You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
` தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமான 3 விஷயங்கள்’ - பா.ஜ.கவை சீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்ததற்கு கட்சிக்காரர்கள் யாரும் வருத்தப்படவில்லை' என அக்கட்சியின் மூத்த நிர்வாகி பேசியுள்ளது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் 7ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள், பா.ஜ.கவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பேசிய சி.வி.சண்முகம், "பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக இழந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக நல்ல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சென்ற காரணத்தால் நமக்கு நல்ல பெயர் இருந்தது."
"மீண்டும் நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக வாக்களிக்கவும் மக்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், கூட்டணிக் கணக்கு, சிறுபான்மையினர் வாக்கு உள்பட சில காரணங்களால் நாம் தோல்வியை சந்தித்தோம். இந்த நிலை இல்லாமல் இருந்திருந்தால் தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்காது," என்றார்.
இதற்குப் பதில் அளித்த பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், `` தேர்தல் தோல்விக்கு அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள்தான் என எங்கள் கட்சித் தொண்டர்களால் கூட சொல்ல முடியும். சி.வி.சண்முகம் பேசியது, அ.தி.மு.க தலைமையின் முடிவா எனப் பார்க்க வேண்டும். அரசியல் தெரிந்தவர்கள் யாரும் இவ்வாறு குற்றம் சுமத்த மாட்டார்கள்" என்றார்.
இதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 27 ஆம் தேதி நடந்த நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்வர்ராஜா பேசிய பேச்சு புயலைக் கிளப்பியுள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா, ` எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரைச் சொல்லாமல் மறைத்தால் மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள். தேர்தலின்போது பல இடங்களில் அதுதான் நடந்தது. கிராமத்தில் உள்ள மக்கள் அ.தி.மு.கவினரிடம் எதிர்பார்ப்பது, அவர்களின் பெயர்களைச் சொல்கிறார்களா என்பதைத்தான். ஆனாலும், 75 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம்," என்றார்.
"தோல்விக்காக கவலைப்படவில்லை"
"ஜெயலலிதா சிறைக்குச் சென்ற காலத்தில் 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், இப்போது அ.தி.மு.க தோற்றதற்கு யாரும் கவலைப்படவில்லை. இதற்காக யாராவது தற்கொலை செய்து கொண்டார்களா.. இதுவே முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழந்திருந்தால் முன்னூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள்" என்றார்.
``ஏன் இப்படியொரு ஆதங்கம்?" என அ.தி.மு.கவின் சிறுபான்மை அணியின் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான அன்வர்ராஜாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` பரமக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், எம்.ஜி.ஆர் பெயரையும் ஜெயலலிதா பெயரையும் குறிப்பிடவில்லை. `இப்படியிருந்தால் எப்படி?' என சிலர் எழுந்து கேள்வி கேட்டனர். அதைத்தான் நான் கேள்வியாக எழுப்பினேன். தலைமைக் கழகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் முன்னிலையிலேயே இதைப் பற்றிப் பேசியுள்ளேன். தற்போது, `இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம்' எனத் தலைமை கூறியுள்ளது" என்கிறார்.
தோல்விக்கு 3 காரணங்கள்!
``தேர்தலில் தோற்றதற்குக் கட்சிக்காரர்கள் யாரும் கவலைப்படவில்லை எனவும் பேசியுள்ளீர்களே?" என்றோம். `` ஆமாம், நான் பேசினேன். தேர்தல் தோல்வியை வெற்றிகரமான தோல்வியாக கட்சிக்காரர்கள் பேசி வருகிறார்கள்.
1996 மற்றும் 2006ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஜெயலலிதா தோற்றதற்குக் காரணம், அப்போது என்ன முயற்சி செய்தாலும் வெற்றி பெற முடியாத எதிர்ப்பு அலை வீசியது. தற்போது ஆட்சிக்கு எதிராக எந்தவித அலையும் வீசாமல் சாதகமாக இருந்தது.
அப்படிப்பட்ட நேரத்தில் நாமாக தோற்றுவிட்டோம். அதற்கு இதுதான் காரணம் எனக் கூறினேன். ஜெயலலிதாவோடு யாரையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவர் சிறைக்குப் போனபோது 150 பேர் இறந்து போனார்கள். அவர் தோற்றிருந்தாலும் இறப்பதற்கு முயற்சி செய்வார்கள். அவர் ஒரு பெரிய தலைவராக இருந்தார்" என்கிறார்.
``பா.ஜ.கவோடு கூட்டணி வைத்ததால்தான் தோல்வி ஏற்பட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதும் விவாதமானதே?" என்றோம். `` அது உண்மைதான். நான் தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்திலே இதைப் பற்றிக் கூறினேன். தேர்தல் தோல்விக்கு முதல் காரணம் பா.ஜ.க கூட்டணி, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தது இரண்டாவது காரணம், தே.மு.தி.க உள்ளிட்ட சிறிய கட்சிகளை சேர்க்காதது மூன்றாவது காரணம். அதை அவர்கள் முன்னிலையிலேயே பேசினேன்" என்கிறார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்ததா அ.தி.மு.க?
அன்வர் ராஜாவின் குற்றச்சாட்டுகள் குறித்து அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அரசு அங்கீகாரத்துடன் நடத்தி ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். அம்மா நினைவு இல்லத்தையும் உருவாக்கினோம். சட்டசபையில் ஜெயலலிதா படத்தையும் தலைவர்கள் திறந்து வைத்தனர்.
கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை உருவாக்கிவிட்டு, எம்.ஜி.ஆரின் நினைவிடத்தையும் சீரமைத்துள்ளோம். மாநிலத்தின் பல இடங்களில் ஜெயலலிதாவின் சிலையை திறந்தோம். அனைவரும் இணைந்தே இவற்றைச் செய்தோம். அதை அன்வர் ராஜாவும் ஒப்புக் கொண்டுள்ளார். கட்சியின் முன்னோடிகளை முன்னிலைப்படுத்தாமல் எதையும் செய்வது கிடையாது" என்கிறார்.
மேலும், ``அ.தி.மு.கவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் மனஉறுதியோடு பயணிக்கின்றனர். அரசுப் பணியிலும் கட்சிப் பணியிலும் தலைவர்களை முன்னிலைப்படுத்தியே செயல்பட்டு வருகிறோம். இது இன்னமும் கூடுதலாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை அன்வர் ராஜா தெரிவித்துள்ளதாகவே பார்க்கிறேன். அதை அவர் குற்றச்சாட்டாக கூறவில்லை" என்கிறார்.
1,93,000 வாக்குகள்தான் வித்தியாசம்
`` தேர்தல் தோல்விக்காக கட்சிக்காரர்கள் யாரும் கவலைப்படவில்லை என்கிறாரே?" என்றோம். `` அது அவருடைய கருத்துதானே தவிர, ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்து அல்ல. ஆட்சி பறிபோனதற்காக அனைவரும் கவலைப்படுகின்றனர். `நாங்கள் எடப்பாடிக்குத்தான் வாக்களித்தோம்' என மக்கள் பேசி வருகின்றனர்.
மேலும், தற்கொலை முடிவுகளை ஜெயலலிதா ஒருபோதும் அனுமதித்தது கிடையாது. அவ்வாறு சிலர் முடிவுகளை தேடிக் கொண்டதை அவர் கண்டித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமலேயே ஒரு கோடியே 46 லட்சம் வாக்குகளை வாங்கியுள்ளோம். இதன் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கடினப்பட்டு ஏற்படுத்திய செல்வாக்கைக் காப்பாற்றியுள்ளோம்.
இந்தத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆட்சி அமைப்பதற்கு 43 தொகுதிகள் இருந்தால் போதும். தி.நகர் சத்யா தொடங்கி மோகன்தாஸ் பாண்டியன் வரையில் கணக்கிட்டுப் பார்த்தால் 1,93,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளோம். `நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' எனத் தொடர்ந்து தவறான பிரசாரத்தை தி.மு.க முன்னெடுத்தது.
அரசின் நலத்திட்டங்கள் மூலமாக இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைக் காப்பாற்றியதே பெரும் சாதனை. ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தியதால் தான் இது சாத்தியமானது. தற்போது கட்சியின் இரண்டு தலைவர்களும் அவர்களின் பெயரைச் சொல்லித்தான் பணியைத் தொடங்குகிறார்கள்.
இதனை தனது சொந்தக் கருத்தாக அன்வர் ராஜா பேசியுள்ளார். எதையும் எதிர்பார்த்து பேசக் கூடியவர் அவர் அல்ல. யூனியன் சேர்மன் பதவியில் இருந்து அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்துள்ளார். நானே அவருக்குத் தேர்தல் பொறுப்பாளராக இருந்து பணியாற்றியுள்ளேன். மிகப் பெரிய அனுபவசாலி. இதை அவரின் எதிர்பார்ப்பாகக்கூட வைத்துக் கொள்ளலாம். அம்மா என்னும் மந்திரத்தை இன்னும் பலமுறை கூறினால் பலன் கிடைக்கும் என்பதால் அவர் இவ்வாறு பேசுகிறார்" என்கிறார்.
பிற செய்திகள்:
- தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஆஸ்கர் ஃபிகாரோ
- தீ விபத்தால் கடலில் கசிந்த ரசாயனம்: தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா?
- சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்?
- ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: கோடிகளில் வாழ்க்கை, அதிரவைக்கும் சர்வதேச தொடர்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்