You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டாலின் செயல்பாடு எப்படி? கமல் என்ன செய்கிறார்? பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் விசாரித்த நரேந்திர மோதி
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை, தமிழ்நாடு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். தி.மு.க அரசின் செயல்பாடுகள், கமல்ஹாசனின் அரசியல், பா.ஜ.க செய்ய வேண்டிய பணிகள் எனப் பல விஷயங்களை பிரதமர் விவாதித்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதன்பிறகு பிரதமர் நரேந்திர மோதியிடம் வாழ்த்துப் பெறும் வகையில் ஒரு சந்திப்பை அமைக்க அவரிடம் தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையால் சற்று தாமதம் ஏற்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரும் டெல்லி சென்றனர். இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன், எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
சந்திப்பில் பேசப்பட்டவை என்ன?
பிரதமருடனான சந்திப்பு குறித்து கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமருடன் இரண்டாவது சந்திப்பாக எனக்கு இது அமைந்தது. ஜூன் 5 ஆம் தேதியன்று கட்சியின் அணிகளின் தலைவர்களை 4 மணிநேரம் பிரதமர் சந்தித்தார்.
அப்போது கட்சி தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. `என்னுடைய பெயரை எவ்வாறு உச்சரிப்பது?' எனக் கேட்டுவிட்டு, ` மகளிர் அணியின் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்' என்றார்.
இன்றைய சந்திப்பில், மகளிர் அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவிட்டதைக் கூறியதும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நால்வருக்கும் வாழ்த்துகளை கூறிவிட்டு குரூப் போட்டோ எடுத்துக் கொள்ள அழைத்தார். இதன்பிறகு பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன" என்கிறார்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பட்டியலிட்டார். `` பிரதமரிடம் பேசும்போது, `தமிழ்நாடு விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக இருக்கிறது. தடுப்பூசி மருந்துகளை குறைத்துக் கொண்டு வருவதாகப் பேசப்படுகிறது' என்றோம். அதற்குப் பதில் அளித்த பிரதமர், `இந்த மாதமே 2 மடங்காக உயர்த்திக் கொடுத்துள்ளோம். தடுப்பூசிகளை வீணாக்காமல் எந்தளவுக்கு மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்' என்றார்.
அடுத்ததாக, `தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், கோதாவரி-காவிரி இணைப்புக்கு தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும்' என்றோம். `சரிதான். நாம் நீண்டநாள்களாக பேசிக் கொண்டு வரும் விஷயங்கள் இவை.
சில மாநிலங்களில் இதனைச் செய்துள்ளனர். நீங்கள் ஒரு கட்சியாகவும் நீரின் அவசியத்தை வலியுறுத்தி இயக்கமாக கொண்டு செல்லுங்கள். மழை நீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை போன்றவற்றை முன்னெடுங்கள்' எனப் பிரதமர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பாதை, விண் சுற்றுலா
தொடர்ந்து பேசும்போது, `தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களைக் கொடுத்துள்ளீர்கள். 'இன்டஸ்ட்ரியல் காரிடார்' எனப்படும் தொழிற்பாதை அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். தமிழ்நாட்டில் சுற்றுலா என்பது மிக முக்கியமானது. மத வழிபாட்டுத் தலங்களும் தொல்லியல் தொடர்பான இடங்களும் நிறைய உள்ளன.
அதனால் அவற்றையெல்லாம் இணைக்கும் வகையில் `சுற்றுலா வலப் பாதை' வேண்டும்' என்றேன். `நல்ல விஷயம். அதற்கு நிச்சயமாக கவனம் கொடுப்போம்' என்றார். அப்போது ராமேஸ்வரம் பற்றிப் பேசிய நயினார் நாகேந்திரன், `ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, குற்றாலம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் `விண் சுற்றுலா (ஹெலி டூரிசம்)' அமைக்க வேண்டும் என்றார்.
அப்போது பிரதமர் குறுக்கிட்டு, `அப்துல் கலாம் நினைவிடத்தைப் பார்க்க மக்கள் வருகிறார்களா?' எனக் கேட்டுவிட்டு, `கலாம் நினைவிடத்துக்கு நான் வந்திருந்தேன்' என நினைவுகூர்ந்தார். அப்போது பேசிய நான், `அப்போது ஒரு நல்ல விஷயத்தை செயல்படுத்தினீர்கள்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தீர்கள்' என்றேன். அதற்கு சிரித்துக் கொண்டே `ஆமாம்' எனப் பதில் அளித்தார். பின்னர், `மிக நீண்ட கடற்கரையுள்ள பகுதியாக தமிழ்நாடு உள்ளது. இதன் கரையோரக் கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மீனவர்களின் இறப்பு என்பது இலங்கைக் கடற்படையால் நடத்தப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு என்னுடைய நன்றிகள்' என்றேன்.
நாட்டுக்கு எதிரான மனநிலை
பின்னர், தமிழ்நாடு அரசு குறித்து விசாரித்த பிரதமர், ` புதிய அரசு எவ்வாறு செயல்படுகிறது?' என்றார். `கொரோனா பேரிடர் காலத்தில் அவர்கள் பதவியேற்றனர். தொடக்கத்தில் சற்று வேகம் குறைவாக இருந்தாலும் தற்போது அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எங்களின் கவலையெல்லாம் என்னவென்றால், பா.ஜ.கவுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக சில அமைப்புகள் சமீபகாலமாக இயங்கி வருகின்றன.
அது ஒரு கட்சிக்கு எதிரான மனநிலை என்பதைவிட ஒரு நாட்டுக்கு எதிரான மனநிலையை முன்வைக்கிறது. இது கவலையளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது என்றோம். இதனை பிரதமர் பொறுமையாக கேட்டுக் கொண்டார்" என்றார்.
'மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள்'
``அது என்ன விவகாரம் எனக் குறிப்பிட்டுக் கூற முடிந்ததா?" என்றோம். `` ஆமாம். 'ஜெய்ஹிந்த் முழக்கம் ஆளுநர் உரையில் இல்லாததை பெருமையாக பேசும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது' என்பதை எடுத்துக் கூறினோம். அதன்பிறகு கன்னியாகுமரி மாவட்டம் தொடர்பாக பேசிய காந்தி, ` கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சட்டக் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்' என்றார். அதன்பிறகு சரஸ்வதி அம்மாவும், நதி நீர் இணைப்பு குறித்துப் பேசினார்.
இதன்பிறகு எங்களிடம் பேசிய பிரதமர், `நாம் செய்யக் கூடிய பணிகள் எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு சென்றுள்ளன?' என்றார். `நிறைய நேரங்களில் மத்திய அரசு எடுக்கும் நல்ல நடவடிக்கைகள் மொழி காரணமாக மக்களிடம் சென்று சேருவதில் சுணக்கம் உள்ளது' என்றோம். இதற்குப் பதில் அளித்த பிரதமர், `ஏற்கெனவே அனைத்து மொழிகளிலும் கொடுத்து வருகிறோம். நீங்களும் அதை கட்சிரீதியாக தமிழ்ப்படுத்தி மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்' என்றார்.
இதன்பிறகு ஒவ்வொருவரும் அவரவரர் தொகுதி நிலவரங்களைக் கூறினோம். அப்போது நான் வெற்றி பெற்றது குறித்து மாநில தலைவர் எல்.முருகன் கூறும்போது, `கமல்ஹாசனை இவர்தான் தோற்கடித்தார்' என்றார். இதனைக் கேட்ட பிரதமர், `தேர்தலுக்குப் பிறகு கமல் எப்படி இயங்குகிறார்?' என விசாரித்தார். பின்னர் எங்களை வழியனுப்பும்போது, `கட்சியின் வளர்ச்சி, மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.
சட்டமன்றத்தில் சிறப்பாகச் செயல்படுங்கள்' என்றார். இதன்பிறகு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தோம். அவர் எங்களிடம், `சட்டமன்றத்தில் பேசும்போது தரவுகளோடு பேசுங்கள். கட்சியின் வளர்ச்சிக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்போம்' என்றார். இதன் தொடர்ச்சியாக நிதி அமைச்சரை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்