Black Hole of Calcutta: 146 ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவின் நிலவறையில் அடைக்கப்பட்டது உண்மையா?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இங்கிலாந்தில் உள்ள எந்தப் பள்ளிக் குழந்தைக்கும் இந்தியாவைப் பற்றிய மூன்று விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும் என கூறப்படுவதுண்டு. கொல்கத்தா நிலவறை, பிளாசி போர், 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சி ஆகியவையே அவை.

1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு, முகலாய பேரரசு வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கியது, வங்காளம் முறைப்படி முகலாய ஆதிக்கத்தின் கீழிருந்தாலும், ஒரு வகையில் சுதந்திர மாகாணமாகவே இருந்தது.

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் அங்கு தங்கள் தொழிற்சாலைகளை பலப்படுத்தத் தொடங்கியபோது, ​​நவாப் சிராஜ்-உத்-தௌலா பிரிட்டிஷ் மற்ரும் பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவதாக உணர்ந்தார். அவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

சிராஜ்-உத்-தௌலாவிற்கு ஆங்கிலேயர்களின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. எனவே 1756 ஜூன் 16 அன்று கொல்கத்தாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினார்.

ஆங்கிலேயர்களின் தோல்வி நிச்சயம் என்றான பிறகு, ​​ஆளுநர் ஜான் டிரேக் தனது தளபதியுடனும் சபை உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சகிதமாக, ஹூக்லி ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏறித் தப்பித்தார்.

சரணடைந்த ஆங்கிலேயர்கள்

கொல்கத்தாவின் ஆங்கிலேயர் படை, கவுன்சிலின் இளைய உறுப்பினரான ஜொனதன் ஹால்வெல்லின் பொறுப்பில் இருந்தது. அந்த படையினர் ஜூன் 20, 1756 இல், சிராஜ்-உத்-தௌலாவின் வீரர்கள் வில்லியம் கோட்டையின் மதில் சுவரைத் தகர்த்து உள்ளே புகுந்தனர். இதில் மொத்த ஆங்கிலப் படையும் சரணடந்தது.

எஸ்.சி.ஹில் தனது 'பெங்கால் 1857-58' என்ற புத்தகத்தில், 'சிராஜ்-உத்-தௌலா தனது அவையை வில்லியம் கோட்டையின் மையத்தில் அமைத்து, கொல்கத்தாவிற்கு அலிநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதன் பின்னர் அவர் ராஜா மாணிக்சந்தை கோட்டையின் பாதுகாவலராக அறிவித்தார். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அரசு மாளிகையை இடிக்கவும் உத்தரவிட்டார். இந்த கட்டடம் இளவரசர்களுக்கானது என்றும் வணிகர்களுக்கானதல்ல என்றும் கூறி, தனது வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆங்கிலேயே வீரர்கள் துப்பாக்கி சூடு

பின்னர், இது குறித்த விவரங்களை அளிக்கும் ஜே.ஜெட் ஹால்வெல், தனது 'வங்காள மாகாணத்துடன் தொடர்புடைய சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகள்' (INTERESTING HISTORICAL EVENTS RELATED TO PROVINCE OF BENGAL) என்ற கட்டுரையில், 'என் கைகளைக் கட்டி, என்னை நவாபின் முன் நிறுத்தினர்.

நவாப் என் கைகளைக் கட்டவிழ்க்க உத்தரவிட்டார், நான் தவறாக நடத்தப்பட மாட்டேன் என்று எனக்கு உறுதியளித்தார். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் எதிர்ப்பு மற்றும் ஆளுநர் டிரேக்கின் நடத்தை குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ' என்று பதிவு செய்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து சிராஜ்-உத்-தௌலா அங்கிருந்து எழுந்து வெடர்பெர்ன் என்ற ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் ஓய்வெடுக்கச் சென்றார்.

'நவாபின் வீரர்கள் சிலர் ஒரு வகையில் கட்டமைக்கப்பட்ட கொள்ளையைத் தொடங்கினர். அவர்கள் சில ஆங்கிலேயர்களைக் கொள்ளையடித்தார்கள். ஆனால் அத்து மீறவில்லை.

சில போர்த்துகீசியர்களையும் ஆர்மெனியர்களையும் சுதந்திரமாக வெளியில் விட்டதில், அவர்கள் வில்லியம் கோட்டையிலிருந்து வெளியே வந்தார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல, ஹால்வெல் மற்றும் பிற கைதிகளுடன் நவாபின் வீரர்களின் நடத்தை மாறியது.

ஒரு ஆங்கிலேய வீரர், மது போதையில் இருந்தபோது ஒரு துப்பாக்கியை எடுத்து நவாபின் வீரர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றார்,' என்று எஸ் சி ஹில் பதிவிடுகிறார்.

இருண்ட நிலவறையில் அடைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள்

இந்த விவரம் சிராஜ்-உத்-தௌலாவின் கவனத்துக்கு வந்தபோது, முறை தவறி நடந்த ஆங்கிலேய வீரர்கள் எங்கே வைக்கப்படுவது வழக்கம் என்று கேட்டார். இருண்ட நிலவறையில் அடைக்கப்படுவது வழக்கம் என்று கூறப்பட்டது.

ஒரே இரவில் பல கைதிகளை திறந்த வெளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்றும் எனவே அவர்களை இருண்ட நிலவறையில் வைப்பது நல்லது என்றும் அவரது அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தினர். அவ்வாறே செய்யுமாறு சிராஜ்-உத்-தௌலா உத்தரவிட்டார்.

மொத்தம் 146 ஆங்கிலேயர்கள். ஆண், பெண் பேதமின்றி, பட்டம் பதவியையும் பொருட்படுத்தாமல், 18 -க்கு 14 அடி இருட்டறையில் அனைவரும் அடைக்கப்பட்டனர். அந்த அறையில் இரண்டு சிறிய ஜன்னல்கள் மட்டுமே இருந்தன. இது இரண்டு அல்லது மூன்று கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக்கூடிய அளவிலான சிறிய அறை என்பது குறிப்பிடத்தக்கது.

'அநேகமாக ஆண்டின் வெப்பமான புழுக்கமான இரவு இது தான். இந்தக் கைதிகள் அனைவரும் ஜூன் 21 காலை 6 மணி வரை உணவு, தண்ணீர் மற்றும் காற்று இல்லாமல் அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்,' என்று ஹால்வெல் எழுதுகிறார்.

மாலை ஏழு மணி முதல் மறுநாள் காலை ஆறு மணி வரை இந்தக் கொடுமையை ஆங்கிலேயர்கள் அனுபவித்தார்கள்.

'இந்த கைதிகளைக் கண்காணிக்கப் பணியமர்த்தப்பட்ட வீரர்களுக்கு நவாப்பை எழுப்பி இவர்களின் நிலையை விளக்கத் துணிவில்லை. அவரே எழுந்த போது இவர்களின் நிலையைக் கேள்விப்பட்டு, உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். கதவு திறக்கப்பட்டபோது, ​​146 கைதிகளில், 23 கைதிகள் மட்டுமே இறக்கும் நிலையில் உயிருடன் வெளியே வந்தனர்,' என எஸ் சி ஹில் குறிப்பிடுகிறார்.

அருகில் ஒரு குழியைத் தோண்டி இறந்த உடல்களை கும்பலாகப் புதைத்தனர்.

பாதுகாப்பு வீரர்களுக்குக் கையூட்டளிக்க முயற்சி

பாதுகாப்புக்கு வயதான காவலர் ஒருவர் மட்டுமே இவர்களுக்குச் சிறிது கருணை காட்டியதாக ஹால்வெல் குறிப்பிடுகிறார்.

'பாதி பேரை வேறொரு அறைக்கு மாற்றினால், நிலைமை சற்று சீராகும் என்று மிகவும் பணிவாகக் கோரினேன். இந்த தயவுக்கு ஈடாக, காலையில் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று கூறினேன். அவரும் முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்து அப்படிச் செய்ய முடியாது என்று கூறினார். நான் இரண்டாயிரம் ரூபாய் தருவதாகக் கூறினேன். அவர் இரண்டாவது முறையாக எங்கோ சென்றார். திரும்பி வந்து, நவாபின் உத்தரவு இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்றும், நவாபை எழுப்ப யாருக்கும் தைரியம் இல்லை என்றும் கூறினார்.'

மூச்சுத் திணறியதால் மரணம்

இரவு ஒன்பது மணிக்கு அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்குத் தாகமேற்பட்ட போது நிலைமை மோசமடையத் தொடங்கியது.

வயதான பாதுகாப்பு வீரர் அவர்கள் மீது கொஞ்சம் பரிதாபப்பட்டார். அவர் ஒரு குவளையில் சிறிது தண்ணீர் கொண்டு வந்தார். ஜன்னல் கம்பிகள் வழியாகத் தண்ணீரைக் கொடுத்தார்.

'நான் அனுபவித்ததை நான் எப்படிச் சொல்வேன்? ஜன்னலில் நின்று கொண்டிருந்த சிலர், தண்ணீர் குடிக்கும் ஆவலில் அங்கிருந்து ஓடி வந்தனர். வரும் வழியில் பலரை மிதித்துக் கொண்டு வந்தனர். ஒரு துளி நீர் அவர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்குப் பதில் அவர்களுடைய தாகத்தை அதிகரித்தது.

'ஹவா ஹவா' என்று காற்று வேண்டி எழுந்த ஒலி எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. இந்தப் பாதுகாப்பு வீரர்களை நோக்கி அவதூறாக ஏதேனும் சொன்னால் அவர்கள் கோபத்தில் தங்களைச் சுட்டுக் கொன்று விடக்கூடும், இந்தக் கொடுமையில் இருந்து விடுபடலாம் என்று எண்ணி அவதூறு கூறவும் சிலர் தொடங்கினார்கள்.

ஆனால் பதினோரு மணியளவில் அவர்களது சக்தி முழுவதும் தீர்ந்து விட்டது. வெப்பத்தின் காரணமாக அவர்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து உயிர்விடத் தொடங்கினர், ' என எழுதியுள்ளார்.

நினைவுச் சின்னம்

அங்கு இறந்தவர்களின் நினைவாக ஹால்வெல் ஒரு நினைவுச் சின்னத்தையும் அமைத்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு மின்னல் தாக்கி அது பெரும் சேதமடைந்தது. செங்கலால் அமைக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம் 1821 ஆம் ஆண்டில் வில்லியம் கோட்டையின் அப்போதைய கவர்னர் ஜெனரல் பிரான்சிஸ் ஹேஸ்டிங்ஸால் இடிக்கப்பட்டது.

1902 ஆம் ஆண்டில், வைஸ்ராய் லார்ட் கர்சன் இந்த மக்களின் நினைவாக மற்றொரு பளிங்கு நினைவுச்சின்னத்தை இந்த நிலவறையிலிருந்து சற்று தொலைவில், டல்ஹெளசி சதுக்கத்தில் (இன்றைய பினாய், பாதல், தினேஷ் பாக் பகுதி) அமைத்தார்.

மக்களின் கோரிக்கையின் பேரில், 1940 ஆம் ஆண்டில் இது புனித ஜார்ஜ் தேவாலய வளாகத்திற்கு மாற்றப்பட்டது, அது இன்றளவும் உள்ளது. சில வரலாற்றாசிரியர்கள் ஹால்வெல் அளித்த விளக்கம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். 'ஹால்வெல் குறிப்பிட்டுள்ள, இறந்த 123 பேரில், 56 பேரின் ஆவணங்கள் மட்டும் தான் கிடைத்திருக்கின்றன" என்று எஸ் சி ஹில் எழுதுகிறார்.

இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்த்தி கூறப்பட்டதாக குற்றச்சாட்டு

இந்தியாவின் பிரபல வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்கார் தனது விளக்கத்தில் ஹால்வெல் இறப்பு எண்ணிக்கையை மிகைப்படுத்தியதாகக் கூறுகிறார்.

சர்கார் தனது 'வங்காள வரலாறு' என்ற புத்தகத்தில், 'இந்தப் போரில் பல ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டதாகக் கூறபடுவதைப் பார்த்தால், சிராஜ்-உத்-தௌலாவிடம் இத்தனை ஆங்கிலேயர்கள் எப்படிச் சிக்கினார்கள் என்ற கேள்வி எழுகிறது.

பின்னர், ஒரு ஜமீன்தார் போலேநாத் சந்திரா 18 அடிக்கு 15 அடி பரப்பளவில் ஒரு மூங்கில் வட்டத்தை உருவாக்கி மக்களை அங்கு ஒன்று கூட்டினார். அந்த எண்ணிக்கை 146 ஐ விட மிகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

ஹால்வெல் விவரிக்கும் நிலவறையில், இறந்த அனைவரும் ஏற்கனவே சண்டையில் கொல்லப்பட்டவர்கள் அல்லது உயிர் பிழைத்த அல்லது தப்பித்ததற்கான எந்த ஆவணப்பதிவும் கிடைக்காதவர்களின் எண்ணிக்கையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்' என்று குறிப்பிடுகிறார்.

பிரபல வரலாற்றாசிரியர் வில்லியம் டெல்ரிம்பில் சமீபத்தில் வெளியிட்ட தனது புத்தகமான 'த அனார்க்கி' -இல், 'சமீபத்திய ஆராய்ச்சியின் படி, 64 பேர் நிலவறையில் வைக்கப்பட்டனர், அதில் 21 உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இந்த சம்பவம் நடந்து 150 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்திய மக்களின் மிருகத்தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது பிரிட்டிஷ் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. ஆனால் குலாம் உசேன் கான் உள்ளிட்ட அப்போதைய வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்களில் இந்தச் சம்பவம் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.

ஆங்கிலேயர்களின் கோபம்

இந்த சம்பவம் வரலாற்றின் பக்கங்களில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கற்பிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், பிரிட்டனில் தேசியவாதத்தை மேம்படுத்துவது தான். மக்களுக்குத் தேசிய உணர்வை ஊட்டுவதே இதன் நோக்கம்.

1756 அக்டோபர் 7 அன்று, ராபர்ட் கிளைவ் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் மௌப்ட்டுக்கு எழுதிய கடிதத்தில், 'இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட ஒவ்வொரு இதயமும் துக்கம், திகில் மற்றும் அதிருப்தி ஆகியவற்றால் நிரம்பியுள்ளது.

இந்தக் கோபம், குறிப்பாக கல்கத்தாவை நம்மிடமிருந்து பறித்து, நம் நாட்டு மக்களைக் கொன்ற சிராஜ்-உத்-தௌலா மீது தான். மிக எளிதாகக் கல்கத்தா கைப்பற்றப்பட்டதிலும் நாம் அவமானப்படுத்தப்பட்டுள்ளோம்.' என்று குறிப்பிட்டிருந்தார்.

இழந்த பிரிட்டிஷ் மரியாதை திரும்பப் பெறப்பட வேண்டும், இந்த சம்பவத்துக்கு பழிவாங்கப்பட வேண்டும் என்ற உணர்வு பிரிட்டிஷ் வட்டாரங்களில் இருந்தது.

நிக்கோலஸ் டிர்க்ஸ் தனது 'காஸ்ட்ஸ் ஆஃப் மைண்ட் கொலொனியலிசம் அண்ட் மேகிங் ஆஃப் மாடர்ன் இந்தியா' என்ற புத்தகத்தில், 'இந்தச் சம்பவம், கிழக்கிந்திய கம்பெனியின் துணிச்சலான வர்த்தகர்கள் மீது இந்தியர்களின் கொடுங்கோல் செயல் என்ற ரீதியில் சித்தரிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து தான் இச்செய்தி லண்டனைச் சென்றடைந்தது, அதுவும் ஹால்வெல் கப்பல் மூலம் அங்கு வந்த சேர்ந்த பிறகு தான் தெரிந்தது. பின்னர் இந்த சம்பவம் 1757 இல் நவாப் சிராஜ்-உத்-தௌலாவைத் தாக்க ஒரு காரணமாகவும் இது பயன்படுத்தப்பட்டது.' என்று எழுதுகிறார்.

ஹால்வெல்லின் விளக்கம் குறித்த கேள்வி

பின்னர் எச். எச். டோட்வெல் தனது 'கிளைவ் இன் பெங்கால் 1756-60' என்ற புத்தகத்தில், 'இந்த நிகழ்வைப் பற்றி எழுதிய ஹால்வெல், குக் மற்றும் பிறரின் விளக்கங்கள் புனையப்பட்டவை. வில்லியம் கோட்டையின் மீதான தாக்குதலில் இவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.' என்று குறிப்பிட்டார்.

நிக்கோலஸ் டர்க்ஸ், 'இந்த நிலவறை நிகழ்வின் 14 வகைக் கூற்றுகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துக்கும் ஹால்வெல்லின் எழுத்து தான் மூலமாக உள்ளது. 14 வது கூற்று, இச்சம்பவம் நடந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது.' என்று தெரிவிக்கிறார்.

இந்த நிலவறைச் சம்பவம் குறித்துத் தீவிர வரலாற்றாசிரியர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இவர்கள் நிலவறையில் கொல்லப்படவில்லை, ஆனால் போரில் கொல்லப்பட்டனர் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

மற்றொரு வரலாற்றாசிரியர் வின்சென்ட் ஏ ஸ்மித் தனது 'ஆக்ஸ்போர்டு ஹிஸ்டரி ஆஃப் இந்தியா ஃப்ரம் த எர்லியர் டைம்ஸ் டு த எண்ட் ஆஃப் 1911' என்ற நூலில், 'இது உண்மைச் சம்பவம் தான். இது குறித்த விவரிப்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்தக் கொடுமைக்கு நவாப் சிராஜ்-உத்-தௌலா தனிப்பட்ட முறையில் நேரடியாகப் பொறுப்பாக மாட்டார்.

கைதிகளை என்ன செய்வது என்பதை அவர் தனது துணை அதிகாரிகளிடம் விட்டுவிட்டார். இந்தக் கைதிகளை அந்தச் சிறிய அறையில் அடைக்குமாறு தன் வாயால் உத்தரவு பிறப்பிக்கவில்லை.

ஆனால் இந்தக் கொடூரத்திற்காக அவர் தனது துணை அதிகாரிகளை தண்டிக்கவுமில்லை அல்லது அது குறித்து வருத்தம் தெரிவிக்கவும் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று,' என குறிப்பிடுகிறார்.

ஆங்கில ஆட்சியை நியாயப்படுத்தும் முயற்சி

இந்த நிலவறைச் சம்பவம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் விரிவாக்கத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுவது மட்டுமல்லாமல், அதன் அடிப்படையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை நியாயப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதிக்கம் மறைந்தவுடன், இந்தச் சம்பவமும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைந்தது. இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டுக்குள், ராபர்ட் கிளைவ் கொல்கத்தாவை மீண்டும் கைப்பற்றியது மட்டுமல்லாமல், பிளாசி போரில் சிராஜ்-உத்-தௌலாவைத் தோற்கடித்து இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளத்தை அமைத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :