You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லக்கிம்பூர் வன்முறை - இதுவரை நடந்தது என்ன? நமக்கு என்ன தெரியும்?
- எழுதியவர், ஆனந்த் ஜனானே
- பதவி, லக்கிம்பூரில் இருந்து, பிபிசி இந்திக்காக
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் கார் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ. 45 லட்சம் இழப்பீடும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
கார் மோதிய சம்பவத்தில் விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பங்களை சந்திக்க பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் ஹர்கான் என்ற இடத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை வழிமறுத்து காவலில் எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, தன்னை காவலில் எடுக்க வாரன்ட் உள்ளதா என்று பிரியங்கா கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அவரை காவலில் எடுப்பதாகக் கூறிய காவல்துறையினர் சீதாபூர் அரசு விருந்தினர் மாளிகையில் அவரை தடுத்து வைத்துள்ளனர்.
அங்கு பெருமளவில் விவசாயிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் திரளும்படி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பிரியங்கா காந்திக்கு ஆதரவாக அவர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் அரசு விருந்தினர் மாளிகையில் தூய்மைப்படுத்தப்படாத அறையை துடைப்பத்தால் பிரியங்கா சுத்தப்படுத்தும் காட்சியையும் ஸ்ரீனிவாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, இன்று காலை லக்கிம்பூர் நோக்கிச் சென்ற தன்னை காவல்துறையினர் இழுத்துத் தள்ளுவது போல செய்ததாகவும், தன்னை அவமானப்படுத்தியதாகவும் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
"என்னை காவலில் எடுக்கப்போவதாக கூறிய காவல்துறையினர் கைது வாரன்ட் எதையும் என்னிடம் காண்பிக்கவில்லை. என்னிடம் எந்தவொரு ஆவணமும் காண்பிக்கப்படாவிட்டால் என்னை கடத்த முயல்கிறார்கள் என குற்றம்சாட்டுவேன்," என்று அவர் தெரிவித்தார். "பிரிவு 151 இன் கீழ் அவர்கள் 24 மணி நேரத்தில் நான் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை காவல்துறையினர் என்னிடம் தெரிவிக்காவிட்டால், என்னால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியும். ஆனால், வழக்கறிஞர்களை அணுகக் கூட என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், அந்த உரிமை எனக்கு உண்டு என்று காவல்துறையினரிடம் நான் தெரிவித்துள்ளேன்," என்றார் பிரியங்கா காந்தி.
இதேபோல, லக்கிம்பூருக்கு புறப்பட தயாரான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் காவல்துறையினர் அவரது வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரிடம் காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 75 கிமீ தொலைவில் நேபாளத்தின் எல்லையில் உள்ள திகோனியா கிராமத்தில் இதுவரை எட்டு பேர் வன்முறை மற்றும் தீக்குளிப்பில் இறந்துள்ளனர். இவர்களில் நான்கு விவசாயிகள். மற்ற நான்கு பேரில், இரண்டு பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் ஓட்டுநர்கள். இவர்களைத் தவிர, 12 முதல் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இறந்த விவசாயிகள் தல்ஜித் சிங் (35), குர்வேந்திர சிங் (18), லவ்ப்ரீத் சிங் (20) மற்றும் நக்ஷத்ரா சிங் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திகோனியாவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சாதனா நியூஸ் சேனலின் உள்ளூர் நிருபர் ரத்தன் காஷ்யப்பும் செய்தி சேகரிப்பின்போது போது இறந்துவிட்டார். கார் பலமாக மோதியதால் அவர் சாலை ஓரத்தில் உள்ள தண்ணீரில் விழுந்தார்.
திகோனியாயில் வன்முறை எப்படி ஏற்பட்டது?
அக்டோபர் 3ஆம் தேதி, உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, முன் திட்டமிட்டபடி லக்கிம்பூர் கேரிக்கு வருகை தந்தார், அங்கு அவர் மாவட்டத்தின் வந்தன் தோட்டத்தில் அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக அவர் இந்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வரவிருந்தார், ஆனால் சனிக்கிழமை காலையில் திடீரென அவர் லக்கிம்பூர் சாலை வழியாக நிகழ்வுப்பகுதியை சென்றடைந்தார்.
இந்த நிலையில், யுனைடெட் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு, மாநில துணை முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வாகன தொகுப்புக்கு முன்பாக போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது, லக்கிம்பூர் மற்றும் உத்தரபிரதேசத்தின் தெராய் பகுதியில் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்க அழைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் அஜய் மிஸ்ரா ஆகியோர் லக்கிம்பூர் மாவட்ட தலைமையகத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேபாள எல்லையில் உள்ள தேனி என்ற பன்வீர்பூர் கிராமத்திற்கு புறப்பட்டனர்.
அக்டோபர் 2ஆம் தேதி திகோனியாவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அஜய் மிஸ்ரா மத்திய இணை அமைச்சரானதை கெளரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அந்த நிகழ்ச்சியில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா முக்கிய விருந்தினராக இருந்தார்.
ஆனால் உள்ளூர் விவசாயிகள் அமைச்சர் அஜய் மிஸ்ராவை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் அஜய் மிஸ்ரா, லக்கிம்பூர், சம்பூர்நகரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில், மேடையில் இருந்து விவசாயிகளை மிரட்டும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனால் அவருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல், நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிகுனியாவின் மகாராஜா அக்ரஸேன் இன்டர் கல்லூரி பகுதியை அடைந்தனர். அங்கு கட்டப்பட்டிருந்த ஹெலிபேட்டை விவசாயிகள் சுற்றி வளைத்தனர். அவர்கள் "பாரத் மாதா கி ஜெய்" என்ற முழக்கங்களை எழுப்பியவாறு கறுப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால், அமைச்சர் சாலை வழியாக கிராமத்தை அடைகிறார் என்ற செய்தி பரவியதும், விவசாயிகள் திகோனியாவில் இருந்து பன்வீர்பூர் செல்லும் சாலையில் அமர்ந்து வழியைத் தடுத்தனர்.
இதேவேளை மூன்று வாகனங்கள் கொண்ட ஒரு சிறிய தொகுப்பு சுமார் ஒன்றரை முதல் இரண்டரை மணி நேரம் வரை திக்குனியாவை அடைந்தது.
அஜய் மிஸ்ரா தேனி மற்றும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோரின் கூற்றுப்படி, துணை முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தொகுப்பு, பன்வீர்பூர் கிராமத்திற்கு வருவதற்காக அருகில் உள்ள ரயில்வே கேட்டில் இருந்து புறப்பட்டது. பின்னர் இந்த மூன்று வாகனங்களும் திகோனியாவை அடைந்தன.
அங்கு விவசாயிகள் துணை முதல்வரின் அதிகாரபூர்வ வாகனத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
அப்போது வாகனங்கள் விவசாயிகளின் கூட்டம் மீது மோதும் வகையில் வேகமாகச் சென்றன. இதில் நான்கு விவசாயிகள் நசுங்கி இறந்தனர் மற்றும் ஒரு டஜன் மக்கள் காயமடைந்தனர் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பான காணொளிகளில், ஒன்று அல்லது இரண்டு விவசாயிகளின் உடல்கள் சாலை ஓரத்தில் இருந்ததை பார்க்க முடிந்தது. அந்த நேரத்தில் அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவும் காரில் இருந்ததாக விவசாயத் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிந்தர் சிங் சித்து மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர், "பிற்பகல் 2.30 மணியளவில் அஜய் மிஸ்ராவின் மகன் சில குண்டர்கள் மற்றும் அங்கு சுற்றித்திரியும் விவசாயிகளுடன் வந்தார். இது மிகவும் சோகமான சம்பவம். எங்கள் நான்கு விவசாய சகோதரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். வாக்களித்த விவசாயிகளின் செயல்திறனை மிதிக்கும் கலாசாரம் இங்கே நடக்கிறது. இவர்களுக்கு அதிகார போதை ஏற்பட்டு விட்டது. அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பதிலளிக்க ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மக்கள் வெளியே வருவார்கள்," என்று கூறினர்.
ஆனால், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை முன்வைப்பதாக தெரிவித்தார்.
விவசாயிகளின் வன்முறை எதிர்வினை வைரல் காணொளியில் பதிவாகியுள்ளது. அந்த காணொளியில் கோபமடைந்த ஒரு கும்பல், ஜீப்பில் தடி வீசியதுடன், காரில் இருந்து கீழே விழுந்த இருவரையும் தடியால் தாக்குவது போல காட்சிகள் உள்ளன.
வன்முறை கும்பல் காரை கவிழ்த்து சாலை ஓரத்தில் தள்ளியது. இந்த வன்முறை மற்றும் தாக்குதலுக்குப் பிந்தைய காட்சிகள் புகைப்படம் எடுக்கப்பட்டன. அதில் இரண்டு சடலங்கள் சாலையின் ஓரத்தில் கிடந்தன. அவற்றின் அருகே விவசாயிகள் நின்றிருந்தனர்.
அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தனது தரப்பு வாதமாக, "எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர், எங்கள் கார் விவசாயிகள் மீது மோதியதாக அவர்கள் சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் இதுபோன்ற வழியில் எங்களை எதிர்பார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், றுருப்பு கொடிகள் காட்டப்படும் என்பதை உணர்ந்தேன்."
இந்த நிலையில், தான் சர்ச்சைக்குரிய வகையில் முன்பு எதுவும் பேசவில்லை என்று கூறியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா.
"விவசாயிகளுக்கு எதிராக நான் எதுவும் சொல்லவில்லை, பதுக்கலில் ஈடுபடுவோருக்கு எதிராக மட்டுமே பேசினேன். இந்த நாட்டில் அமைதியின்மையை உருவாக்க விரும்பும் சிலர் அதில் விவசாயிகளை தொடர்புபடுத்த முயல்கின்றனர்," என்று அவர் குற்றம்சாட்டினார்.
லக்கிம்பூர் சம்பவத்தில் இறந்தவர்கள் யார், யார்?
1. தல்ஜீத் சிங்25 வயதான இவர் பஹ்ரைச் மாவட்டத்தின் நன்பாரா பகுதியில் வசிப்பவர். கான்வாய் வாகனத்தால் அவர் முதலில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.2. குர்விந்தர் சிங்18 வயதான இவர் பஹ்ரைச்சின் நன்பாரா பகுதியில் வசிப்பவர். இவர் போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்து கூட்டத்திற்கு தண்ணீர் மற்றும் உணவை விநியோகிக்கும் பணியை மேற்கொண்டார். தல்ஜீத்தைப் போலவே, இவர் மீதும் வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.3. நச்சதர் சிங்52 வயதான இவர் லக்கிம்பூரில் வசிப்பவர். இவர் மீது வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இவரது இளைய மகன் சஷஸ்திர சீமா பால் எனப்படும் எல்லை ஆயுதப்படையில் ஜவான் ஆக இருக்கிறார். 4. லவ்ப்ரீத் சிங்18 வயது கல்லூரி மாணவர். இவர் மீது வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.5. ஷ்யாம் சுந்தர்லக்கிம்பூரில் உள்ள லயன் காலனைச் சேர்ந்தவர். 35 வயது. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து, பண்ணையில் இருந்த போராட்டக்காரர்கள் தாக்கிய பிறகு இறந்ததாக கூறப்படுகிறது.6. சுபம் மிஸ்ரா30 வயதான இவர் லக்கிம்பூர் கேரி நகரில் உள்ள சிவபுரி பகுதியில் வசிப்பவர். இவர் ஒரு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து சில போராட்டக்காரர்கள் தாக்கிய பிறகு இறந்ததாக கூறப்படுகிறது.7. ஹரி ஓம் மிஸ்ரா35 வயதான இவர் லக்கிம்பூரில் உள்ள பர்சேரா குர்த் கிராமத்தில் வசிப்பவர். அஜய் குமார் மிஸ்ராவின் ஓட்டுநர் ஆக அறியப்படுகிறார். இவரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து சில போராட்டக்காரர்கள் தாக்கிய பிறகு இறந்ததாக கூறப்படுகிறது.8. ராமன் காஷ்யப்28 வயதான இவர் லக்கிம்பூரில் வசிப்பவர். உள்ளூர் செய்தியாளர். இவர் பல ஊடக நிறுவனங்களுக்கு பங்களிப்பை வழங்கி வந்தார். சம்பவம் பகுதியில் கான்வாய் வாகனம் மோதியதன் விளைவாலோ அல்லது போராட்டக்காரர்களாலோ தாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், காரணம் உறுதியாகவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்