You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிராமசபை கூட்டம் : ஸ்டாலின் 2021இல் 'பாப்பாபட்டி' கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றது ஏன்?
- எழுதியவர், ஏ. ஆர். மெய்யம்மை
- பதவி, பிபிசி தமிழுக்காக
(ஏப்ரல் 24 ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தின் கிராமசபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். கடந்த ஆண்டு (2021) பாப்பாபட்டி கிராமத்தில் கலந்து கொண்ட முதல்வர் இந்த ஆண்டு செங்காடு செல்கிறார்.
கடந்த ஆண்டு பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னணி குறித்து பிபிசி தமிழ் 2021 அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட்ட கட்டுரையை உங்களுக்காக பகிர்கிறோம்)
திமுக முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஒரு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 'தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர்' என்ற பெயர் கிடைத்தது ஒருபுறமிருக்க, அவர் ஏன் பாப்பாபட்டி தேர்ந்தெடுத்தார் என்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் மு. கருணாநிதி தலைமையில் முந்தைய திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, சர்ச்சைக்குரியதாக இருந்த அந்த தனி ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலை முறைப்படி நடத்தப்பட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவரானார்.
அதுநாள் வரை ஆதிக்க சாதியினரை அதிகம் கொண்டிருக்கும் தனி ஊராட்சிகளான பாப்பாபட்டி, அருகே உள்ள கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டக்காட்சியேந்தல் ஆகிய நான்கிலும் உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்துவது மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
அந்த காலகட்டங்களில், இந்த ஊராட்சிகளில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்படுவதாக 'தி இந்து' நாளிதழில் தமது கட்டுரைகள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்திய மூத்த பத்திரிக்கையாளர் இளங்கோவன் ராஜசேகரன், சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.
"1996 முதல் 2006 வரையிலான 10 ஆண்டுகளில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்டும், ஆதிக்க சாதியினரின் அழுத்தம் காரணமாக இந்த ஊராட்சிகளுக்கு 19 முறையாக தேர்தல் நடத்த இயலவில்லை. இது செய்தியாக்கப்பட்டு அரசின் பார்வைக்கு சென்றவுடன், போலி வேட்பாளர்களை தங்கள் சார்பாக களமிறக்கி கடைசி நாளில் வேட்புமனுவை திரும்பப் பெற வைத்து தேர்தல் நடக்காமல் பார்த்து கொண்டனர் ஆதிக்க சாதியினர். மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதரவுடன் போட்டியிட்ட பட்டியல் இன வேட்பாளரை தங்கள் சார்பாக நிறுத்தப்பட்ட `டம்மி' வேட்பாளர் மூலம் தோற்கடித்து அவரையும் ராஜிநாமா செய்ய வைத்தனர்," என்றார் அவர்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு, இந்த பிரச்னையை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அந்த காலகட்டத்தில் குடியரசு தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன், "ஒரு தேசத்திற்கு குடியரசு தலைவராக முடிகிறது, ஆனால் பட்டியல் இனத்தவர் ஒரு ஊராட்சிக்கு தலைவராக முடியவில்லை," என்று பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகள் பற்றி தமது குடியரசு தின உரையில் குறிப்பிட்டதாக கூறுகிறார் இளங்கோவன்.
2006-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்த இயலாததை கருத்தில் கொண்டு, பட்டியல் இனத்தவரை கிராம மக்கள் தலைவராக தேர்ந்தெடுத்து சமத்துவத்தை பேணும் வண்ணம் ஊராட்சிகள் (இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை இட ஒதுக்கீடு) விதிகள், 1995-ல் திருத்தம் மேற்கொண்டு சுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டை இந்த நான்கு ஊராட்சிகளுக்கு மட்டும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினின் துணையுடன், மதுரை ஆட்சியராக இருந்த உதயச்சந்திரன் (இன்று முதலமைச்சரின் தனி செயலாளராக இருப்பவர்) இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
"காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பாப்பாபட்டிக்கு சென்றது தன் தந்தையின் வழியில் அவர் சமத்துவ சமூக நீதி அரசியலை முன்னெடுத்து செல்வதை காட்டுகிறது" என்கிறார் இளங்கோவன்.
கிராம சபை கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின் தனது உரையில், கிராமங்களிலிருந்து தான் ஜனநாயகம் வளர்ந்தது என்றும் சமத்துவமே வளர்ச்சிக்கு அடிப்படை என்பதால் தான் பாப்பாபட்டிக்கு வருகை தந்திருப்பதாகவும் கூறினார்.
2006இல் தேர்தலை நடத்தியதும் பாப்பாபட்டிக்கு திமுக அரசு ரூ. 80 லட்சம் வளர்ச்சி நிதியாக அளித்தது, கட்சி அளவில் ரூ.20 லட்சம் அளிக்கப்பட்டது என்பதையும் தமது உரையில் நினைவுகூர்ந்த ஸ்டாலின், ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பட்டியல் இனத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்