You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
DARC Radar: 36,000 கிலோமீட்டர் விண்வெளியை கண்காணிக்கும் சக்தி வாய்ந்த ரேடார்? - அமெரிக்கா முயற்சி
- எழுதியவர், ஜோனதன் பியேல்
- பதவி, பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி செய்திகள்
தொலைதூர விண்வெளியில் இருக்கும் பொருட்களைக் கண்காணிக்க பிரிட்டனில் ஒரு பெரிய புதிய ரேடார் அமைப்பை நிறுவ அமெரிக்கா விரும்புகிறது.
ஏராளமான ராணுவ செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைதூர விண்வெளியில், 36,000 கி.மீ தூரம் வரையில் இருக்கும் சாத்தியமான "இலக்குகளை" அடையாளம் காண அமெரிக்க விண்வெளி படை, உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது.
டெக்சாஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இத்தகைய தளங்களை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது.
புதிய ரேடார் திறன், விண்வெளியை "ஆபத்துகள் அற்றதாகவும், பாதுகாப்பானதாகவும், " மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் நெரிசல், போட்டி மற்றும் ஆயுதக்குவிப்பு பற்றிய வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இம்முயற்சி நடக்கிறது.
ரஷ்யாவும் சீனாவும் செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தப்பயன்படும் ஆயுதங்களை உருவாக்கி வருவதாக, அமெரிக்காவும், பிரிட்டனும் குற்றம் சாட்டியுள்ளன.
கடந்த ஆண்டு மட்டும் 10 அமெரிக்க ராணுவ செயற்கைக்கோள்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட புதிய செயற்கைக்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டன.
தொலைதூர விண்வெளி மேம்பட்ட ரேடார் திறன் (Deep Space Advanced Radar Capability) உருவாக்கும் திட்டம், அமெரிக்க விண்வெளி மற்றும் ஏவுகணை மையத்தால் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வாரம் கலிஃபோர்னியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் மற்றும் பிரிட்டன் ராணுவத் தளபதிகளும் பார்வையிட்ட தளங்களில் இதுவும் ஒன்றாகும். இலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸுடனும்' அவர்கள் கலந்துரையாடினர்.
ரேடார்களை "ஸ்காட்லாந்தில் அல்லது இன்னும் தெற்கே" வைப்பது குறித்து அமெரிக்கா பிரிட்டன் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்க விண்வெளிப் படையின் லெப்டினென்ட் கர்னல் ஜாக் வாக்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த தளம் "கண்காணிப்பதற்காக 10 முதல் 15 பரவளைய (parabolic) ஆண்டெனாக்களையும், (பெரிய செயற்கைக்கோள் டிஷ்கள்) மற்றும் தகவல் அனுப்ப (transmit) 4 முதல் 6 ஆண்டெனாக்களையும் கொண்டிருக்கும். தளம் சுமார் 1 சதுர கிலோமிட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் என கூறியுள்ளார்.
ஒவ்வொரு ரேடார் டிஷ்ஷின் விட்டமும் 15 மீட்டர் இருக்கும்.
"எங்கள் உயர் மதிப்புடைய சொத்துகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய இலக்குகளைக் கண்டறிந்து கண்காணிப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்," என ஜாக் வாக்கர் தெரிவித்தார்.
"இந்த அச்சுறுத்தல்கள் சீனர்களிடமிருந்து இருக்கலாம், ரஷ்யர்களிடமிருந்து இருக்கலாம், எங்கள் செயற்கைக்கோள்களுக்கு எதிரான பொருட்களாக இருக்கலாம் அல்லது விண்வெளியின் குப்பைகளாக இருக்கலாம்" என்று அவர் கூறினார்.
விண்வெளியின் இருண்ட மூலைகள்
விண்வெளியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிய அமெரிக்கா ஏற்கனவே ஓர் ஆரம்ப எச்சரிக்கை முறையை இயக்கி வருகிறது, வட யார்க்க்ஷயரில் உள்ள ராயல் ஏர்ஃபோர்ஸ் ஃபிலிங்டேல்ஸில் இருப்பவையும் இதில்அடங்கும்.
ஆனால் ரகசியமான பிரிட்டன் விமானப்படை தளத்திலுள்ள ரேடார் அமைப்புகள் 20,000 கி.மீ (12,400 மைல்) தொலைவில் உள்ள பொருட்களை மட்டுமே கண்டறிய முடியும்.
புதிய DARC அமைப்பால் இன்னும் தொலைதூரம்வரை பார்க்க முடியும்.
36,000 கி.மீ (22,400 மைல்) தொலைவில் ,ஒரு கால்பந்தின் அளவில் இருக்கும் பொருளைக்கூட இதன்மூலம் கண்டறிய முடியும் என கர்னல் வாக்கர் கூறுகிறார்.
"விண்வெளியின் இருண்ட மூலைகளில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் இப்போது பிரிட்டன் கவனம் செலுத்துகிறது" என்று பிரிட்டன் விமானப்படைத் தலைவர் சர் மைக்கேல் விக்ஸ்டன் தனது அமெரிக்கப் பயணத்தின்போது தெரிவித்தார்.
"விண்வெளியில் அதிகரித்து வரும் நெரிசல் மற்றும் போட்டியானது, என்ன நடக்கிறது என்பது பற்றி நாம் விரைவாக புரிந்துகொள்வதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது," என்றார் அவர்
அடுத்த போர், விண்வெளியில் வெல்லக்கூடியது அல்லது இழக்கக்கூடியது என்று சர் மைக்கேல் கணித்துள்ளார்.
அரசு, இலையுதிர்காலத்தில் ஒரு விண்வெளி செயல் உத்தியை வெளியிடும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் குறிப்பிட்டார்.
விண்வெளி, அச்சுறுத்தலின் கீழ் உள்ளதாகவும், பிரிட்டன் தனது முக்கிய தேசிய உள்கட்டமைப்பை பாதுகாக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
"விண்வெளியில் மூன்ரேக்கர் மற்றும் ஸ்டார் வார்ஸ் ஒளிக்கதிர்கள்" இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்றார் வாலஸ்.
பிரிட்டனின் ராணுவக் கோட்பாடு "விண்வெளியை அழிப்பதைப் பற்றியது அல்ல, அதை பாதுகாப்பது பற்றியதாகும்" என்று அவர் மேலும் கூறினார்.
"இந்த புதிய ரேடார் திறன் விண்வெளியை ஆபத்து அற்றதாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. இது பொருட்களை கண்டுபிடித்து கண்காணிப்பதன் மூலம் நமது செயற்கைக்கோள் அமைப்பைப் பாதுகாக்க உதவுகிறது," என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
"DARC தொடர்பாக அமெரிக்காவுடன் சாத்தியமான கூட்டாளித்துவத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- இந்திய - இலங்கை கிரிக்கெட்: ஷிகர் தவான் தலைமையில் இந்தியா - 10 சுவாரசிய தகவல்கள்
- ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னரின் குடும்பம் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்த வரலாறு
- 'பாகிஸ்தானில் இருந்து 10 ஆயிரம் ஜிகாதிகள் நுழைந்துவிட்டனர்' - ஆப்கானிஸ்தான் அதிபர் புகார்
- பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஆஃப்கன் தூதர் மகள்: 'கடும் சித்திரவதை' - என்ன ஆனது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்