நரேந்திர மோதி அமைச்சரவையில் உள்ள நிஷித் ப்ரமாணிக் வங்கதேச நாட்டவரா?

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

நிஷித் ப்ரமாணிக் நாடு இந்தியாவா வங்கதேசமா?

இந்திய உள்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்துமாறு பிரதமா் நரேந்திர மோதிக்கு மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா கடிதம் எழுதியுள்ளார் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவல்களின்படி, அந்நாட்டின் காய்பாந்தா மாவட்டம் ஹரிநாத்பூரில் அவர் பிறந்துள்ளார். கணினி பாடம் படிக்க மேற்கு வங்கம் வந்துள்ளார். அந்தப் பாடத்தில் பட்டம் பெற்ற பின், திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

அதன் பின்னா் பாஜகவில் இணைந்த அவர், மேற்கு வங்க மாநிலம் கூச்பிஹார் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். தோ்தல் ஆவணங்களில் தனது முகவரியை சூழ்ச்சி செய்து கூச்பிஹார் என குறிப்பிட்டுள்ளாா்.

இந்திய இணையமைச்சராக நிஷித் ப்ரமாணிக் நியமிக்கப்பட்டதற்கு வங்கதேசத்தில் உள்ள அவரின் சகோதரர் உள்பட அவரின் பூர்விக கிராமத்தைச் சேர்ந்த சிலர் மகிழ்ச்சி தெரிவித்த காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல்கள் உண்மையானால், இது மிகவும் தீவிரமான விவகாரமாகும். ஏனெனில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விசாரணை நடத்தி ஒட்டுமொத்த சந்தேகத்தையும் தீா்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் ரிபுன் போரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிஷித் ப்ரமாணிக்குக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ''நிஷித் ப்ரமாணிக் இணையமைச்சராக பதவியேற்றதை அவரின் உறவினர்கள் வேறு நாட்டில் இருந்து கொண்டாடினால் அதற்கு அவர் என்ன செய்வார்?'' என்று தெரிவித்தன.

சுகாதார அமைச்சகம் வேதனை

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

நாட்டில் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியிருப்பதாகவும், சில மாவட்டங்கள் அதைவிட அதிக மக்கள் நடமாட்டத்தை கொண்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரிப்பு

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிசைப் பகுதிகளில் முகக்கவசம் அணிந்து கொள்வோர் 41 சதவீதமாகவும், மற்ற பகுதிகளில் 47 சதவீதமாகவும் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என இந்து தமிழ் திசை செய்தி கூறுகிறது.

இம்மாதம் 8 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட்ட 4-ம் கட்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற முதற்கட்ட ஆய்வில் குடிசைப் பகுதிகளில் 28 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 36 சதவீதம் பேரும் முகக்கவசம் அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற 2-ம் கட்ட ஆய்வில் குடிசைப் பகுதிகளில் 29 சதவீதமாகவும், மற்ற பகுதிகளில் 35 சதவீதமாகவும் இது இருந்தது. இந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற 3-ம் கட்ட ஆய்வில் குடிசைப் பகுதிகளில் 21 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 27 சதவீதம் பேரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :