You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பாஜகவினர் என்னை அறைந்துவிட்டனர்; வெடிகுண்டு கொண்டு வந்தனர்' - உத்தரப் பிரதேச காவல் அதிகாரி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தல்களின்போது பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் தம்மை அறைந்துவிட்டனர் என்று காவல் அதிகாரி ஒருவர் தமது மூத்த காவல் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசி வாயிலாக கூறும் காணொளி இணையதளத்தில் வைரலாக பரவுகிறது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 476 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள் மற்றும் 17 மாவட்ட ஊராட்சிகளின் தலைவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த மாத தொடக்கத்திலும் பல இடங்களுக்கான தேர்தல் நடந்தது.
தேர்தலில் வென்ற வார்டு உறுப்பினர்கள் இவர்களைத் தேர்வு செய்தனர். இந்தத் தேர்தலின் போது பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
அரசியல் கட்சியினர் தங்களுக்கிடையே மோதிக்கொள்ளும் காணொளிகள், காவல்துறையினருடன் அரசியல் கட்சியினரும் மோதிக்கொள்ளும் காணொளிகள் ஆகியவை இந்த தேர்தலுக்கு பிறகு சமூக ஊடகங்களில் வெளியாகின .
அவ்வாறு வெளியான காணொளி ஒன்றில் இட்டாவா மாநகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் குமார் பிரசாத் தமது மூத்த அதிகாரி ஒருவரிடம் "சார் அவர்கள் கற்களைக் கொண்டுவந்தனர். என்னை அவர்கள் அறைந்துவிட்டனர். பாரதிய ஜனதா கட்சியினர்வெடிகுண்டு கொண்டு வந்தனர்," என்று தமது மூத்த அதிகாரி ஒருவரிடம் கூறும் காணொளி ஒன்றை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன என்கிறது பிடிஐ செய்தி.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்படும் என்று இட்டாவா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று இட்டாவா மாவட்ட காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த நிகழ்வை உறுதி செய்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக அந்த மாவட்டத்தின் பார்புரா ஒன்றியத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடையாளம் அறியப்பட்ட ஒரு நபர் மற்றும் அடையாளம் அறியப்படாத சில நபர்களுக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த விமல் பதூரியா என்பவர் மீது காவல் அதிகாரியைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒருவர் மீது ஒருவர் கற்களை எறிதல், காவல்துறையினர் கூட்டத்தை கலைப்பதற்காக தடியடி நடத்தியது உள்ளிட்ட நிகழ்வுகள் இந்த தேர்தலின்போது நடந்தன. இந்த நிகழ்வுகளின் போது காவல்துறையினர் சிலரும் காயம் அடைந்தனர்.
இதுவரை தேர்தல் முடிந்துள்ள 825 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கான இடங்களின் 635 இடங்களைத் தாங்கள் வென்று கைப்பற்றியுள்ளோம் என்று பாஜக சனியன்று தெரிவித்தது.
தேர்தலின்போது உன்னாவில் செய்தியாளர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்ட காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலானது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
பிற செய்திகள்:
- யார் இந்த அண்ணா? தமிழ்நாட்டு அரசியலில் அவர் ஏன் இவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறார்?
- நீலகிரி ஏழை மக்களுக்கு உதவும் 'ஆட்டோ ஆம்புலன்ஸ்' - மலையில் மலர்ந்த மனிதநேயம்
- பழங்கால மெசபடோமிய நகரான பாபிலோன் வரலாறு உங்களுக்கு தெரியுமா?
- 'அமித் ஷா வருகிறார்; கதவுகளை மூடி வையுங்கள்' - கடிதம் எழுதிய குஜராத் காவல்துறை
- இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, சலுகைகள் ரத்து - உ.பி. அரசு திட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்