You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மு.க. ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு வழங்கிய 'மதுரை' புத்தகம் சொல்வது என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவருக்கு மதுரை குறித்த 'Multiple Facets of My Madurai' என்ற புத்தகத்தை பரிசளித்திருக்கிறார். மனோகர் தேவதாஸின் இந்தப் புத்தகம் எதைப் பற்றியது?
சென்னை மாகாண சட்டப்பேரவையின் 100 ஆண்டு விழாவிற்கும் சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் படத் திறப்பு விழாவிற்கும் மதுரையில் கலைஞர் கருணாநிதி நூலக துவக்க விழாவிற்கும் அழைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது அவருக்கு மனோகர் தேவதாஸ் எழுதிய 'Multiple Facets of My Madurai' என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.
குடியரசு தலைவருக்கு பரிசளிக்கும் அளவுக்கு மதுரை குறித்து இந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது?
2007ல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், மதுரை குறித்த சித்திரங்களையும் அதற்குப் பொருத்தமான வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்டது. புத்தகத்தில் உள்ள சித்திரங்களை வரைந்ததோடு, பொருத்தமான வரலாற்றுக் குறிப்புகளையும் எழுதியவர் மனோகர் தேவதாஸ்.
மதுரை மீதும் கோட்டுச் சித்திரங்கள் மீதும் ஆர்வமுடைய பெரும்பாலானவர்களுக்கு பரிச்சயமான ஒரு பெயர் மனோகர் தேவதாஸ். மதுரை வடக்கு மாசி வீதியில் பிறந்து வளர்ந்த மனோகர் தேவதாஸ், வேதியியலில் பட்டப்படிப்பை முடித்தவர்.
சிறு வயதிலிருந்தே கோட்டுச் சித்திரங்களில் ஆர்வம் காட்டிய மனோகர் தேவதாஸ், தொடர்ந்து மதுரையையும் வேறு சில நகரங்களையும் வரைந்துவந்தார். ஒரு கட்டத்தில் ரெட்டினிடிஸ் பிக்மென்டோஸா பிரச்னை காரணமாக கண் பார்வை குறைந்த பிறகும் வரைவதை நிறுத்தவில்லை.
மனோகர் தேவதாஸ் தனது சிறு வயது மதுரை வாழ்க்கை குறித்து எழுதிய 'Green Well Years' புத்தகத்தில் இவற்றில் பல சித்திரங்கள் இடம்பெற்றிருந்தன. இது தவிர்த்தும் பல மதுரை தொடர்பான சித்திரங்கள் மனோகர் தேவதாஸிடம் இருந்தன.
மதுரை குறித்த இந்தச் சித்திரங்களையும் இதற்குப் பொருத்தமான குறிப்புகளையும் தொகுத்து நூலாக வெளியிடலாம் என தி ஹிந்து என். ராம், மனோகர் தேவதாஸிடம் கூற, அதன்படி இந்தப் புத்தகம் உருவானது.
20ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் மதுரை நகரம் எப்படியிருந்தது என்பது குறித்த ஒரு பார்வையை சித்திரங்களாகவும் குறிப்புகளாகவும் இந்தப் புத்தகம் தருகிறது.
மதுரை யானை மலை, கோரிப்பாளையம் தர்கா, வடக்கு மாசி வீதியில் மனோகர் தேவதாஸ் வாழ்ந்த வீடு, பேச்சியம்மன் படித்துறை, மதுரையின் ஸ்பென்ஸர் அன் கோ, அவர் படித்த சேதுபதி உயர்நிலைப் பள்ளி, வைகை நதி, மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை வீதிகள், மதுரை ரயில் நிலையம், ரீகல் டாக்கீஸ், தெப்பக்குளம், அமெரிக்கன் கல்லூரி ஆகிய இடங்கள், சித்திரைத் திருவிழா காட்சிகள் ஆகியவற்றை சித்திரங்களாகவும் அதற்கான வரலாற்றுக் குறிப்புகளோடும் இந்தப் புத்தகம் தருகிறது.
தவிர, இதில் உள்ள பல சித்திரங்கள் எப்படி, ஏன் வரையப்பட்டன என்ற குறிப்புகளையும் தந்திருக்கிறார் மனோகர் தேவதாஸ்.
இப்போது தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இந்தப் புத்தகத்தைத் கொடுத்திருக்கிறார் என்றாலும், இந்தப் புத்தகத்திற்கும் இந்தியாவின் மற்றொரு குடியரசு தலைவருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர், டாக்டர் ஏ.பி.ஜே, அப்துல் கலாம்.
செப்டம்பர் 2006ஆம் ஆண்டு மெட்ராஸ் செனட் ஹவுஸில் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தங்கியிருந்தபோது அவரைச் சந்தித்தார் மனோகர் தேவதாஸ், அப்போது மனோகரின் சித்திரங்கள் குறித்து பாராட்டிப் பேசினார் கலாம்.
'Multiple Facets of My Madurai' புத்தகம் குறித்து கலாம் பின்வருமாறு குறிப்பிட்டார், "மதுரையின் கலாசாரம், வரலாறு, கட்டடக்கலை சார்ந்த உள்ளார்ந்த பார்வையை இந்தப் புத்தகம் தருகிறது".
இந்தப் புத்தகம் 2007ல் வெளியானது. மதுரைக்கு வெளியில் வசிக்கும் ஒருவருக்கு, மதுரையைச் சிறந்த முறையில் அறிமுகப்படுத்தும் புத்தகம் இது.
இதுபோலவே, இதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தபோது ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய 'Journey Of A Civilization: Indus To Vaigai' புத்தகத்தை பரிசளித்தார்.
பிற செய்திகள்:
- பாலியல் வல்லுறவு: ஓர் எழுத்து மாறியதால் தண்டனையில் இருந்து ஒருவர் தப்பித்த விநோதம்
- மூன்றாம் அலையை தடுப்பது எப்படி? தமிழ்நாடு அரசு திட்டமிடும் வழிமுறைகள் என்னென்ன?
- கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் - ஐ.சி.எம்.ஆர்
- ஹவானா சிண்ட்ரோம்: அமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் நோய்
- 36,000 கி.மீ வரை விண்வெளியை கண்காணிக்கும் ரேடார் - அமெரிக்கா முயல்வது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்