திருச்செங்கோடு தேவாலய இடத்தில் `திடீர் பிள்ளையார்' சிலை - அர்த்தநாரீஸ்வரருக்கு சொந்தமான இடம் என்கிறது பாஜக

திருச்செங்கோடு தேவாலயத்தில் பிள்ளையார் சிலை
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருச்செங்கோட்டில் கிறிஸ்துவ தேவாலயம் செயல்பட்டு வந்த இடத்தில் திடீரென பிள்ளையார் சிலை வைக்கப்பட்ட சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிரடிப்படை குவிப்பு, ஆர்.டி.ஓ விசாரணை, பிள்ளையார் சிலை அகற்றம், கைது என அந்த பகுதியே பதற்றத்துடன் காணப்பட்டது. என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கிரி வல பாதையில் கடந்த 30 ஆண்டுகளாக `இமானுவேல் ஜெப வீடு' என்ற பெயரில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதை சபையின் போதகராக இருக்கும் எசேக்கியேல் பாலகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் கிரி வல பாதையை விரிவாக்கம் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தேவாலயத்தின் ஒரு பகுதியை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, தேவாலயத்தின் மேற்கூரையை சபை ஊழியர்கள் அப்புறப்படுத்தி விட்டனர்.

`திடீர்' பிள்ளையார் சிலை

நெடுஞ்சாலைத்துறையின் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்ததால், தேவாலயம் கட்டும் பணிகளை சபை நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று தேவாலய இடத்தில் திடீரென பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு இந்துத்துவ அமைப்பினர் பூஜைகளை செய்யும் பணிகளைத் தொடங்கியதால் தேவாலய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன்பிறகு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார் ஜோஸ்வா ஸ்டீபன். இவர் அகில இந்திய கிறிஸ்துவர்கள் வாலிப முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருக்கிறார்.

"30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு யாரும் குடியிருக்கவில்லை. அப்போது கட்டப்பட்ட தேவாலயத்தின் அருகிலேயே இன்னொரு ஆலயத்தையும் எசேக்கியேல் பாலகிருஷ்ணன் கட்டினார். அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு உள்பட இதர ஆராதனைகள் நடந்து வந்தன. இதற்கிடையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் கூரையை பிரித்துக் கொடுத்தோம். அதே இடத்தில் மீண்டும் ஆலயத்தைக் கட்டிக் கொள்ளவும் அதிகாரிகள் அனுமதியளித்திருந்தனர்."

திருச்செங்கோடு தேவாலயத்தில் பிள்ளையார் சிலை

காவல்துறை அலட்சியம் காட்டியதா?

"சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்ததும், நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென பிள்ளையார் சிலையை சிலர் கொண்டு வந்து வைத்தனர். அந்த இடத்தில் ஓலைக் கீற்று அமைத்து கூடாரம் ஒன்றையும் அமைத்தனர்.

இதனைக் கவனித்த சபை போதகர், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரை வாங்கிக் கொண்ட காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பேரில் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஒரு கட்டத்தில், `நிலைமை விபரீதமாகலாம்' என்பதை அறிந்த பிறகு சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போதும், `இது அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று சொல்கிறார்கள், நீங்கள் யாரும் தொல்லை செய்யக் கூடாது' என சபை ஊழியர்களை போலீசார் எச்சரித்தனர். நேரம் கூடிக் கொண்டே போனதால், பிள்ளையார் சிலையை வைத்தவர்கள் பக்கம் ஆட்கள் கூடி விட்டனர்," என்றார் ஜோஷ்வா.

தொடர்ந்து பேசுகையில், ``காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்ததால், செய்தியாளர்களை வரவழைத்தோம். அவர்களிடம், `இது எங்களுக்குச் சொந்தமான இடம், அவர்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பார்க்கிறார்கள். அங்குள்ள பிள்ளையாரை அகற்றி விட்டு, இடத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் தர்ணா நடத்துவோம் என்றோம்."

"அதன்பிறகு ஆர்.டி.ஓ இளவரசி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து போலீசாரும் குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று (4.8.21) அதிகாலை மூன்று மணியளவில் பிள்ளையார் சிலையை அகற்றிவிட்டனர். அந்த இடத்தில் பிள்ளையார் சிலையை வைத்தவர்களையும் கைது செய்துள்ளனர்" என்றார் ஜோஷ்வா.

திருச்செங்கோடு தேவாலயத்தில் பிள்ளையார் சிலை

அதேநேரம், பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெண் திடீரென சாமியாடிவிட்டு அருள் வாக்கு கூற ஆரம்பித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதிகாலையில் பிள்ளையார் சிலையை அகற்றியபோது, இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அந்த இடத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

அர்த்தநாரீஸ்வரருக்கு சொந்தமான இடமா?

``பிள்ளையார் சிலை இருந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா?" என நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர் ரஜினிகாந்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``500 ஆண்டுகளாக அந்த இடத்தில் பிள்ளையார் கோயில் இருந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளன. எங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இது தொடர்பாக பேசுவார்கள். எங்களால் வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியாது," என்றார்.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சத்தியமூர்த்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அங்குள்ள வேப்பமரத்தடியில் பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக பிள்ளையார் சிலையை அகற்றிவிட்டனர். நெடுஞ்சாலைத்துறையின் விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு அந்தப் பகுதியில் உள்ள 40 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் நேற்று காலை 10 மணியளவில் மீண்டும் பிள்ளையார் சிலையை வைத்தனர். அங்கிருந்து 100 அடி தூரத்தில் சர்ச் இருக்கிறது. பிள்ளையார் சிலை வைத்ததைப் பார்த்த சர்ச் ஆட்கள், காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, ஆர்.டி.ஓ, தாசில்தார் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த தகவலைக் கேள்விப்பட்டு இந்து பக்தர்கள் ஒன்று திரண்டனர். இரவு 1 மணிக்கு மேல் சமுதாயத் தலைவர்களை வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது எங்கள் தரப்பில் பேசியவர்கள், `இது கோயிலுக்குச் சொந்தமான இடம். அர்த்தநாரீஸ்வரருக்குச் சொந்தமான 377 ஏக்கர் நிலத்துக்கு உட்பட்ட பகுதியில்தான் இருக்கிறது, அதற்கான ஆதாரம் இருக்கிறது' என தெரிவித்தனர்.

திருச்செங்கோடு தேவாலயத்தில் பிள்ளையார் சிலை

ஆனால், தாசில்தாரும் ஆர்.டி.ஓவும், `இது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடம்' என்றனர். ஆனால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், `இது கோயிலுக்குச் சொந்தமான இடம்' என்றனர். இதனால் நேரம் கூடிக் கொண்டே போனதால், நள்ளிரவில் போலீஸார் கயிறு கட்டி வளையம் ஒன்றை அமைத்தனர். பின்னர், எங்கள் தரப்பைச் சேர்ந்த 27 பேரை அடித்து உதைத்து கூட்டிச் சென்றனர். அதில், 3 பேரை ரிமாண்ட் செய்துவிட்டனர். தேவாலய ஆள்களின் அழுத்தத்தால் எங்களைக் கைது செய்து விட்டனர்," என்கிறார்.

போராட்ட அறிவிப்பு

பிள்ளையார் சிலை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ இளவரசியிடம் பேசுவதற்காக பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். ``முக்கியமான ஆய்வுக் கூட்டத்தில் இருப்பதால் பிறகு உங்களிடம் பேசுவார்," என வருவாய் ஆய்வாளர் சரவண மூர்த்தி பதில் அளித்தார்.

`பிள்ளையார் சிலை விவகாரத்தில் போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நாளை காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,' என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், `நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும்' என கிறிஸ்துவ அமைப்புகள் கோரியுள்ளன. இரு தரப்பினருக்கான மோதலாக இந்த விவகாரம் உருவெடுத்திருப்பதால் அந்த பகுதி பதற்றம் நிறைந்து காணப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :