You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? - 10 ஆண்டுகளாக பெட்டிகளுக்குள் முடங்கிய 'கலைஞர்' டிவி' தொலைக்காட்சிகள்
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் அதிகமான இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் சமுதாய நலக்கூத்தில் முடங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக அதிமுக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்த தொலைக்காட்சிகளை என்ன செய்ய உத்தேசித்துள்ளது?
தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போது, திமுக ஆட்சி வந்ததும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அதன் தலைவராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. கலைஞர் டிவி என்ற பெயருடன் அந்த தொலைக்காட்சிகள் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருந்தது எனலாம்.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதி பொதுமக்களுக்காக சுமார் 6,000 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள், அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
2011ஆம் ஆண்டிலும் தொடர்ந்த விநியோகம், அப்போது அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை தேர்தல் தேதி காரணமாக தடைபட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஆயிரக்கணக்கில் இருந்த டிவிக்களை விநியோகிக்கக் கூடாது என்று கூறிய அதிகாரிகள் அவற்றை உள்ளூர் சமுதாய நல கூட அறைகளில் வைத்துப் பூட்டினர்.
அப்போது நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த திமுக பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத பொருளாக சீலிடப்பட்ட பெட்டிக்குள்ளேயே கலைஞர் தொலைக்காட்சிகள் முடங்கின. அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால், அறைக்குள் முடங்கியுள்ள டிவி பெட்டிகளை பயனர்களுக்கு வழங்க உள்ளூர் மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து குண்டு சாலை பகுதியில் வசிக்கும் இளைஞர் ராம்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது எங்கள் பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் திறக்கப்பட்டது. பின்னர் அந்த சமுதாய நலக்கூடத்தில் 2006ம் சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை கடலூர் நகராட்சியினர் கொண்டு வந்து இறக்கினர். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சமுதாய நலக்கூடத்தில் அவற்றை வைக்க வேண்டாம் என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாக அவற்றை விநியோகம் செய்யுமாறும் வலியுறுத்தினோம். ஆனால், டோக்கன் முறையில் சுமார் 1,500 பேருக்கு மட்டுமே தொலைக்காட்சிகள் விநியோகம் செய்யப்பட்டன. அந்த நேரத்தில்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதியும் வெளியானது. இதனால் டிவிக்களை விநியோகம் செய்யும் பணியில் தடங்கல் ஏற்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமான தொலைக்காட்சி பெட்டிகள் மீண்டும் சமுதாய நலக்கூட அறையிலேயே பூட்டி கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது," என்றார்.
"அதிமுக ஆட்சியில் பலமுறை இந்த டிவிக்களை பொதுமக்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்களுக்காக திறக்கப்பட்ட சமுதாயத்தை திறக்கக் கோரி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினோம். அப்போதைய அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் பல முறை மனுக்களை வழங்கினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்றார் ராம்குமார்.
தொலைக்காட்சி பெட்டிகள் ஒருபுறம் பயன்படுத்தப்படாமல் வீணாகும் ஆபத்தில் இருக்க, மூடப்பட்ட சமுதாய நலக்கூடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாததால் அதுவும் பலவீனமடையும் நிலைக்கு போகலாம் என்று உள்ளூர் மக்கள் கவலை கொண்டனர். இதற்கிடையே, ஆள் நடமாட்டம் குறைந்து விட்ட அந்த கூடத்தின் வளாகத்தில் சில சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்த தொலைக்காட்சிகளின் எதிர்காலம் குறித்து கடலூர் எம்எல்ஏ ஐயப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"தற்போதுதான் இந்த விவகாரம் எங்களுடைய கவனத்துக்கு வந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் இலவச தொலைக்காட்சி பெட்டிகளை பயனர்களுக்கு வழங்க முயல்கிரோம். சட்ட விதிகளின்படி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, ஆட்சியாளர் அறிவுறுத்தல்களின்படி எங்கெல்லாம் தொலைக்காட்சியின் தேவை இருக்கிறதோ அப்பகுதிகளில் வழங்கிட போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்," என்று கூறினார்.
சமுதாய நலக்கூடத்தை மறுசீரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இந்த விவகாரம் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பிபிசி தமிழிடம் கூறியது:
"தற்சமயம் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் காவல் துறையினரால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒருசில தினங்களில் அங்கிருந்து தொலைக்காட்சி பெட்டிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படும். மற்ற பகுதியில் பாதுகாக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளையும் கணக்கீடு செய்வோம். பின்னர் அந்த தொலைக்காட்சிகள் அனைத்தும் இயங்குகிறதா என்பதை பரிசோதனை செய்து விட்டு, சரியாக இயங்கக்கூடிய தொலைக்காட்சிகளை பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி நிலையங்கள் மற்றும் ஒருசில அரசு அலுவலகங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம்," என்றார் கி. பாலசுப்ரமணியம்.
மேலும் அவர், "இயங்காத தொலைக்காட்சிகளைப் பழுது நீக்கி, சமூக அடிப்படையிலான பொது அமைப்புகளிடம் வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். 2017ம் ஆண்டே இந்த தொலைக்காட்சி பெட்டிகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நினைவூட்டியதை அடுத்து டிவிக்களை அரசு பள்ளிகளுக்கு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத சமுதாய நல கூடத்தை மறுசீரமைப்பு செய்து அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டிற்கு விரைவில் கொண்டு வருவோம்," என்றும் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- 'ஜெயலலிதா தேர்தலில் தோற்றிருந்தால் 300 பேர் தற்கொலை செய்திருப்பார்கள்' - அன்வர் ராஜா
- சீனாவின் ரகசிய அணு ஆயுத தளங்கள் பற்றி அமெரிக்கா கவலை - முழு விவரம்
- கொரோனா சிகிச்சைக்கு காசில்லாமல் தவிக்கும் இந்தியர்கள்: 'வறுமையில் வீழ்ந்த 23 கோடி பேர்'
- தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஆஸ்கர் ஃபிகாரோ
- தீ விபத்தால் கடலில் கசிந்த ரசாயனம்: தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா?
- சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்?
- ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: கோடிகளில் வாழ்க்கை, அதிரவைக்கும் சர்வதேச தொடர்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்