தமிழக கோயில்களில் பழைய அர்ச்சகர்கள் விரட்டப்பட்டனரா? உண்மை என்ன? #FACTCHECK

தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், MK STALIN

தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பல கோயில்களில் ஏற்கெனவே பணியாற்றிய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை பொய்த் தகவல்கள் என்கிறது மாநில அரசு.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்களுக்கு பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 24 பேர் உட்பட 58 பேரை கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நியமித்தது தமிழ்நாடு அரசு.

இவர்களில் 24 பேர், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறை நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று, பணி வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள். இவர்களில் ஐந்து பேர் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

 ஆகஸ்ட் 14ம் தேதி பணி ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் சுதந்திர தினத்தன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோயில்களில் பணியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், பல்வேறு கோயில்களில் புதிதாகச் சேர்ந்த அர்ச்சகர்கள் முன்பு பணியாற்றிவந்த பிராமண அர்ச்சகர்களை துரத்தியதாகவும் அவர்கள் கண்ணீருடன் கதறியபடி வெளியேறியதாகவும் ட்விட்டரில் பலர் பதிவிட்டனர்.

அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் போன்றோர், "பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர்களை கோயில்களைவிட்டு வெளியேற்றியது தவறு," என கூறினர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக நீதிமன்றத்திற்குச் செல்லப்போவதாக பதிவிட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ஆனால், அர்ச்சகர்கள் கண்ணீருடன் நிற்கும் படங்கள் வேறு தருணங்களில், வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட படங்கள் என பலர் சுட்டிக்காட்டினர்.

புதிதாக வந்த அர்ச்சகர்களால், பழைய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்ட பலரும், இந்த சம்பவம் நாகநாதசுவாமி கோயிலில்நடந்ததாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சில ஊடகங்கள் செய்திகளையும் வெளியிட்டன.

தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், SEKAR BABU

படக்குறிப்பு, அமைச்சர் சேகர் பாபு (இரண்டாவது)

இந்த நிலையில், இன்று காலையில் சட்டப்பேரவை அலுவல் தொடங்குவதற்கு முன்பாக கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட விளக்கமளித்தார்.

"இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் உத்தரவிட்டார். அதற்குப் பிறகு, 216 காலிப் பணியிடங்களுக்கான பணி ஆணை கடந்த 14ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில் 58 பேர் திருக்கோயில்களில் அர்ச்சகர் நிலை 2ல் காலியாக இருந்த பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். ஆனால், ஒரு சிலர் விஷமத்தனமான செய்திகளோடு, யாரும் உயர்நிலைக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தோடு பிரசாரங்களை செய்துகொண்டிருக்கிறார்கள்," என்று குறிப்பிட்டார் சேகர் பாபு.

அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் கூட 70, 72 வயது ஆன பிறகும் அர்ச்சகர்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர்களும் பெரிய கோயில்களின் துணைக் கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் சேகர் பாபு கூறினார்.

தமிழக அரசு

இந்து சமய அறநிலையைத் துறையைப் பொறுத்தவரை, பட்டாச்சார்யார்களையோ, அர்ச்சகர்களையோ திருக்கோயில்களில் இருந்து வெளியேற்றும் எண்ணம் இல்லை என்றும் ஒரு சில ஊடகங்களும் ஒரு சில ஃபேஸ்புக் பதிவர்களும் இந்த அரசை ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான அரசைப் போல சித்தரிக்க நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அரசியல் களத்தில் இந்துத்துவாவைக் கையில் எடுத்தவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது என்ற காரணத்தினால், இந்த அர்ச்சகர் நியமன பிரச்சனையைக் கையில் எடுத்திருப்பதாகக் கூறிய சேகர் பாபு, ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரு பெரிய மௌனப் புரட்சியை மு.க. ஸ்டாலின் செய்திருப்பதாகக் கூறினார்.

58 அர்ச்சகர்கள் புதிதாக நியமிக்கப்பட்டதால் எங்காவது யாராவது பணிவாய்ப்பு இழந்திருந்தால் அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்றும் கடந்த பத்தாண்டுகளில் அர்ச்சகர் பணியிடங்களிலோ, கோயில்களில் உள்ள நிரந்தரப் பணியிடங்களிலோ யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும் சேகர் பாபு சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்குப் போடப் போவதாகக் கூறியிருப்பது குறித்துக் கேட்டபோது, "1954ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தில் 1971ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. பணியாளர் வயது உச்சவரம்பு 60ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே சட்டம் எங்கேயுமே மீறப்படவில்லை" என்று தெரிவித்தார்.

நாகநாத சுவாமி கோயிலில்என்ன நடந்தது?

தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், NAGANATHASWAMY TEMPLE

நாகநாத சுவாமி கோயிலில்தான் அர்ச்சகர் ஒருவர் வெளியேற்றப்பட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்தருந்தனர். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து சேகர் பாபு விளக்கமளித்தார்.

நாகநாத சுவாமி கோயிலில்ஒரு அர்ச்சகர் பணியிடம் காலியாக இருந்தது. முத்துக்குமார் ஏன்பவர் இந்தக் கோயிலில்தற்காலிகப் பணியில் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதிதான் இதற்கான ஆணை அவருக்கு வழங்கப்பட்டது. இந்தக் கோயில் தவிர, தாருகாவனேஸ்வரர் கோவிலிலும் அவர் தற்காலிக அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நாகநாத சுவாமி கோயிலில் ஏற்பட்டிருந்த காலிப் பணியிடத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி புதிதாக அர்ச்சகர் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகரும் பிராமணர்தான்.

"தற்காலிகப் பணியாளராக இரண்டு கோயில்களில் பணிபுரியும் ஒருவர் தானே இரண்டு கோயில்களையும் பார்த்துக் கொள்வேன் என்று கூறுவது எந்த வகையில் சரி?" என கேள்வி எழுப்பினார் சேகர் பாபு.

புதிய அரசு பதவியேற்ற பிறகு, 627 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் 187 ஏக்கர் நிலங்களும் மீட்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், பரம்பரை அறங்காவலர்கள் என்ற பெயரில் 25 ஆண்டுகளாக பணியாற்றுபவர்கள் குடமுழுக்குகூட செய்யவில்லையென்றும் அவர்கள் தற்போது சட்டரீதியாக வெளியேற்றப்பட்டு, இந்து சமய அறநிலையைத் துறையின் இணை ஆணையர்களே அந்தப் பொறுப்பை ஏற்று நடத்தி வருவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், SOCIAL MEDIA

இந்த விவகாரம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இது குறித்து அவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "பெரியார் அவர்களுடைய நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக மு. கருணாநதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். 

 ஆனால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. 

அப்படி எங்கேயாவது வழங்கப் பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொன்னார்களானால் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும். அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ சிலர் திட்டமிட்டு இதைச் செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :