You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய - இலங்கை கிரிக்கெட்: ஷிகர் தவான் தலைமையில் இந்தியா - 10 சுவாரசிய தகவல்கள்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று மதியம் 3 மணிக்கு பகலிரவு போட்டியாக தொடங்கவுள்ளது.
இந்த தொடரில் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ளார்.
இந்தப் போட்டி தொடர்பான 10 முக்கிய அம்சங்கள்:
- கொரோனா தொற்று பரவல் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் போட்டிகள் ஆரம்பிக்கப்படாது, பிந்திய தேதியிலேயே போட்டிகளை ஆரம்பிக்க இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில், முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.
- இந்த போட்டியில் இலங்கையை அணித் தலைவராக செயற்படவிருந்த குசல் ஜனித் பெரேரா உடல் நலம் பாதிக்கப்பட்டதால், 29 வயது தசுன் ஷானக்கவிற்கு அணித் தலைமை வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை கிரிக்கெட் ஒரு நாள் போட்டிகளுக்கான 25வது அணித் தலைவர் என்பதுடன், கடந்த 4 ஆண்டுகளில் இலங்கை அணியின் 10வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் அணித் தலைவராகவும் விளையாடவுள்ளார்.
3. கொரோனா பரவல் தொடங்கிய பிறகு இலங்கை மற்றும் இந்திய அணிகள் முதல் தடவையாக இந்த முறை மோதவுள்ளன.
4. இவ்விரு அணிகளும் இந்த தொடர் இடம்பெறும் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் 33 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அவற்றில் இரு அணிகளும் தலா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
5. இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் 2017ம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
6. இந்திய அணித் தலைவராக பங்கேற்கும் ஷிக்கர் தவானுக்கு இன்றைய போட்டி ஒரு சாதனையை நிலைநாட்டும் போட்டியாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஷிகர் தவான் ஒரு நாள் போட்டிகளில் 6000 ரன்களை பூர்த்தி செய்வதற்கு இன்னும் 23 ரன்களே தேவை உள்ள நிலையில், இன்றைய போட்டியில் அவர் அந்த இலக்கை அடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7. இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி கடந்த பல தொடர்களில் தொடர்ச்சியாக தோல்வியை எதிர்நோக்கி வரும் நிலையில், இந்திய அணியுடனான இந்த தொடர், மிக முக்கியமானது. கடைசியாக நடைபெற்ற 10 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
8. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை இதுவரை 159 தடவைகள் விளையாடியுள்ள நிலையில், இன்றைய போட்டி 160வது போட்டியாக அமையும். இதுவரையிலான போட்டிகளில் 91 போட்டிகளிலும் இலங்கை 56 போட்டிகளிலும் வென்றுள்ளன. 11 போட்டிகள் பாதியில் முடிந்தன; ஒரு போட்டி 'டை' ஆனது.
9. இந்திய - இலங்கை அணிகளில் பெரும்பாலும் புதிய வீரர்களே விளையாடுகிற நிலையில், இந்திய அணியில் விளையாடும் பல புதிய வீரர்கள், ஐ.பி.எல் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர்களாவர்.
10. ஆர் பிரேமதாச மைதானத்தில் 2019ம் ஆண்டே இறுதியாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்