ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னரின் குடும்பம் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்த வரலாறு

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

1916ஆம் ஆண்டில், சைபீரியாவின் பைக்கால் ஏரிக்கு தெற்கே உள்ள இர்குஸ்கில் ஒரு பெரிய விழா நடைபெற்றது, இதன் நோக்கம் முதலாம் உலகப் போரின் கொடூரங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தொலைதூரப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஊக்கமளிப்பதேயாகும். ரஷ்யாவின் ஜார் என்றழைக்கப்படும் அரசர் இரண்டாம் நிக்கோலஸ் இந்த விழாவின் முதன்மை விருந்தினராக இருந்தார்.

ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை சிறையில் துன்புறுத்திய அல்லது நாடுகடத்திய இரண்டாம் நிக்கோலஸ் பிற்காலத்தில் தாமே அங்கு ஒரு கைதியாக செல்வார் என்று யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது.

பிப்ரவரி 1917 இல் ரஷ்ய புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அவரும் அவரது குடும்பமும் முதலில் தபோல்ஸ்-க்கு நாடு கடத்தப்பட்டனர்.

சைபீரியாவில் மிகப்பெரிய சிறை இருந்தது, ஆனால் அவர் பிராந்திய ஆளுநரின் ஆடம்பரமான பங்களாவில் வைக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு அவர் எகடெரின்பர்க்குக்கு மாற்றப்பட்டார். ஜூலை 1918 இல், ரஷ்ய தலைமை அவரையும் அவரது குடும்பத்தையும் அழிக்க முடிவு செய்தது.

நள்ளிரவில் எழுப்பப்பட்ட ராஜ குடும்பம்

யாகோவ் யூரோஸ்கி, கட்சித் தலைமையிலிருந்து 'சிம்னி ஸ்வீப்' என்ற ஒரு சங்கேதக் குறியீட்டிற்காக ஜூலை 16 -17, 1918 இரவு ஒரு மணி வரை காத்திருந்தார்.

இந்தக் குறியீடு இரவில் ஒன்றரை மணிக்கு அவரை அடைந்தது. விரைவில், கொலையாளிகளின் தலைவரான யூரோஸ்கி மாடிப்படிகளில் ஏறி முழு அரச குடும்பத்தையும் எழுப்பினார். அவரது பாக்கெட்டில் ஒரு கோல்ட் பிஸ்டல் மற்றும் ஏழு தோட்டாக்களின் கார்ட்ரிஜ் கிளிப்கள் இருந்தன.

அவர் தமது கோட்டில் ஒரு நீண்ட மரக் கைப்பிடி கொண்ட மற்றொரு மவுசர் கைத்துப்பாக்கியையும் பத்து தோட்டாக்களையும் மறைத்து வைத்திருந்தார். அவர் கதவைத் தட்டியபோது, ​​அரச குடும்ப மருத்துவரான யூஜின் போட்கின் முதலில் கதவைத் திறந்தார்.

யூரோஸ்கி அவர்களிடம், 'நகரத்தில் அமைதியின்மை காரணமாக, அரச குடும்பத்தினர் அனைவரையும் மறைவிடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்,' என்றார்.

78 நாட்களாக ரஷ்ய அரச குடும்பம் வசித்து வந்த ஏகடெரின்பர்க் நகரை நோக்கி ஆயிரக்கணக்கான போல்ஷிவிக் எதிர்ப்பு ராணுவம் அணிவகுத்து வருவதை அவர் அறிந்ததால் போட்கின் உடனடியாக எல்லாவற்றையும் புரிந்து கொண்டார். யூரோஸ்கி, அரச குடும்பத்தினரை விரைவாக ஆடை மாற்றிக்கொண்டு தயாராகும்படியும் கீழே பாதாள அறைக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். போட்கின் அவர்கள் அனைவரையும் எழுப்பச் சென்றார். ஜார் நிக்கோலஸ் தனது மகன் அலெக்சிஸைத் தூக்கிக்கொண்டார்.

அவர்கள் அனைவரும் தயாராக 40 நிமிடங்கள் ஆயின. "ஐம்பது வயதான நிக்கோலஸ் மற்றும் அவரது பதின்மூன்று வயது மகன் அலெக்சிஸ் ஆகியோர் ராணுவ பாணியில் சட்டை, கால்சட்டை மற்றும் பூட்ஸ் அணிந்திருந்தனர்.

46 வயதான முன்னாள் பேரரசி அலெக்ஸாண்ட்ரா மற்றும் நான்கு மகள்கள் ஓல்கா, தாரியானா, மேரி மற்றும் அனஸ்தீசியா ஆகியோரும் தங்கள் ஆடைகளை மாற்றினர். அவர்கள் தொப்பியோ மேலங்கியோ அணியவில்லை.

யூரோஸ்கி முன்னால் சென்று, அவர்களுக்கு வழியைக் காட்டினார். ஜார் நிக்கோலஸ் அவரைப் பின்தொடர்ந்தார். ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த தமது மகன் அலெக்சிஸை தனது கைகளில் சுமந்தார்.

அலெக்சிஸ் சுமார் 40 கிலோ எடையுள்ளவர், ஆனால் நிக்கோலஸ் அவரைத் தடுமாறாமல் சுமந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் கணவனை விட உயரமான ராணி இருந்தாள். அவர்களுக்குப் பின்னால் கைகளில் தலையணைகளை வைத்துக்கொண்டிருந்த இரண்டு மகள்கள் இருந்தனர். பின்புறத்தில் அவரது இளைய மகள் அனஸ்தீசியா தனது செல்லப்பிராணி காக்கர் ஸ்பானியல் நாய் ஜேமியை வைத்திருந்தார்," என்று ராபர்ட் கே. மாஸ்ஸி தனது 'த ரோமானோவ்ஸ் - த ஃபைனல் சேப்டர்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார். அறையில் இருந்த மேஜை நாற்காலிகள் அகற்றப்பட்டன.

அரச குடும்பத்தின் நடவடிக்கையில் எந்த தயக்கமோ சந்தேகமோ இல்லை என்று யூரோஸ்கி குறிப்பிட்டார். யூரோஸ்கி அவர்களைக் கீழே பாதாள அறைக்கு அழைத்து வந்தார். இது 11க்கு 13 அடி அறையாக இருந்தது, அங்கிருந்து அனைத்து தளவாடங்களும் அகற்றப்பட்டன. யூரோஸ்கி அவர்களை இங்கே காத்திருக்கச் சொன்னார்.

ராணி அலெக்ஸாண்ட்ரா வெற்று அறையைப் பார்த்து, "நாற்காலிகள் இல்லையா?" நாம் உட்காரக் கூட முடியாதா? என கேட்டார். ராபர்ட் சர்வீஸ் தனது 'தி லாஸ்ட் ஆஃப் தி ஜார்ஸ் நிக்கோலஸ் 2 அண்ட் த ரஷ்யன் ரிவல்யூஷன்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்,

இதைக் கேட்டபின், யூரோஸ்கி இரண்டு நாற்காலிகள் கொண்டு வர உத்தரவிட்டார். அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு உறுப்பினரிடம் "ராஜாவுக்கு ஒரு நாற்காலி தேவை. அவர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இறக்க விரும்புவதாகத் தெரிகிறது, " என்று கிசுகிசுத்தார்.

இரண்டு நாற்காலிகள் கொண்டு வரப்பட்டன. ஒன்றில் ராணி அலெக்ஸாண்ட்ரா அமர்ந்தார். இரண்டாவது நாற்காலியில், நிக்கோலஸ் தனது மகன் அலெக்சிஸை உட்கார வைத்தார். மகள்கள் தங்கள் தாய் மற்றும் சகோதரரின் முதுகில் ஒவ்வொரு தலையணையை வைத்தார்கள். யூரோஸ்கி அவர்கள் அனைவருக்கும், "நீங்கள் இங்கே நில்லுங்கள், நீங்கள் அங்கே நில்லுங்கள்" என்று அறிவுறுத்தத் தொடங்கினார்.

மாஸ்கோவில் இவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்ற ஐயம் எழுந்திருப்பதால், அவர்களைப் படம் எடுக்க விரும்புவதாகக் கூறினார்.

மரண தண்டனை உத்தரவு வாசிப்பு

இதற்குப் பிறகு, யூரோஸ்கி அவர்களை இரண்டு வரிசைகளில் நிற்கச் செய்தார். நிக்கோலஸ் நடுவில் தனது மகனின் நாற்காலிக்கு அருகில் நின்றார். பின்னர் புகைப்படக்காரருக்கு பதிலாக யூரோஸ்கி ஆயுதமேந்திய தனது 11 தோழர்களை உள்ளே அழைத்தார்.

பின்னர் யூரோஸ்கி, இடது கையில் ஒரு காகிதத்தை பிடித்து, அதைப் படிக்கத் தொடங்கினார். "உங்கள் உறவினர்கள் சோவியத் ரஷ்யாவைத் தொடர்ந்து தாக்கி வருவதால், உங்களைக் கொலை செய்ய யூரால் செயற்குழு முடிவு செய்துள்ளது," என ராபர்ட் கே மாஸ்ஸி எழுதுகிறார்,

நிக்கோலஸ் உடனே தனது குடும்பத்தினரிடம் திரும்பி யூரோஸ்கியின் கண்களைப் பார்த்து 'என்ன? என்ன?' யூரோஸ்கி உடனடியாக முன்பு படித்ததை மீண்டும் படித்தார். உடனடியாகத் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு கோல்ட் கைத்துப்பாக்கியை எடுத்து, நிக்கோலஸை நோக்கி நேராகச் சுட்டார். நிக்கோலஸ் முன்னோக்கித் தலை கவிழ்ந்து விழுந்தார்.

குடும்பம் முழுவதும் சுட்டுக் கொலை

சுடப்பட்டவுடன், உள்ளே நுழைந்த மற்றவர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். அவர் யாரை சுட வேண்டும் என்று அனைவருக்கும் முன்கூட்டியே கூறப்பட்டிருந்தது. அதிக ரத்தம் சிந்தாமல், அதே நேரம் உடனடியாக மரணம் நேரும் வகையில், இதயத்தை நோக்கிச் சுட வேண்டும் என்று அவர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

12 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களில் சிலர் தங்களுக்கு முன்னால் இருந்த நபரின் தோள்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் விளைவாக, பல கொலையாளிகளின் தோள்கள் துப்பாக்கியால் சுடப்பட்டன, மேலும் சிலர் அதிக சத்தம் காரணமாகக் கேட்கும் திறனையும் இழந்தனர்.

முன்னதாக, யூரோஸ்கி ஒரு டிரக்கை உள்ளே அழைத்திருந்தார். துப்பாக்கிச் சத்தங்களின் சத்தம் வெளியில் கேட்காதபடி இஞ்சினை இயக்கத்தில் வைக்குமாறு அதன் ஓட்டுநரிடம் கூறப்பட்டிருந்தது.

பின்னாளில் இந்தப் படுகொலையை விவரித்த யூரோஸ்கி, "ராணியும் அவரது மகளும் சிலுவையின் அடையாளத்தை உருவாக்க முயன்றனர், ஆனால் அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அலெக்ஸாண்ட்ரா தனது நாற்காலியில் அமர்ந்து இறந்தார். ஓல்கா தலையில் குண்டு பாய்ந்து இறந்தார். அலெக்சிஸும் அவரது மூன்று சகோதரிகளும் இறப்பதற்கு சிறிது நேரம் பிடித்தது. புகை மிகவும் அதிகமாக இருந்தது, மக்களின் முகம் தெரியவில்லை, கொலையாளிகளும் இருமிக் கொண்டிருந்தனர்.

அனஸ்தீசியா சுவரை ஆதரமாகக் கொண்டு தலையை மறைக்க முயன்றார், ஆனால் சில நொடிகளில் அவளும் சரிந்தாள். தரையில் படுத்து அலெக்சிஸ் தனது தந்தையின் சட்டையைப் பிடிக்க முயன்றார். பின்னர் ஒரு கொலையாளி அவனது காலணியால் தலையில் உதைத்தான். நான் சென்று அவன் காதில் இரண்டு தோட்டாக்களை என் துப்பாக்கியால் சுட்டேன்.' என்று பதிவு செய்துள்ளார்.

உயிர் பிழைத்த பணிப்பெண் தேமிதோவா துப்பாக்கி முனையால் குத்தப்பட்டார். கடைசியில் ராணியின் பணிப்பெண் தேமிதோவா உயிர் தப்பினார்.

தங்கள் ரிவால்வர்களை மீண்டும் நிரப்புவதற்குப் பதிலாக யூரோஸ்கியின் கூட்டாளிகள் பக்கத்து அறைக்கு ஓடி, அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்தார்கள். பின்னர் இன்னும் இறந்திருக்கவில்லை என்று சந்தேகித்தவர்களின் உடல்களில் துப்பாக்கி முனைக் கத்திகளால் (பெயோனெட்) குத்திக் கொன்றனர்.

தேமிதோவா கடைசி மூச்சு வரை தலையணை உதவியுடன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றார். சில நிமிடங்களில் தலையணை அவள் கையிலிருந்து நழுவியது. அவள் இரு கைகளாலும் பெயோனெட்டிலிருந்து தப்பிக்க முயன்றாள், ஆனால் வெற்றிபெற முடியவில்லை. அவள் இறந்து விழுந்தவுடன், கொலையாளிகள் அவரது உடலில் குறைந்தது முப்பது முறை பெயோனெட்டால் குத்தித் தீர்த்தார்கள்.

'அறை முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது. யூரோஸ்கி தரையில் துடித்துக் கொண்டிருந்த அனைத்து உயிர்களையும் பிரித்தார். உடல்கள் அனைத்தும் நான்கு இளவரசிகளின் படுக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட போர்வைகளில் மூட்டை கட்டப்பட்டு வெளியே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

முதலில் நிக்கோலஸின் உடல் எடுக்கப்பட்டது. லாரிகளில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் தார்ப்பாலினால் மூடப்படன. அப்போது ஒருவரின் பார்வை அனஸ்தீசியாவின் சிறிய நாயின் சடலத்தின் மீது விழுந்தது. அதன் தலை ஒரு துப்பாக்கியின் முனையால் நசுக்கப்பட்டது. அதன் உடலும் லாரியில் வீசப்பட்டது. இந்த அனைத்தும் இருபது நிமிடங்களில் நடந்து முடிந்ததாக யூரோஸ்கி குறிப்பிடுகிறார்.

சடலங்களிலிருந்து கிடைத்த விலையுயர்ந்த கற்கள்

யூரோஸ்கி பாதாள அறையின் தளங்களையும் சுவர்களையும் கழுவுமாறு கட்டளையிட்டார், அவர்கள் அனைவருக்கும் வாளிகள் மற்றும் துடைப்பங்கள் வழங்கப்பட்டன.

வேலை முடிந்தபின், காவலர்கள் போபோவ் மாளிகையில் உள்ள தங்கள் அறைகளில் ஓய்வெடுக்க விரும்பினர், ஆனால் மெட்வெடேவ் அவர்கள் வெளியே சென்றால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கூறி அனுமதி மறுத்துவிட்டார்.

அவர் அவர்களை அங்கேயே ஓய்வெடுக்கக் கட்டாயப்படுத்தினார். இதற்கிடையில், ரோமானோவ் குடும்பத்தின் சடலங்கள் பீட்டர் இர்மகோவின் மேற்பார்வையில் எகடெரின்பர்க் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன்னர், உடல்கள் அடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தை அடையாளம் காண யூரோஸ்கியும் இர்மகோவும் காட்டுக்கு வந்திருந்தனர் என எழுதுகிறார் ராபர்ட் கே மாஸ்ஸி.

'யூரோஸ்கி இறந்த உடல்களை புல் மீது வைக்கச் செய்தார். ஒவ்வொன்றாக அவரது உடைகள் அனைத்தும் கழற்றப்பட்டன. சிறுமிகளின் உடைகள் கழற்றப்பட்டபோது, ​​அவற்றில் ஒரு பையில் கற்கள் தைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

ராணி முத்து மணிகளின் பெல்ட் அணிந்திருந்தார். இந்த வைரங்கள், நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது.

இந்த இறந்த உடல்களை ஆழமான குழியில் வீச யூரோஸ்கி உத்தரவிட்டார். குழியை ஆழப்படுத்த, அவர் சில கைக்குண்டுகளை வீசினார். காலை பத்து மணியளவில் அவரது பணி முடிந்தது. அவர் எகடெரின்பர்க்கிற்குத் திரும்பி, யூரால் பிராந்திய சோவியத்துக்கு தனது பணியின் வெற்றியைத் தெரிவித்தார்.

விசாரணையின் பொறுப்பு

இந்தக் கொலைகளுக்கு எட்டு நாட்களுக்குப் பிறகு, எகடெரின்பர்க், போல்ஷெவிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அரச குடும்பத்தினர் தங்கியிருந்த கட்டடத்தை அவர்கள் அடைந்தபோது, ​​அது காலியாக இருந்தது.

சில டூத் பிரஷ்களும் ஊசிகளும், சீப்புகளும் தரையில் கிடந்தன. வெற்று ஹேங்கர்கள் அலமாரிகளில் தொங்கிக்கொண்டிருந்தன. அலெக்ஸாண்ட்ரா மகாராணியின் பைபிளும் இருந்தது, அதன் பெரும்பாலான பக்கங்கள் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தன.

உலர்ந்த பூக்கள் மற்றும் இலைகள் அதன் பக்கங்களுக்கு இடையில் வைக்கப்பட்டிருந்தன. பல மத புத்தகங்கள், 'வார் அண்ட் பீஸ்' நாவலின் நகல், செக்கோவின் படைப்புகளின் மூன்று தொகுதிகள், பீட்டர் தி கிரேட் வாழ்க்கை வரலாறு மற்றும் 'டேல்ஸ் ஃப்ரம் ஷேக்ஸ்பியரின்' நகல் ஆகியவை அங்கு வைக்கப்பட்டிருந்தன.

பாதாள அறையின் மஞ்சள் படிந்த தரை கழுவப்பட்ட பின்னரும் உலர்ந்த ரத்தத்தின் கறைகள் இருந்தன. தோட்டாக்கள் மற்றும் பெயோனெட்டுகளின் அடையாளங்கள் தரையில் தெளிவாகத் தெரிந்தன.

சுவர்களிலும் குண்டு பட்ட குறிகள் இருந்தன. அரச குடும்பம் நின்ற இடத்தின் பின்னால் இருந்த சுவரில் இருந்து பிளாஸ்டர் உடைந்து கீழே விழுந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 1919 இல், போல்ஷெவிக் அரசாங்கம் இச்சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது, அதன் பொறுப்பு 36 வயதான நிகோலாய் சோலோகோவுக்கு வழங்கப்பட்டது.

பெட்ரோல் மற்றும் சல்ஃப்யூரிக் அமிலம் கொண்டு எரிக்கப்பட்ட சடலங்கள்

'சோலோகோவ் குழியிலிருந்து தண்ணீரை வெளியேற்றிய போது, ​​அங்கே ஜார் மன்னரின் பெல்ட் கொக்கி, ராணி அலெக்ஸாண்ட்ராவின் எரிந்த மரகதச் சிலுவை, நிக்கோலஸ் எப்போதும் தனது மனைவியின் படத்தை வைத்திருந்த ஒரு உலோக பாக்கெட் பெட்டி ஆகியவற்றைக் கண்டார்.

ராணியின் கண்ணாடி உறை, டாக்டர் பாட்கினின் கண்ணாடி மற்றும் அவரது கட்டப்பட்ட பற்களின் மேல் வரிசை ஆகியவை காணப்பட்டன. அமிலம் ஊற்றி எரிக்கப்பட்ட சில எலும்புகள், ரிவால்வர் தோட்டாக்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட மனித விரல் ஆகியவை இருந்தன. அனஸ்தீசியாவின் காக்கர் ஸ்பானியல் நாய் ஜேமியின் உடலையும் கண்டனர்.

ஆனால் இதைத் தவிர எந்த மனித எச்சங்களையும் எலும்புகளையும் அங்கே காணவில்லை. கொலையாளிகள் மற்றும் சாட்சிகளிடம் சோலோகோவ் கேள்விகள் கேட்டபோது, ​​1918 ஜூலை 17 இரவு, இபாதியேவ் மாளிகையில் 11 பேர் கொலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்தது.

மீண்டும் அரச மரியாதையுடன் அடக்கம்

கொலை செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, இந்தச் சடலங்கள் வீசப்பட்ட காட்டில் அந்த இடத்திற்கு இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு சல்பூரிக் அமில பீப்பாய்கள் எடுத்துச் செல்லப்பட்டதும் அறியப்பட்டது. சோகோலோவின் விசாரணையில், கொலை நடந்த மறுநாளே, சடலங்கள் கோடரிகளால் வெட்டப்பட்டு, பெட்ரோல் மற்றும் சல்பூரிக் அமிலத்தால் எரித்துச் சாம்பலாக்கபட்டன என்பதும் தெரியவந்தது.

நிக்கோலஸ் சோகோலோவ் அங்கு கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் ஒரு சிறிய பெட்டியில் வைத்திருந்தார், 1919 கோடையில், கம்யூனிஸ்டுகள் எகடெரின்பர்க்கை மீண்டும் கைப்பற்றியபோது, ​​சோகோலோவ் ஐரோப்பாவிற்கு ஒரு கப்பலில் புறப்பட்டார்.

1924 இல் அவர் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டபோது, ​​11 உடல்களை இப்படி முழுமையாக எரிக்க முடியாது என்று சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். இருப்பினும், சோகோலோவ் சடலம் எதையும் தாம் கண்டறியவில்லை என்ற தனது கூற்றைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில், உலகம் முழுவதும் இதை நம்பியது. மே 1979 இல், கொல்லப்பட்ட அரச குடும்பத்தின் எச்சங்களை மக்கள் கண்டுபிடித்தனர். தடயவியல் மற்றும் டி.என்.ஏ சோதனைகளுக்குப் பிறகு, படுகொலையின் 80 வது ஆண்டில், ஜூலை 17, 1991 அன்று, செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் எல்லா அரச குடும்பத்தினருக்கும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட இடத்தில், முழு அரச மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.

ராமனவ்வின் 30 உறவினர்கள் மற்றும் அதிபர் யெல்ட்ஸின் மற்றும் அவரது மனைவி இச்சடங்கில் பங்கெடுத்தனர். "இது ரஷ்யாவுக்கு ஒரு சரித்திர நாள். பல ஆண்டு காலமாக இந்த கொடூர கொலையைக் குறித்து நாம் அமைதியாக இருந்தோம். இது நம் வரலாற்றில் நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய அத்தியாம் இது. நம் முன்னோர்களின் தவறுக்கும் நாம் மன்னிப்பு கேட்போம்" என்றார் அதிபர் யெல்ட்ஸின்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :