லக்னெள வந்தார். ஆனால், அவர் பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூறி உத்தர பிரதேச காவல்துறையினர் தடையாக இருந்தனர். இதனால், அவர் விமான நிலைய வளாகத்திலேயே தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.
எவ்வித உத்தரவுகளுமின்றி என்னை காவல்துறையினர் தடுக்கிறார்கள் என்று அவர் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக தமக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நான்கு விவசாயிகள் உள்பட 8 பேர் பலியான சம்பவம் தொடர்புடைய கார் மோதல் காட்சிகள் என்று கூறப்படும் காணொளியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டிருக்கிறார்.
அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரியங்கா காந்தியை திங்கட்கிழமை அதிகாலை முதல் உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். அவர் சீதாபூர் அரசு விருந்தினர் இல்லத்தில் உள்ள அறையில் அவர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.
வன்முறை, கலவரம் ஏற்படலாம் என்று அஞ்சப்படும் பகுதிக்கு செல்ல பிரியங்காவும் சில காங்கிரஸாரும் முற்படுவதால், முன்னெச்சரிக்கையாக அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால், தாங்கள் அனைவரும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள காணொளியில், உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசும் மத்தியில் ஆளும் நரேந்திர மோதி தலைமையிலான அரசும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சியினரை இலக்கு வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோதி, லக்கிம்பூர் வன்முறைக்கு மூலகாரணமான மத்திய உள்துறை இணை அமைச்சரை் அஜய் மிஸ்ராவை அமைச்சரவையில் இருந்து நீக்காமல் அவரது செயல்பாடுகளை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில், லக்கிம்பூர் வன்முறைக்கு முந்தைய பாஜகவினரின் கார் மோதும் காட்சி எனக் கூறப்படும் காணொளியை பிரியங்கா காந்தி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
25 நொடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில், பன்பீர்பூர் பாதையில் வழியை மறித்து நின்ற விவசாயிகள் உள்ளிட்டோர் மீது வேகமாக வரும் ஒரு எஸ்யுவி ரக கார் மோதியதில் அதன் முன்பாக நின்றிருந்தவர்கள் தூக்கி வீசப்படும் காட்சிகள் உள்ளன.
இந்த காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசியால் உறுதிப்படுத்த இயலவில்லை. எனினும், இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார் மோதல் காட்சிகளை வெளியிட்ட பிரியங்கா தோன்றும் காணொளியில், "இப்போது விவசாயிகளை ஏற்றிக் கொன்றவர்களின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ளவர்களை மோதி அரசாங்கம் கைது செய்ய ஏன் மறுக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்காக புறப்பட முயன்ற என்னை 24 மணி நேரத்துக்கும் மேலாக உத்தர பிரதேச மாநில காவல்துறை, எவ்வித புகாரோ வழக்கோ இல்லாமல் கைது செய்துள்ளது. ஆனால், அப்பாவி மக்களை ஏற்றிக் கொன்றவர்களை இன்னும் கைது செய்யாமல் அரசு தாமதிக்கிறது," என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.
லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள், அந்த பகுதியில் நடந்த துணை முதல்வரின் வருகைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது மோதிச் சென்றதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் தமது மகன் இல்லை என்றும் அவர் வேறு இடத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்க தம்மிடம் புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரம் இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி வருகிறார்.
இந்த விவகாரத்தில் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு காணப்படுவதால், லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக விவசாயிகள் தரப்பிலும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் மகன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் இரு தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த தரப்பிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விவசாயிகள் தரப்பிடம் அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதன் முடிவில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 45 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டதாக மாநில அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் அவனிஷ் அவஸ்தி திங்கட்கிழமை மாலையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சமாதானம் எட்டப்பட்டு விட்டதாக அரசு தரப்பு கூறினாலும், விவசாயிகளுக்கு நீதி வழங்கக் கோரி தொடர்ந்து லக்கிம்பூர் கேரியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று மாலை லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் நான்கு கம்பெனி மத்திய துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறையை பயன்படுத்தி எதிர்கட்சியினர் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக மாநில அமைச்சர் மெஹ்ரின் ரஸா குற்றம்சாட்டியுள்ளார்.
"லக்கிம்பூர் சம்பவத்தால் நாங்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளோம். அங்கு பலியானவர்களின் சடலங்களை வைத்துக் கொண்டு எதிர்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். எதிர்கட்சிகளின் எதிர்மறை அரசியலை இந்த நாடே பார்த்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதன் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மொஹ்சின் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்ப்பதற்காக ஹரியாணாவின் அம்பாலாவில் உள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பகுதியில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னாம் சிங் தலைமையில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். அவர்களை நேற்றிரவு தடுத்து வைத்த காவல்துறையினர் இன்று அதிகாலையில் விடுவித்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள சீதாபூர் அரசு விருந்தினர் இல்லத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து, அவரை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீரட் நகரிலும் சில காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும், அவர்களில் 18 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினீத் பட்நாகர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- ஆர்யன் கானுக்கு அக்டோபர் 7வரை காவல் - பாலிவுட்டை உலுக்கும் போதைப்பொருள் கலாசாரம்
- 'அண்ணாத்த' ரஜினி உருக்கம்: "எஸ்பிபி 45 வருடங்களாக எனது குரலாகவே வாழ்ந்தவர்"
- உலக தலைவர்களின் ரகசிய சொத்து விவரங்களை அம்பலப்படுத்தும் புலனாய்வு - விரிவான தகவல்கள்
- நீலகிரியின் டி23 புலி - கமலின் கோரிக்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?
- ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்தது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்